நிதிப்பற்றாக்குறையால் கோவில்பட்டியில் செயல்படும் தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எக்ஸ்ரே முடிவுகள் பேப்பரில் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொடுக்கப்படுவது சர்ச்சையாகியிருக்கிறது.
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை
தூத்துக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கோவில்பட்டியில் இருக்கிறது. தீப்பெட்டி, பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் நிறைந்த அந்தப் பகுதியில், பெரும்பாலான மக்கள் மருத்துவத்துக்காக அரசு மருத்துவமனையையே அணுகுகிறார்கள். சாதாரண காய்ச்சல் தொடங்கி மகப்பேறு மருத்துவம் வரை மக்களுக்கு இன்றிமையாத சேவையை அந்த மருத்துவமனை செய்து வருகிறது. அதேபோல், நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால், அங்கு ஏற்படும் விபத்துகளின்போதும் அவசர சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையையே மக்கள் நாட வேண்டிய நிலை.
பேப்பரில் எக்ஸ்ரே முடிவுகள்
இந்தசூழலில், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் எக்ஸ்ரே முடிவுகள் பேப்பரில் பிரிண்ட் செய்து கொடுப்பதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது. இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில், `நிதிப்பற்றாக்குறையால் ஃபிலிம் வாங்க நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால், பேப்பரில் பிரிண்ட் செய்து கொடுக்கிறோம்’ என்று விளக்கமளித்திருக்கிறார்கள். பொதுவாக எக்ஸ்ரே எடுப்பதற்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.50 என்ற அளவில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகளில் இதற்கான கட்டணமோ ரூ.600 வரை வசூலிக்கப்படும் நிலை இருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களாக இந்த நிலை இருப்பதாகவும், உடனே அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. வாட்ஸ் அப்பில் முடிவுகளை அனுப்புவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டாலும், கூலி வேலைக்குச் செல்லும் மக்கள் நிறைந்த இந்தப் பகுதியில் எத்தனை பேரிடம் வாட்ஸ் அப் வசதி கொண்ட செல்போன்கள் இருக்கும் என்ற கேள்வியும் அப்பகுதியினரால் முன்வைக்கப்படுகிறது.
இந்த விவகாரம் வெளியாகி சர்ச்சையான நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உறுதியளித்திருக்கிறார். அதேபோல், எக்ஸ்ரே ஃபிலிம் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் பொதுமக்களுக்கு ஃபிலிமில் எக்ஸ்ரே முடிவுகள் எடுத்துத் தரப்படும் என்றும் மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.