ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில அரசுகளின் ஒப்புதலின்றி மத்திய அரசுப் பணிக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் 1954-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் விதியில் திருத்தம் கொண்டுவரும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. ஐஏஎஸ் விதிகள் என்ன சொல்கின்றன.. மத்திய அரசு பரிந்துரைக்கும் மாற்றம் என்ன.. மாநிலங்கள் அதை எதிர்ப்பதன் பின்னணி என்ன.. விரிவா தெரிஞ்சுக்கலாம் வாங்க.
ஐஏஎஸ் கேடர் விதிகள்
அகில இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் அனைவரும் மத்திய, மாநில அரசுப் பணிகளில் பணியாற்றுவர். இந்த அதிகாரிகள் அனைவரும் மாநிலங்கள் சார்பிலேயே பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். இதனாலேயே ஒரு ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படும்போதோ அல்லது அவர் குறித்த விவரங்களைக் குறிப்பிடும்போதோ அவர் பணிக்கு சேர்ந்த ஆண்டைக் குறிப்பிட்டு மாநில கேடரின் பெயர்களையும் குறிப்பிடுவர்.
மொத்த அதிகாரிகளில் அதிகபட்சமாக 40% பேரை மத்திய அரசு, தனது துறைகளில் பணியமர்த்திக் கொள்ள முடியும். இதற்காகத் தங்களது மாநில கேடர்களில் தேர்வாகி பணியாற்றி வரும் அதிகாரிகள், மத்திய அரசுப் பணிக்குச் செல்லத் தயாராக இருக்கிறார்களா என்பதை அறிந்து அந்தந்த மாநில அரசுகள் ஒரு பட்டியலை மத்திய அரசிடம் அளிக்கும். அந்தப் பட்டியலில் உள்ள அதிகாரிகளை மத்திய அரசு, தங்களது பணிக்குத் தேர்வு செய்து கொள்ளலாம். இதில், சிக்கல் ஏற்படும் நிலையில் மத்திய அரசு எடுக்கும் முடிவை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்கிறது 1954-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஐஏஎஸ் கேடர் விதிகள். பல மாநிலங்களாக, யூனியன் பிரேதசங்களாகப் பிரிந்து கிடக்கும் இந்தியாவை நிர்வகிக்க ஒருங்கிணைந்த ஆட்சிமுறை வேண்டும் என்று வலியுறுத்திய சர்தார் படேல் காலத்தில் கொண்டுவரப்பட்டது இந்த சட்டம்.
மத்திய அரசு பரிந்துரைக்கும் மாற்றம் என்ன?
1954-ம் ஆண்டு ஐஏஎஸ் கேடர் சட்டம் விதி 6-ன் கீழ் ஒரு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி மத்திய அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்றால் மாநில அரசிடம் NOC எனப்படும் ஆட்சேபனை இல்லா சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இந்த விதிகளிலேயே மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. புதிய பரிந்துரையின்படி, அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு மாற்ற மாநில அரசுகளின் ஒப்புதல் தேவையில்லை. இந்த மாற்றம் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்று தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன.
மாநிலங்களின் எதிர்ப்பு
இதுகுறித்து பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில், இந்திய ஆட்சிப் பணி விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தம், கூட்டாட்சி தத்துவத்துக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது என கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன், `தற்போதைய பிரதிநிதித்துவ விதிமுறைகளே மத்திய அரசுக்குப் பெருமளவு சாதகமாக இருக்கும் நிலையில், இதை மேலும் திருத்தி கடுமையாக்குவது கூட்டாட்சித் தத்துவத்தின் வேரையே பலவீனப்படுத்திவிடும். ஐஏஎஸ் விதிமுறையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், மாநில அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் தயக்க மனப்பான்மையையும், அச்ச உணர்வையும் கொண்டுவந்துவிடும். எனவே, இந்தத் திருத்தங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதே கேரள அரசின் நிலைப்பாடு என்று எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு என்ன சொல்கிறது?
மாநில அரசுகள் உரிய எண்ணிக்கையில் அதிகாரிகளை விடுவிக்காததால், மத்திய அரசுப் பணிகளில் அதிகாரிகளை நியமிக்க முடியவில்லை என்பது மத்திய அரசின் வாதம். மத்திய அரசுப் பணியில் இருக்கும் இணை செயலாளர்கள் அளவிலான ஐஏஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 2011-ல் 309 ஆக இருந்த நிலையில், தற்போது 223 ஆகக் குறைந்திருக்கிறது. துணைச் செயலாளர்கள் அளவிலான ஐஏஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 2011-ல் 117 ஆக இருந்த நிலையில், தற்போது 114 ஆகக் குறைந்திருக்கிறது. மத்திய அரசுப் பணிகளில் போதிய அதிகாரிகளை நியமிக்கும் வகையிலேயே இந்தத் திருத்தத்தை முன்மொழிந்திருப்பதாகச் சொல்கிறது மத்திய அரசு.
எதிர்க்கும் மாநிலங்கள்
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களைத் தவிர பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இதுவரை 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கும் நிலையில், இந்தப் பட்டியலில் மேலும் பல மாநிலங்கள் இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது என்ன?
விதிகளில் மாற்றம் செய்வது குறித்து மாநிலங்கள், தங்கள் கருத்துகளை ஜனவரி 25-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தெரிவித்திருக்கிறது. கருத்துத் தெரிவிக்காத நிலையில், இதுகுறித்து மாநிலங்களுக்கு நினைவூட்டல்களை மத்திய அரசு கொடுக்கலாம். அப்போதும், பதில் எதுவும் கிட்டவில்லை என்றால் விதிகளில் மாற்றம் செய்யும் பணிகளை மத்திய அரசு செய்யும். அதேநேரம், பெரும்பான்மையாக எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அதை மத்திய அரசு எப்படிக் கையாளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also Read – Velu Nachiyar: வெள்ளையரை எதிர்த்த முதல் பெண் அரசி வேலு நாச்சியார்!