கேமிங் உலகில் சோனி நிறுவனம் வெளியிட்ட ப்ளேஸ்டேஷனின் பரிணாமம் அபாரமானது. சிறு வயதில் பத்து ரூபாய் கொடுத்து அரை மணி நேரம் ப்ளேஸ்டேஷன் விளையாடியது எல்லாம் நாஸ்டால்ஜியா. ப்ளேஸ்டேஷன் 1-ல் ஆரம்பித்து தற்போது 5 வரை வந்துவிட்டது.
உயர்தர கிராபிக்ஸ், 4K, HDR, Dolby என தொழில் நுட்பங்களும் எங்கோ சென்றுவிட்டது. `எந்தக் கடையில் கூட்டம் கம்மியா இருக்கு… போய் அரை மணி நேரம் விளையாடிட்டு வரலாம்’ என்கிற காலகட்டம் போய் வீட்டுக்கு வீடு பிளேஸ்டேஷன் வைத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான மார்கெட்டும் தற்போது அதிகமாகிவிட்டது. அந்த வகையில் இந்த லாக்டவுன் சமயத்தில் ப்ளேஸ்டேஷன் 4-ல் என்னென்ன கேம்கள் விளையாடலாம் எனப் பார்ப்போம்!
-
1 God of War 4 :
இந்த கேம் உங்களை வேறு ஒரு உலகிற்கு கொண்டு செல்லும். கிராபிக்ஸின் உச்சக்கட்டத்தை இந்த கேமை விளையாடும் போது அனுபவிக்கலாம். கற்பனையான ஒரு உலகில்தான் இதன் கதை நகரும். Kratos என்பவர்தான் இந்தக் கதையின் நாயகன். ஆள் பார்ப்பதற்கு அர்னால்டின் அக்கா மகன் போல இருப்பார். இவரது குரல் கணீர் என்றிருக்கும். கையில் இருக்கும் கோடாரியை சுழற்றினால் எதிரிகளுக்கு அல்லு இருக்காது. இது ஒரு பக்கா ஆக்ஷன் - த்ரில்லர் ஜானர் கேம். இந்த கேமின் கதையை முழுமையாக புரிந்துகொள்ள இதன் முதல் பாகத்தில் இருந்து விளையாட வேண்டும். உங்களுடைய கேம்ப்ளே எப்படி இருக்க வேண்டும் என முன்கூட்டியே கேட்கப்படும். நீங்கள் கதை விரும்பியாக இருந்தால் அதற்கு ஒரு ஆப்ஷன், சண்டை விரும்பியாக இருந்தால் அதற்கு ஒரு ஆப்ஷன், இரண்டையுமே கலந்து ஒரு ஆப்ஷன் மற்றும் இறுதியில் `Give me God of war' என்று ஆப்ஷன் இருக்கும். நீங்கள் நியூபி கேமராக இருந்தால் அந்த ஆப்ஷன் சைடு மட்டும் போக வேண்டாம். அடிப்பாய்ங்க... வலிக்கும்.
Gameplay : 17 - 25 Hours
-
2 GTA V :
GTA ரசிகர்களின் சிம்மசொப்பனமாக திகழும் ஒரு கேம்தான் GTA 5. இதுவரை வெளிவந்த 4 பாகங்களைப்போல் இல்லாமல் இதில் மாஸும், கிளாஸும் வேற லெவலில் இருக்கும். இந்த கேமின் கதைப்படி மைக்கேல், ட்ரெவர், ப்ராட் என மூன்று பேர் வருவார்கள். அந்த மூன்று பேராகவும் நீங்கள் இதை விளையாட வேண்டும். ஒவ்வொருவது வாழ்க்கை முறையும் வெவ்வேறாக இருக்கும். கேம் நகர நகர சில இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும். அந்த சமயத்தில் முடிவு என்னவென்பதை நாம்தான் ஆப்ஷனாக தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படியே கதை நகரும். ஒரு பக்கா கேங்ஸ்டர் படத்தைப்போல் ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகளும், ஆக்ஷன் சீக்வென்ஸ்களும் இந்த கேமில் இருக்கும்.
Gameplay : 30 - 31 Hours
-
3 Marvel's Spiderman :
சூப்பர் ஹீரோக்களின் கேம்கள் எப்படி இருக்கும் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. பொதுவாக ஸ்பைடர்மேன் கதைகள் இரு விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று சிலந்தி கடித்து ஸ்பைடர்மேன் ஆவது, இரண்டு தொழில் நுட்பங்களைக் கொண்டு ஸ்பைடர்மேன் ஆவது. ஏற்கனவே சூப்பர் ஹீரோக்கள் படங்களில் நம்பகத்தன்மை குறைவு என ஏகப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படுகிறது, இதற்கான ஹேட்டர்களும் கூடிக்கொண்டே இருக்கின்றனர். அதைக் கருத்தில் கொண்டு லேட்டஸ்ட்டாக வரும் ஸ்பைடர்மேன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவதரிக்கும் ஸ்பைடர்மேனாக காட்சி தருகிறான். படங்களிலும் இனி அவ்வாறே. அதுவும் ஐயர்ன் மேன் வந்த பிறகு இருவருக்கு இடையே லிங்க் ஏற்படுத்தி கதை நகர்த்தப்படுகிறது. கேமிங் வெர்ஷனில் வரும் ஸ்பைடர்மேனும் அப்படியானவர்தான்.
Gameplay : 17 - 24 Hours
-
4 Fifa 21 :
கன்சோலில் PS முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அதில் விளையாடப்படும் கேம்களில் FIFA ஒரு புரட்சியையே உண்டாக்கியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் FIFA-வில் இருந்து ஒரு புது வெர்ஷன் வந்துகொண்டே இருக்கும். 1993-ல் தொடங்கி தற்போது வரை கேம்களை வெளியிட்டு இருக்கிறார்கள். குறிப்பிட இந்த கேமுக்கு கேமர்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. வெர்ஷனுக்கு வெர்ஷன் இவர்களது கிராபிக்ஸ் தரம் உயர்ந்து கொண்டே போகிறது. மெஸ்ஸி, நெய்மர், ரொனால்டோ போன்ற நமது ஃபேவரைட் ஃபுட்பால் வீரர்களை நேரில் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி ஓர் உணர்வை இதை விளையாடும் போது கொடுக்கும். அவர்களின் செலிப்ரேஷன் ஸ்டைலில் ஆரம்பித்து மேனரிஸம் வரை அச்சு அசல் அவர்களைப்போலவே கிராபிக்ஸ் செய்திருக்கிறார்கள். இது போன்ற ஸ்போர்ட்ஸ் கேம்களில் என்ன ப்ளஸ் என்றால் இதை எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம். குறிப்பாக நண்பர்களுடன் விளையாடி லூட்டி அடிக்கலாம். Open world game-யை போல் கதை முடிந்தவுடன் தூக்கி போட தேவையில்லை.
-
5 The last of Us part II :
ப்ளேஸ்டேஷனில் இது மிக முக்கியமான கேம். கிராபிக்ஸில் ஆரம்பித்து கேம்ப்ளே வரைக்கும் அனைத்தும் தரம். ஸாம்பீக்களால் சூரையாடப்பட்டு இருக்கும் அமெரிக்காவில்தான் இந்த கேமின் கதை நகரும். வெறும் கேமாக மட்டுமல்லாமல் நிறைய பாடங்களையும் இதில் நாம் கற்றுக்கொள்ளலாம். ஓப்பன் வேர்ல்டு ரக கேம்களில் இதுதான் கேமர்களின் ஃபேவரைட்டாக இருக்கும். இந்த கேமானது பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது. பொதுவாக ஒரு கேமை எடுத்துக்கொண்டால் மெயின் கதை ஒரு பக்கம் நகர நிறைய கிளைக்கதைகளும் சுவாரஸ்யம் கொடுக்கும். அப்படியான கிளைக்கதைகளும் இந்த கேமானது வென்றுவிட்டது. கதைப் பிரியர்கள் கட்டாயம் இதன் முதல் பாகத்தை விளையாடுங்கள்!
Gameplay : 25 - 30 Hours
0 Comments