பெட்ரோல் விலை இரண்டு நாட்களில் ரு.1.60 உயர்த்தப்பட்டிருக்கிறது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை முதல்முறையாக மார்ச் 22-ல் உயர்த்தப்பட்டிருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கிட்டத்தட்ட நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், இந்தியாவில் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்தநிலையில், அடுத்தடுத்து இரண்டு நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 பைசா வீதம் ரூ.1.60 உயர்த்தப்பட்டிருக்கிறது.
விலை உயர்வு ஏன்?
சர்வதேச சந்தையில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் Brent கச்சா எண்ணெயின் விலை 45% அளவுக்கு விலை அதிகரித்து ஒரு பேரல் விலை 118.5 அமெரிக்க டாலராக இருக்கிறது. இந்தியா, தனது தேவையில் சுமார் 85% அளவுக்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது. இந்தியாவில் இதற்கு முன்னர் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்பட்டபோது இதே பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 81.6 அமெரிக்க டாலர்களாக இருந்தது என்கின்றன இந்திய எண்ணெய் நிறுவனங்கள்.
விலை உயர்வைக் கட்டுப்படுத்த சுங்க வரியை பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.5, டீசலுக்கு ரூ.10 குறைத்து கடந்தாண்டு நவம்பர் 4-ம் தேதி அறிவித்தது மத்திய அரசு. இதையடுத்து, விலை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதேபோல், உ.பி, பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை விலையில் எந்தமாற்றமும் இல்லாமலேயே தொடர்ந்து வந்தது.
எவ்வளவு விலை உயரும்?
பொதுவாக கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பேரல் ஒன்றுக்கு ஒரு டாலர் கூடினால், அதை ஈடுகட்ட இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை 52 பைசா கூட்ட வேண்டும் என்கிறார்கள் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில். இந்தக் கணக்குப்படி பார்த்தால், இந்த காலகட்டத்தில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 37 அமெரிக்க டாலர்கள் உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.19 அளவுக்கு உயர்த்த வேண்டும்.
அதேநேரம், கச்சா எண்ணெய் விலை மற்றும் கச்சா எண்ணெயைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் அளவு ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தைக் கணக்கிட்டால், சுத்திகரிப்பு நிலையங்களால் விலை அதிகரிப்பை ஓரளவுக்குத் தாக்குப்பிடிக்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். அதேபோல், மத்திய அரசும் சுங்க வரியைக் குறைக்கும்பட்சத்தில் விலை ஏற்றத்தைத் தவிர்க்க முடியும் என்கிறார்கள்.
பெட்ரோலியப் பொருட்களுக்கு மத்திய அரசு விதிக்கும் சுங்க வரியின் அளவு கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை விட அதிகமாக இருக்கிறது. அதாவது, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8 மற்றும் டீசலுக்கு ரூ.6 அளவுக்கு சுங்கவரி இப்போது அதிகமாக விதிக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
மொத்த விலை
இந்த விலையேற்றம் ஒருபுறம் என்றால், ‘Bulk Diesel’ எனப்படும் டீசலை மொத்தமாக வாங்குவோருக்கு ஒரு லிட்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டிருக்கிறது. சாதாரண பெட்ரோல் பங்குகளில் விற்கப்படும் டீசல் விலையை விட இது அதிகம். உதாரணமாக, சென்னையில் மார்ச் 19 நிலவரப்படி டீசல் விலை ரூ.91.59. இதுவே மொத்தமாக டீசல் வாங்குவோருக்கான விலை ரூ.114 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது, ரயில்வே, போக்குவரத்துக் கழகங்கள், மால்கள், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் சுமையைக் கொடுக்கும். இந்த சுமையும் ஒரு கட்டத்தில் வாடிக்கையாளர்கள் மீதே ஏற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த விலையேற்றம் வாடிக்கையாளர்களை வேறுவிதமாகப் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. தொழிற்சாலைகள் போன்றவைகள் பயன்படுத்தும் பல்க் டீசல் விலை அதிகம் என்பதால், மொத்தமாக டீசலை வாங்குபவர்கள் ரீடெய்ல் பெட்ரோல் பங்குகளை நாடத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால், அங்கு டீசலுக்கான டிமாண்ட் எகிறத் தொடங்கியிருக்கிறது.
பல்க் டீசல் விலையேற்றத்தால் தமிழகத்தில் இருக்கும் போக்குவரத்துக் கழகங்கள் டீசல் பயன்பாட்டுக்காக ரீடெய்ல் நிறுவனங்களை அணுக முடிவு செய்திருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் 8 போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் 19,270 பேருந்துகளுக்கு தினசரி 16 லட்சம் லிட்டர் அளவுக்கு டீசல் தேவை.
Also Read – புது வீடு வாங்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய 5 முக்கியமான செலவுகள்!