ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட்ட மழைநீர் வடிவால் பணிகளுக்காக செலவிடப்பட்ட நிலையில், முதல் பருவமழையிலேயே தண்ணீர் தேங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வடகிழக்குப் பருவமழை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக, நவம்பர் 6-ம் தேதி இரவில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெருமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் மட்டும் அன்று ஒருநாள் இரவில் 23 செ.மீ அளவுக்கு மழை பெய்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியிருக்கிறது. நான்காவது நாளாகத் தேங்கியிருக்கும் மழைநீரால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மாநகராட்சியும் பேரிடர் மேலாண்மைத் துறையும் தேங்கியிருக்கும் நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும், காவல், தீயணைப்பு, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சென்னையில் குறிப்பாக தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மழை நீர் வடிகால் பணிகளுக்காக 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டும் தண்ணீர் தேங்கியது சர்ச்சையாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலிம் தெரிவித்திருக்கிறார்.
தண்ணீர் தேங்க என்ன காரணம்?
திறன்மிகு நகரங்கள் திட்டம் எனப்படும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் மட்டும் 2019-2021 என மூன்று ஆண்டுகளில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக மட்டும் மாநகராட்சி சார்பில் ரூ.110 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டிருக்கிறது. அதேபோல், மழைக் காலங்களில் தண்ணீர் வழிந்தோடும் வகையில் மாம்பலம் கால்வாயைத் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி செலவிடப்பட்டது. மழைநீர் வடிகால் பணிகளுக்காகவே 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்ட நிலையில், முதல் பருவமழையிலேயே தண்ணீர் தேங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் பாண்டி பஜார் முதல் பாஷ்யம் சாலை வரையில் ரூ.39.86 கோடி செலவில் நடைபாதை அமைக்கும் பணிகள் 2018-ல் தொடங்கப்பட்டது. இந்தப் பகுதியில் ரூ.19.11 கோடி செலவில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன. ஆனால், நவம்பர் 7 ஒருநாள் பெய்த மழையிலேயே நடைபாதை மூழ்கியது. அத்தோடு, தி.நகரின் முக்கிய பகுதிகளான ஜி.என்.செட்டி சாலை, பாண்டி பஜார் சாலை, வால்மீகி தெரு, பசுல்லா சாலை, ஹபிபுல்லா சாலை, திருமலைப்பிள்ளை சாலை உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. மழை நீர் வடியாததால் தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை, மேற்கு மாம்பலத்தின் துரைசாமி சுரங்கப்பாதையும் மழை நீரில் முழுமையாக மூழ்கின. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருக்கிறது. தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் ஏற்கனவே தேங்கியிருந்த மழை நீர் அகற்றப்பட்டு நவம்பர் 10-ல் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. ஆனால், இரண்டாவது முறையாக முழுமையாக மழை நீரில் மேட்லி சுரங்கப்பாதை மூழ்கியதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.
மாம்பலம் கால்வாய்
`ஸ்மார்ட் சிட்டி’ தி.நகர் காரணமாகக் கருதப்படுவது மாம்பலம் கால்வாயில் கொட்டப்பட்ட கழிவுகள்தான் என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள். தி.நகர், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, சி.ஐ.டி நகர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் வழிந்தோட இருக்கும் ஒரே வழி மாம்பலம் கால்வாய். இந்தக் கால்வாயை சீரமைத்து தூரவாரத்தான் ரூ.80 செலவிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளுக்காகப் பல்வேறு இடங்களில் தோண்டப்பட்ட மண், கட்டடக் கழிவுகள் போன்றவற்றை மாம்பலம் கால்வாயில் கொட்டியதால்தான் இந்த பிரச்னை என்கிறார்கள். வள்ளுவர் கோட்டத்தில் இருந்து மாம்பலம், தி.நகர், சிஐடி நகர் வழியாகப் பயணித்து நந்தனம் ஒய் எம் சி ஏ வழியாக அடையாற்றில் கலக்கிறது. அந்தப் பகுதியில் ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், மாம்பலம் கால்வாயில் 5.8 கி.மீ தூரத்துக்குக் கட்டடக் கழிவுகள் அடைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். ஸ்மார்ட்சிட்டி ஒப்பந்ததார்களே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முந்தைய ஆட்சியில் 6 ஒப்பந்ததார்களிடம் கொடுக்கப்பட்டன. அவர்கள், பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்றும் கட்டடக் கழிவுகளை மாம்பலம் கால்வாயில் ஆங்காங்கே கொட்டிச் சென்றதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மாம்பலம் கால்வாயை அடைத்திருந்த கழிவுகள் அகற்றப்பட்ட நிலையில், மழை நீர் விரைவில் வடிந்துவிடும் என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.
Also Read – Red Alert: நிறங்களை வைத்து வானிலை எச்சரிக்கை விடப்படுவது ஏன்… பொருள் என்ன?