ஜப்பானில் விளைவிக்கப்படும் Miyazaki மாம்பழம் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.2.70 லட்சம் வரை விற்கப்படுகிறது. அந்த மாம்பழம் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
`பழங்களின் ராஜா’ மாம்பழம்
இந்தியாவில் மாம்பழங்கள் மீதான காதல் அலாதியானது. பங்கனப்பள்ளி தொடங்கி அல்போன்சா வரை ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு வகை மாம்பழங்கள் பிரபலமானவை. பழங்களின் ராஜா என்றழைக்கப்படும் மாம்பழங்களில் ரொம்பவே விலை உயர்ந்த மாம்பழம் எது தெரியுமா… ஜப்பானின் மியாசகி நகர்ப்பகுதியில் விளையும் Miyazaki மாம்பழம்தான் உலகின் காஸ்ட்லியான மாம்பழம் என்று கருதப்படுகிறது.
Miyazaki மாம்பழம்
மியாசகி மாம்பழத்தின் உயர்ந்தபட்ச தரமான மாம்பழங்கள் ஜப்பான் மொழியில் ’Taiyo-no-Tomago’ (சூரிய ஒளியின் முட்டைகள்) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான மாம்பழ வகைகள் போல, இவை மஞ்சளாகவோ அல்லது பச்சை நிறமாகவோ இருப்பதில்லை. சிவப்பு நிறமாக இவை இருக்கின்றன. டைனோசர் முட்டையை ஒத்த வடிவத்தில் இவை காணப்படும். பொதுவாக ஒவ்வொரு மாம்பழ வகைக்கும், ஒரு பழத்தின் எடை, அதிலிருக்கும் இனிப்புச் சுவை கணக்கிடப்படுவதுண்டு. அந்த வகையில் நன்கு விளைந்த ஒரு மியாசகி மாம்பழம், 350 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம். அதில் 15% அல்லது அதற்கு மேலாக இனிப்புச் சுவை இருக்கும் என்கிறார்கள்.
இந்த வகை மாம்பழங்கள் ஜப்பானின் மியாசகி நகரில் 1984-ம் ஆண்டு முதல் விளைவிக்கப்படுகின்றன. அது விளையும் பகுதியைக் கொண்டு இதற்குப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த மாம்பழங்கள் விளைய நல்ல சூரிய ஒளியும் அதேநேரம், நல்ல மழைப்பொழிவும் கொண்ட காலநிலை அவசியம். ஒவ்வொரு மாம்பழத்தின் மீதும் சரியான அளவு சூரிய ஒளி படும் வகையில் வலை போன்ற ஒருவகையான பாதுகாப்புக் கவசம் அணிவிக்கப்படுகிறது. ஆண்டுதோறும், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இவற்றின் சீசனாகக் கருதப்படுகிறது. அதிகப்படியாக மே – ஜூன் காலகட்டத்தில் கிடைக்கும். ஜப்பானியர்கள், தங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களுக்குப் பரிசாக இந்த மாம்பழத்தை அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
என்ன விலை?
மியாசகி மாம்பழங்கள் இரண்டு கொண்ட ஒரு பெட்டியின் விலை ரூ.8,000-த்தில் இருந்து தொடங்கும் என்கிறார்கள். அதிகபட்சமாக, கிலோ ஒன்றுக்கு ரூ.2.70 லட்சம் வரை இவற்றுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுமாம்.
எங்கெல்லாம் கிடைக்கும்?
மியாசகி மாம்பழங்கள் பெரும்பாலும் ஜப்பானின் மியாசகி பகுதியில்தான் விளைகின்றன. இவைதவிர, அதேபோல் காலநிலை கொண்ட தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஒரு சில பகுதிகளிலும் விளைவிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது தோட்டத்தில் மியாசகி மாம்பழ வகைகளை வளர்த்தது செய்திகளில் இடம்பெற்றது. அந்தத் தம்பதி, மாம்பழங்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமே 7 நாய்களை வளர்த்து வந்ததோடு, மியாசகி மாம்பழ மரங்களைச் சுற்றி வேலி அமைத்திருந்ததும் அப்போது பேசுபொருளானது.
Also Read – உலகின் காஸ்ட்லியான உப்பு பத்தி தெரியுமா.. 250 கிராமுக்கு ரூ.7,500 விலை கொடுக்கணுமாம்!