“உங்க பீட்சாவை சாப்பிடுறது அட்டையை கடிக்குற மாதிரி இருக்கு..”
“உங்க சாஸ் டேஸ்ட்டே இல்ல மண்ணு மாதிரி இருக்கு”
சில வருடங்களுக்கு முன்பு Domino’s பற்றி அப்போதிருந்த Blog & Social Media-க்களில் அதன் வாடிக்கையாளர்கள் இப்படித்தான் விமர்சித்தார்கள். நெட்டிசன்கள் மொழியில் சொல்வதென்றால் கழுவிக் கழுவி ஊற்றினார்கள். இவ்வளவு நெகட்டிவ் ரிவ்யூக்களை ஒரு நிறுவனம் சந்தித்தால் என்ன செய்யும்? நெகட்டிவ் ரிவ்யூ சொன்னவர்களின் வீட்டுக்கே தேடிப்போய் டோமினோஸ் கொடுத்த பதிலடி அன்றைக்கு இண்டர்நெட் முழுக்க வைரல் ஆனது. என்ன நடந்துச்சுங்குறதைத்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போறோம்.
2009 ஆம் ஆண்டு அப்போதுதான் இன்டர்நெட் கொஞ்சம் கொஞ்சமாக புழக்கத்திற்கு வரத் தொடங்கியிருந்தது. ஆன்லைனில் விமர்சனம் செய்வது என்ற கான்சப்டும் ஆரம்பித்திருந்தது. தங்களுக்குப் பிடிக்காத பிராண்டுகளை பற்றி இஷ்டத்துக்கு திட்டித் தீர்த்தார்கள் நெட்டிசன்கள். அதில் டோமினோஸ் பீட்சாவின் டேஸ்ட் பற்றிய விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. பொதுவாக இது போன்ற நெகட்டிவ் ரிவ்யூக்கள் அதிகமாகும்போது ஒன்று கண்டுகொள்ளாமல் விடுவார்கள் அல்லது பி.ஆர் நடவடிக்கைகள் மூலம் எதாவது செய்து பாசிட்டிவ் செய்திகள் வர வைப்பார்கள். இது இரண்டும் இல்லாமல் ஒரு புதிய முடிவை எடுத்தார் டோமினோஸின் சி.இ.ஓ பேட்ரிக் டோய்ல்.
ஆன்லைனில் நெகட்டிவ் ரிவ்யூ செய்தவர்களை ஒரு சர்வே என்று சொல்லி அழைத்து அவர்களுடைய விமர்சனங்களை வீடியோ பதிவாக்கினார். வந்தவர்களும் நல்ல பீட்சா கிடைக்காத சோகத்தையெல்லாம் கோபமாகக் கொட்டித்தீர்த்தார்கள். பீட்ஸா அட்டையைக் கடிப்பதைப் போல் இருக்கிறது, சாஸ், சீஸ் எல்லாம் சுவையே இல்லை என்று புகார்களை அடுக்கினார்கள். இந்த வீடியோ பதிவை டோமினோஸின் செஃப் டீமை பார்க்க வைத்தார் பேட்ரிக். ஒவ்வொருவரின் வார்த்தைகளும் செஃப்களுக்கு ரத்தக் கண்ணீரை வரவழைத்தது. அடுத்த சில நாட்களில் பீட்சாவின் சுவையைக் கூட்டவேண்டும் என்று முடிவெடுத்தது ராப்பகலாக விடுமுறைகூட இல்லாமல் உழைத்தது அந்த டீம். பீட்ஸாவின் முக்கிய அம்சங்களான க்ரெஸ்ட், சாஸ், சீஸ் இது அத்தனையும் தனித்தனியாக மெனக்கெட்டு தரமாக உருவாக்கினார்கள். சுவையான புதிய பீட்சா ஃபார்முலா ரெடியானது. ஓக்கே… அடுத்து? இங்குதான் ஒரு முடிவெடுத்தது டோமினோஸ் குழு.
அதைத் தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி தமிழ்நாடு நவ் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. இந்த மாதிரி நிறைய கதைகளை தினமும் பார்க்கலாம்.
வீடியோவில் நெகட்டிவ்வாக சொன்னவர்களின் கமெண்ட்களை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு புதிய பீட்சாவுடன் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்றார் டோமினோஸ் பீட்ஸாவின் தலைமை chef. அவர்களுடைய விமர்சனத்தைப் படித்துக்காட்டி புதிய பீட்சாவை சுவைத்துப் பார்க்கச் சொன்னார்கள். நம்முடைய கமெண்டை இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொண்டு வீட்டுக்கே வருவார்கள் என்பதும் அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதோடு சாப்பிட்ட எல்லோருக்குமே அந்த பீட்சா பிடித்திருந்தது. இந்த நிகழ்வுகள் அத்தனையும், ‘Oh Yes, We did’ என்ற கேம்பெய்னாக தனது யூ-டியூப் பக்கத்தில் வெளியிட்டது டோமினோஸ். அந்த வைரல் வீடியோவைப் பார்த்தவர்கள் அத்தனை பேரும் சிலிர்த்துப் போக, டோமினோஸ் மீது மக்களுக்கு நல்ல பெயர் வந்தது.