உணவுக்கு சுவைகூட்டும் சமையல் பொருட்களில் முக்கியமானது உப்பு. பெரும்பாலும் உலக அளவில் உப்போட விலை ரொம்ப ரொம்ப கம்மிதான். ஆனால், உலகத்திலேயே காஸ்ட்லியான உப்பு எது தெரியுமா… அதோட விலை எவ்வளவு தெரியுமா?
உப்பு
நமது கிச்சனில் இருக்கும் பொருட்களில் Most Underrated பொருள் என்றால் உப்பைச் சொல்லலாம். சுவைகூட்டியான உப்பு இல்லையென்றால், பெரும்பாலான உணவுகள் சுவையே இல்லாமல் போய்விடும். இதைத்தான் நம் முன்னோர்கள் ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். இது பதப்படுத்துதல் தொழிலும் பயன்படுகிறது. உப்பு இருக்கும் இடத்தில் பாக்டீரியா போன்ற கிருமிகள் நுழையவே பயப்படும் என்பார்கள். நமது இந்தியத் திருநாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் உப்பு முக்கியமான பங்காற்றியிருக்கிறது.
பொதுவாக உப்பின் விலை குறைவாகவே இருக்கும். அதையும் தாண்டி சில உப்புவகைகள் கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும். அதற்குக் காரணம் அதைத் தயாரிக்கும் முறைதான். Pink Himalayan உப்பு அப்படியான ஒரு உப்புவகை. இது சாதாரண உப்பைவிட விலை அதிகம் கொண்டது. ஆனால், உலகின் காஸ்ட்லியான உப்புவகை எது தெரியுமா?… கொரிய மூங்கில் உப்பு (Korean Bamboo salt) உலகின் விலை உயர்ந்த உப்பாகக் கருதப்படுகிறது.
Korean Bamboo salt-ன் விலை அதிகம்.. ஏன்?
இந்த உப்பைத் தயாரிக்கும் சிக்கலான முறை மற்றும் அதற்காகப் போடப்படும் மனித உழைப்பு என இவை இரண்டும்தான் கொரிய மூங்கில் உப்பு விலை அதிகமாக இருக்கக் காரணம். அது சரி.. இதை எப்படி தயாரிக்கிறார்கள்?
சாதாரண உப்பை மூங்கில்களில் அடைத்து, அதிகப்படியான வெப்பநிலையில் அதை சூடாக்குகிறார்கள். ஒரு கட்டத்தில் மூங்கிலில் இருக்கும் சத்துகள் அனைத்தும் உப்பில் ஏறி, அதன் நிறத்தையே பழுப்பாக மாற்றுகிறது. பழுப்பு நிறத்தில் பாறைபோல் எடுக்கப்படும் இந்த உப்பு, அதன் பின்னர் தொழிலாளர்களால் உடைக்கப்பட்டு, தூளாக்கப்படுகிறது. கொரிய மூங்கில் உப்பு 250 கிராமின் விலை கிட்டத்தட்ட ரூ.7,500 (100 அமெரிக்க டாலர்கள்) என்கிற அளவில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
சாதாரண உப்பை மூங்கிலில் அடைத்து, அதை சூடாக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட பிரத்யே உலையில் கிட்டத்த 9 முறைகளுக்கும் மேல் அதிக வெப்பநிலையில் சூடேற்றப்படுகிறது. ஒவ்வொரு முறையும் 800 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையில் மூங்கில் உப்பு உருகி மெருகேறத் தொடங்குகிறது. ஒன்பதாவது முறை மட்டும் 1,000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை வைக்கப்படுகிறது. சாதாரண உப்பை மூங்கிலில் அடைப்பது தொடங்கி, கடைசியில் கிட்டும் பழுப்பு நிற பாறாங்கல் போன்ற உப்பை தூளாக்குவது வரை எல்லா வேலைகளும் மனிதர்களாலேயே செய்யப்படுகிறது. ஒருமுறை இந்த நடைமுறைகள் எல்லாம் முடிவடைய கிட்டத்தட்ட 40 முதல் 45 நாட்கள் எடுக்குமாம். இந்த சிக்கலான நடைமுறைதான் இதன் விலையும் அதிகமாக இருக்கக் காரணம்.
மருத்துவ குணங்கள்
பண்டைய காலம் தொட்டே கொரிய மக்கள், தங்கள் பாரம்பரிய உணவுகளில் இந்த உப்பைப் பயன்படுத்தி வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. இந்த உப்பில் அதிக அளவில் இருக்கும் இரும்புச் சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவை உடல் ஆரோக்கியத்தில் முக்கியமான பங்காற்றுகின்றன. இவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், புற்றுநோய் பாதிப்பைத் தவிர்க்கலாம், பற்கள் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் மற்றும் இவை செரிமானத்துக்குப் பெரிய அளவில் உதவி செய்யும் என்கின்றன மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வு முடிவுகள்.
Also Read –