நிஸானின் துணை நிறுவனமான டட்சன் கார்கள் தயாரிப்பை நிறுத்துவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து, சென்னை ஒரகடம் ஆலையில் அந்த கார்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. பின்னணி என்ன?
Datsun கார்கள்
ஒரு காலத்தில் புகழ்பெற்றிருந்த டட்சன் பிராண்ட் பெயரில் கார் தயாரிப்பை, நிஸான் நிறுவனம் கடந்த 1986-ம் ஆண்டு நிறுத்தியது. 1931-ல் இந்த பிராண்டின் கீழ் கார் தயாரிப்பு தொடங்கப்பட்டது. குறிப்பாக 1958 முதல் 1981 வரை நிஸான் ஏற்றுமதி செய்த அனைத்து கார்களுமே டட்சன் கார்களாகவே அறியப்பட்டன. இந்தநிலையில், கடந்த 2013-ல் லோ பட்ஜெட் கார்களாக டட்சன் கார்களை இந்தோனேசியா, ரஷ்யா மற்றும் இந்திய சந்தைகளில் நிஸான் சந்தைப்படுத்தியது.
Datsun Go
கடந்த 2014-ல் டட்சன் Go மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார்கள் சென்னை ஒரகடத்தில் உள்ள ரெனால்ட் – நிசான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டன. டட்சன் பிராண்டின் கீழ்,‘Go’, ‘Go+’ மற்றும் ‘Redi-Go’ என மூன்று கார்களை நிஸான் சந்தைப்படுத்தியிருந்தது. இந்த மூன்று கார்களுமே அறிமுகமான புதிதில் ஓரளவுக்கு சேல்ஸ் இருந்தாலும், அதன்பிறகு அந்த கார்களின் விற்பனை டல்லடிக்கத் தொடங்கியது.
எங்கே சறுக்கியது?
விலையை முக்கியமாகக் கருதும் வாடிக்கையாளர்களைப் பரவலாகக் கொண்ட இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கால்பதித்து, வெற்றிகரமாக செயல்படுவது கொஞ்சமல்ல ரொம்பவே சிரமமானது என்பதுதான் நிதர்சனம். விலை குறைவாக இருந்தால் மட்டும் போதாது என்பதை தாமதமாகத்தான் புரிந்துகொண்டது நிஸான். டட்சன் Go மாடல் அறிமுகமாவதற்கு முன்னர் GNCAP கிராஷ் டெஸ்டில் பூஜ்ய மதிப்பெண்களையே பெற்றது. இது பரவலாக மக்களின் கவனத்தையும் பெற்றது. இந்தியாவில் வாடிக்கையாளர்கள் விரும்புவது ‘affordable’ கார்களைத்தானே தவிர, விலை குறைவான கார்களை அல்ல.
நிஸான் நிறுவனம், டட்சன் பிராண்டின் தனித்துவத்தைப் பிரபலப்படுத்துவதை விட்டுவிட்டு, விலை குறைவான கார் என்பதை மையமாக வைத்தே வியாபாரம் செய்ய நினைத்தது. இதுவே, அந்த பிராண்ட் கார்களுக்கு எமனாகவும் மாறியது. கார்களைத் தங்களது ஸ்டேட்டஸ் சிம்பலாகப் பார்க்கும் மக்களிடையே லோ-பட்ஜெட் கார் என்கிற முத்திரை டட்சன் மீது தானாகவே வந்து விழுந்துவிட்டது. இந்தோனேசியா, ரஷ்ய சந்தைகளில் கடந்த 2020-ம் ஆண்டிலேயே டட்சன் கார்களை நிறுத்திய நிஸான், இந்தியாவில் இப்போது நிறுத்தியிருக்கிறது. சென்னை ஒரகடம் தொழிற்சாலையில் கடந்த 20-ம் தேதியோடு டட்சன் கார்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதேநேரம், ஏற்கனவே அந்த கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள் வகையில் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவோம் என்றும் அந்த நிறுவனம் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
Also Read – ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்வது எப்படி… எளிய வழி!
72k7je