பண்டிகை காலத்தில் குறைந்த வட்டியில் லோன் கொடுப்பது பற்றிய ஆஃபர்கள் குவிந்து வருகின்றன. மிகக்குறைந்த வட்டி என்பதால் இந்த சமயத்தில் பலர் தங்களது கனவு காரை வாங்க முடிவு செய்திருப்பார்கள். வங்கிக் கடன் உதவியோடு உங்களது கனவு காரை வாங்க இது சரியான தருணம் என்றாலும், கார் லோன் வாங்குவதற்கு முன்னர் சில முக்கியமான விஷயங்களை செக் பண்ணிடுங்க பாஸ்…
கார் லோனுக்கு முன் செக் பண்ண வேண்டிய 4 விஷயங்கள்!
அடிப்படை
கார் லோன் வாங்குவது என்று முடிவெடுத்துவிட்டால், முதலில் உங்களது வருமானம்/ஊதியத்தின் அடிப்படையில் கடன் தொகை எவ்வளவு கிடைக்கும் என்பதை செக் செய்துகொள்ளுங்கள். வங்கிகளின் இணையதளங்களில் இதற்காக இருக்கும் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தி இதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
கம்பேரிசன் முக்கியம் பாஸ்
கார் டீலர்கள் வழங்கும் லோன் வசதி அவ்வளவு குறைவான ரேட்டில் வராது. லோனைத் தேர்வு செய்யும் முன்னர் கடன் வழங்கும் பல்வேறு வங்கிகள் கொடுக்கும் சலுகைகள், வட்டி விகிதம் போன்றவற்றை ஒப்பீடு செய்துகொள்ளுங்கள்.
கடன் தொகை
கார் வாங்க ஷோரூமுக்கு செல்வதற்கு முன்னர் உங்கள் பட்ஜெட் தொகையை இறுதி செய்துகொள்ளுங்கள். காருக்கான காப்பீடு, வாகனப் பதிவுக்கான செலவுகள், கார் உதிரி பாகங்களுக்கான செலவுகள் என இவை அனைத்தும் சேர்த்தே பட்ஜெட் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஷோரூமில் இருக்கும் விற்பனை பிரதிநிதிகள் உங்கள் பட்ஜெட்டைத் தாண்டி சில மாடல் கார்களை வாங்க உங்கள் மனதை எளிதாக மாற்றக் கூடும். உங்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு கார் மாடலையும் பட்ஜெட்டையும் முடிவு செய்யுங்கள் என்பதே வல்லுநர்கள் முதல் அட்வைஸாக இருக்கிறது. மாதந்தோறும் உங்கள் பட்ஜெட்டில் லோன் இ.எம்.ஐ-யும் சேரும் என்பதைக் கருத்தில் கொண்டு முதலில் செலுத்தும் டவுன் பேமெண்ட், இ.எம்.ஐ போன்றவற்றை முடிவு செய்துகொள்ளுங்கள்.
திரும்ப செலுத்தும் காலம்
பொதுவாகக் கடனைப் பொறுத்தரை திரும்ப செலுத்தும் காலம் (Tenure) முக்கியமான இடத்தைப் பிடிக்கும். ஐந்தாண்டுகள் திரும்ப செலுத்தும் காலத்தைத் தேர்வு செய்தால் மூன்றாண்டுகளுக்கான இ.எம்.ஐ தொகையை விட அது குறைவாக இருக்கும். அதேநேரம், வட்டியாக நீங்கள் கூடுதல் தொகையை செலுத்த வேண்டி இருக்கும். இதனால், உங்களின் வருமானம், தற்போதைய செலவு, திரும்ப செலுத்தும் காலத்தில் ஏற்படும் மற்ற செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு கடனைத் திரும்ப செலுத்தும் காலத்தை முடிவு செய்யுங்கள்.
Also Read – நிலக்கரி விலை உயர்வால் பாதிக்கப்படும் சிமெண்ட் உற்பத்தி… பின்னணி என்ன?