Budget 2024

தமிழ்நாடு – தமிழ் வார்த்தைகள் இல்லாத பட்ஜெட் – #Budget2024 சிறப்பம்சங்கள்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற நிலையில், 2024-25 ஆம் ஆண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரை

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் என நான்கு தரப்பினருக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

2024 பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்ட துறைகள்:

  • விவசாயத்தில் உற்பத்தித்திறன் மற்றும் பின்னடைவு;
  • வேலைவாய்ப்பு மற்றும் திறன்;
  • மேம்பட்ட மனித வளம், சமூக நீதி;
  • உற்பத்தி மற்றும் சேவைகள்;
  • நகர்ப்புற வளர்ச்சி;
  • ஆற்றல் பாதுகாப்பு;
  • உள்கட்டமைப்பு;
  • புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு;
  • அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்;

புதிய வருமான வரி திட்டம்

புதிய வருமான வரி திட்டம் அறிவிப்பின்படி ரூ.3 லட்சம் வரை வருமான வரி கிடையாது. மூன்று லட்ச ரூபாய் முதல் ரூ.7 லட்சம் ரூபாய் வரை வருமானத்துக்கு 5% வரி. ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை உள்ள வருமானத்துக்கு 10% வரி. ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானம் கொண்டவர்களுக்கு 15% வரி விதிக்கப்படுகிறது. ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20% வரியும், ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்துக்கும் மேலிருந்தால் 30% வரியும் விதிக்கப்படும் என்று அறிவிப்பு.
`புதிய வருமான வரியின்கீழ், வரி குறைப்பின் மூலம் ஊழியர்கள் ஆண்டுக்கு ரூ.17,500 சேமிக்க முடியும்’ என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.

  • நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long-term capital gains tax) 10%-ல் இருந்து 12.5% ஆக அதிகரிப்பு
  • செல்போன், சார்ஜர்களுக்கான சுங்கவரி 15% ஆகக் குறைப்பு
  • தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 15%-த்திலிருந்து 6% ஆகக் குறைப்பு
  • நாட்டில் விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு
  • தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் முக்கிய அங்கம் வகிக்கும் நிலையில்,பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
  • ஆந்திர தலைநகர் அமராவதி கட்டமைப்புக்கு ரூ.15,000 கோடி
  • பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்தை முடிக்க அரசு உறுதிபூண்டுள்ளது.
  • ஆந்திராவின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், தண்ணீர், எரிசக்தி, ரயில்வே மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • பீகாரில் விரைவு சாலைகள் அமைக்க ரூ.26,000 கோடி நிதி
  • மின் உற்பத்தித் திட்டத்துக்கு ரூ.21,400 கோடி, பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நிதியுதவி
  • பீகாரில் வெள்ள தடுப்பு, நீர்பாசன திட்டங்களை செயல்படுத்த ரூ.11,500 கோடி நிதி
  • பீகாரில் உள்ள விஷ்ணு போதி, மகா போதி ஆலய வழித்தடங்களை மேம்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
  • மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

ரயில்வே துறை அறிவிப்புகள் எங்கே?

சமீபகாலமாக ரயில் விபத்துகள் அதிகம் நடந்து, தேசிய அளவில் ரயில் போக்குவரத்து பேசுபொருளாக இருந்து வருகிறது. இதனால், ரயில்வே துறை பற்றி பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கென எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை.

புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு

பல நேரங்களில் பட்ஜெட் உரையில் திருக்குறள் இடம் பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை திருக்குறள் மட்டுமல்லாது, தமிழ்நாடு மற்றும் தமிழ் போன்ற வார்த்தைகள் ஒருமுறை கூட இடம்பெறவில்லை. அசாம், ஒரிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதி விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு எந்தவொரு நிதியும் விடுவிக்கப்படவில்லை. இதையடுத்து, தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

எதெல்லாம் விலை குறையும்?

  • புற்றுநோய் மருந்துகள்
  • தங்கம், வெள்ளி
  • பிளாட்டினம்
  • கடல் உணவுகள்
  • காலணிகள்
  • சோலார் மின் உற்பத்தி உபகரணங்கள்

எதெல்லாம் விலை அதிகமாகும்?

  • டெலகாம் உபகரணங்கள்
  • பிவிசி பிளாஸ்டிக்
  • ஆய்வக வேதிப்பொருட்கள்
  • விமான டிக்கெட்டுகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top