தினசரி உணவில் பிரேக்பாஸ்ட் எனப்படும் காலை உணவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காலை எழுந்தவுடன் நாம் எடுத்துக்கொள்ளும் இந்த உணவு அந்த நாளுக்கான எனர்ஜியை அளித்து நாம் சோர்வில்லாமல் பயணிக்க உதவும். மதியம் – இரவு உணவுகளோடு ஒப்பிடுகையில் காலை உணவை எடுத்துக் கொள்ள நாம் குறைவான நேரத்தையே செலவழிப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதேபோல், வளர்சிதை மாற்றம் எனப்படும் உடல் மெட்டபாலிசத்தை காலை உணவே அதிகரிக்கச் செய்கிறது. அதேபோல், மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, நீண்டகால அடிப்படையில் டைப்-2 டயபாடீஸிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.
இவ்வளவு முக்கியமான பிரேக் பாஸ்டை எடுத்துக்கொள்ளும்போது நாம் பொதுவாக சில தவறுகளைச் செய்கிறோம் என்பது உண்மைதான். அப்படியாக காலை உணவை எடுத்துக் கொள்ளும்போது செய்யும் சில தவறுகள் பற்றிதான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
7 பிரேக்பாஸ்ட் மிஸ்டேக்ஸ்
மிஸ்ஸிங் பேலன்ஸ்
இரவு உணவு எடுத்துக்கொண்டு கிட்டத்தட்ட 12 மணி நேர இடைவெளிக்குப் பின்னர் நாம் எடுத்துக்கொள்ளும் காலை உணவில் நமது உடலுக்குத் தேவையான சத்துகள் சரிவிகித அளவில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்பு போன்ற அவசியமான சத்துகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தாமதமாக உணவு எடுத்துக்கொள்வது
காலை எழுந்து ஒரு மணி நேரத்துக்குள் பிரேக் பாஸ்ட் எடுத்துக்கொள்வது நலம். காலையில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுதான், அன்றைய நாளுக்கான நமது எனர்ஜி லெவலை அப்படியே தக்கவைத்துக் கொண்டு, தினசரி வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபடவும் உதவும். காலை உணவைத் தாமதமாக எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் அது உங்களுடைய அன்றாடப் பணிகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
பிரேக்பாஸ்டைத் தவிர்த்தல்
நம்மில் பெரும்பாலானோர் செய்யும் மிகப்பெரிய தவறு என்பது காலை உணவு எடுத்துக்கொள்வதை தவிர்ப்பதே என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்பதே அவர்களின் முக்கியமான அட்வைஸாக இருக்கிறது. உடல் எடைக் குறைப்பில் முக்கியமான பங்காற்றும் மெட்டபாலிஸத்தின் வேகத்தை அது குறைத்துவிடுவதோடு, பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படவும் வழிவகுக்கிறது.
திரவ உணவுகள் – ஜூஸ் எடுத்துக்கொள்வது
நான் என்னுடைய நாளை ஜூஸோடுதான் தொடங்குவேன் என்று சொல்பவரா நீங்கள்… ஆம் என்றால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஜூஸ் போன்ற திரவ உணவுகளில் நார்ச்சத்து இருக்காது என்பதால், காலை உணவில் நார்ச்சத்து போதுமான அளவு இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
போதுமான அளவு புரோட்டீன் எடுத்துக்கொள்ளாதது
உங்களுடைய நாளைப் பிரகாசமாகத் தொடங்க உடலுக்குத் தேவையான புரோட்டீன் போதுமான அளவு எடுத்துக்கொள்வது முக்கியம். அவித்த முட்டையுடன் பிரெட், பன்னீர் டிஷ் உள்ளிட்ட புரோட்டீன் மிகுந்த உணவுகளை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். புரோட்டீன் தேவை என்பதற்காக, அதை மட்டுமே காலை உணவாக எடுத்துக்கொள்வதும் சிறந்ததல்ல என்றே ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
தவறான கார்போஹைட்ரேட்டுகளைத் தேர்வு செய்வது
புரோட்டீனைப் போலவே கார்போஹைட்ரேட்டும் நமக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துதான். அதற்காக, தவறான கார்போஹைட்ரேட்டுகளை காலை உணவில் சேர்த்துக்கொண்டால், அது உடல் எடை கூட வழிவகுத்துவிடும். உதாரணமாக, பிரெட், பேன் கேக்ஸ் போன்றவற்றில் இருக்கும் கார்போஹைட்ரேட் உடல் எடையை அதிகரிக்கவே வழிவகுக்கும்.
காலை உணவோடு காஃபி/டீ
நமது காலை உணவோடு காஃபி அல்லது டீயைச் சேர்த்துக்கொள்வதை நாம் வழக்கமாகவே வைத்திருக்கிறோம். ஆனால், இவற்றில் இருக்கும் காஃபின், அத்தியாவசிய ஊட்டச்சத்துகளான கால்சியம் மற்றும் இரும்புச் சத்து போன்றவற்றை உறிந்துகொள்ளும் தன்மை கொண்டவை. காலை உணவு எடுத்துகொண்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு காஃபி அல்லது டீ குடிப்பது நல்லது என்று ஒரு மாற்று வழியையும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்கிறார்கள்.