Udupi Sambar

பெங்களூர் சாம்பார் இனிப்பா இருக்க என்ன காரணம்… ஏன் அப்படி இருக்கு?

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற டிஷ்ஷான சாம்பார், கர்நாடகாவில் மட்டும் இனிப்புச் சுவையோடு இருக்க என்ன காரணம்? அது ஏன் அப்படி இருக்கிறது?

டிஃபன் என்றாலே இட்லி – சாம்பாரை அடித்துக்கொள்ள எந்த உணவும் இல்லை’ என்று சிலாகிக்கும் உணவுப் பிரியர்களை உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் கடந்து வந்திருப்பீர்கள். ஏன் நம்மில் பலரே இதைப் பலமாகத் தலையாட்டி ஆமோதிக்கவும் செய்வதுண்டு. அப்படி இட்லியின் இரட்டையரான சாம்பார் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகத் தயாரிக்கப்படுகிறது. அதன் தயாரிப்பு முறைக்கேற்றவாறு அதன் சுவையும் மாறுபடும். உலக அளவில் தென்னிந்தியாவே சாம்பாருக்கு பேமஸானது. ஆனால், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என ஒவ்வொரு மாநிலத்திலும் இது ஒவ்வொரு விதமான சுவையைக் கொண்டிருக்கும். ஆந்திராவில் குர்ரா என்றழைக்கப்படும் சாம்பாரின் கர்நாடகப் பெயர் ஹூலி. அதேபோல், கேரளாவில் சதயா எனப்படும் சிறப்பு உணவில் பரிமாறப்படும் சாம்பாரின் பெயர் `வறுத்தரைச்சா’. அதிலும் குறிப்பாக கர்நாடக மாநிலத்தின் உடுப்பு வகையறா சாம்பாரில் கொஞ்சம் இனிப்பு தூக்கலாகவே இருக்கும்.

பெங்களூர் சாம்பாரின் சுவை ஏன் அப்படியிருக்கிறது?

கர்நாடகாவின் உடுப்பி சாம்பாரின் இனிப்பு சுவைக்குக் காரணம், அதன் தயாரிப்பின்போது சேர்க்கப்படும் வெல்லம்தான். கர்நாடகாவின் பல பகுதிகளில் பிரதான உற்பத்திப் பொருளான வெல்லத்தை உணவில் சேர்க்கும் வழக்கம் பாரம்பரியமானது. இதனாலேயே உடுப்பி சாம்பாரின் சுவை தித்திப்பாக இருக்கிறது. இட்லி, தோசை என டிஃபன் வகைகளுடன் இது பரிமாறப்படுகிறது. அதேபோல், மதிய உணவில் குறிப்பிட்ட உணவுக்கு மட்டுமே இந்த சாம்பாரைப் பயன்படுத்துகிறார்கள். உத்தர கர்நாடகப் பகுதிகளில் இப்படியிருக்க, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் மசாலாவில் நிறத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால், அந்தப் பகுதியில் கொஞ்சம் காரம் அதிகமாக இருக்கும். வடக்கு கர்நாடகப் பகுதிகளில் மசாலாவோடு வெங்காயமும் பூண்டும் சேர்க்கப்படுவதால், அது நம்மூர் சுவையோடு கொஞ்சம் ஒத்துப்போகும்.

Udupi Sambar

உடுப்பி சாம்பார்

  • இதன் தயாரிப்பில் வெங்காயம், பூண்டு போன்றவற்றைப் பயன்படுத்துவதில்லை.
  • வெல்லம் சேர்ப்பதால், மற்ற காரம் அதிகமான சாம்பார் வகைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சுவை கொண்டது.
  • மல்லி, உளுந்தம் பருப்பு, சீரகம், கடலைப் பருப்பு, வெந்தயம், சோம்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும். சூடு தணிந்தவுடன் அதனுடன் அரைத்த தேங்காயைச் சேர்த்தால் மசாலா ரெடி.
  • முருங்கைக்காய், கேரட் போன்ற வழக்கமான காய்கறிகளே இந்த ரெசிப்பியிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அவற்றை வேகவைத்த பிறகே பயன்படுத்த வேண்டும். அதன்பிறகு வேகவைத்து, நன்கு கூழாக்கப்பட்ட துவரம் பருப்பு, புளி ஆகியவற்றுடன் வேகவைத்த காய்கறிகளைச் சேர்க்க வேண்டும். இதனுடன், ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்து வந்தவுடன் வெல்லத்தைச் சேர்த்து சிறிதுநேரத்துக்குப் பிறகு அடுப்பில் இருந்து இறக்கினால் தித்திப்பான உடுப்பி சாம்பார் தயார்.

Also Read – தமிழ்நாட்டுல இவங்கதான் டாப் சோலோ யூ டியூபர்ஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top