“மன அழுத்ததுக்கு தற்கொலைதான் தீர்வா?” விளக்குகிறார், மனநல மருத்துவர் ராமகிருஷ்ணன்!

மன அழுத்தம் (Stress) என்பது தற்போதைய காலத்தில் அனைத்து வயதினருக்கும் ஏற்படும் சாதாரண பிரச்னையாக பார்க்கப்பட்டாலும், அது தற்கொலை என்ற அசாதாரண முடிவைச் சிலரிடம் ஏற்படுத்துகிறது. வேலைக்குச் செல்லும் பலரிடம் அவர்களுக்குரிய பிரச்சனை குறித்துக் கேட்டால் முதலில் சொல்வது மன அழுத்தத்தை பற்றித்தான். அதே போல மாணவர்களிடம் கேட்டாலும், அவர்களது முதல் பிரச்சனை மன அழுத்தமாகவே இருக்கும். இப்படி அனைத்துத்தரப்பு மக்களும் மன அழுத்தம் என்கிற கொடுமையை அனுபவித்துவருகின்றனர். உலக அளவில் ஒரு ஆண்டில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதாவது, 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

இப்படியான புள்ளிவிவரங்கள் கேட்பதற்கே மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் அதிகம் பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கின்றனர் என்பதுவே நிதர்சனமான உண்மை. நாளுக்கு நாள் மன அழுத்தம் தொடர்பான பிரச்சனை அதிகரித்துக்கொண்டே வருகிற நிலையில், திருச்சியில் உள்ள ஆத்மா மனநல மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் ராமகிருஷ்ணனிடம் தமிழ்நாடு நவ்
சார்பாக சில கேள்விகளை முன்வைத்தோம்.

Stress
Stress

மன அழுத்தம்ங்குறது என்ன, அது எதனால வருது?

இன்றைக்கு மன அழுத்தத்துக்கான அர்த்தமே நிறையப் பேருக்குப் புரியலை. எடுத்ததுக்கெல்லாம் நான் மன அழுத்தம், Tension-ல இருக்கேன்னு சொல்றாங்க. இந்த இரண்டு வார்த்தைகள்தான் அடிக்கடி உபயோகப்படுத்துறாங்க. 4 வயசு குழந்தைகூட நான் டென்சனா இருக்கேன்னு சொல்றாங்க. ஏன்னு கேட்டா வீட்டுப்பாடம் எழுதனுமாம். இது ஒரு ரகம்னா, வீட்ல சமைக்கணும்னா டென்சனா இருக்குனு சொல்லிட்டு ஆர்டர் பண்றாங்க. இதுவும் சாப்பாட்டை ஆர்டர் பண்ணி சாப்பிடுற பழக்கம் அதிகமானதுக்குக் காரணமா இருக்கலாம். முன்னாடியெல்லாம் கூட்டுக் குடும்பத்துல 30 பேர் இருந்தாலும் எந்த நவீன கருவிகளும் இல்லாம சமைச்சு சாப்பிட்டு போனாங்க. இன்னைக்கு நவீன கருவிகள் இருந்தாலும் சமைக்க மாட்டேங்குறோம். இன்னைக்கு காலக்கட்டத்துல மன அழுத்தம் இல்லாம இருக்கவே முடியாது. ஏதோ ஒரு அழுத்தம இருந்துகிட்டே இருக்கணும். இல்லைனா வாழ்க்கையே போர் அடிச்சிடும். அதுதான் மக்களுக்கு தெரிய மாட்டேங்குது. மன அழுத்தத்தை எப்படி overcome பண்றதுனுதான் யோசிக்கணும்.

எங்கு மன அழுத்தம் அதிகம்? வேலை பார்க்கும் இடத்திலா? வீட்டிலா?

முன்னாடியே சொன்ன மாதிரி எல்லா இடங்களிலும் மன அழுத்தம் இருக்கு. காலையில வீட்ல ஆரம்பிச்சு ஆபீஸ்க்கு கிளம்பிபோய் நைட்டு வீட்டுக்கு திரும்ப வர்ற வரைக்கும் மன அழுத்தம்தான். அதுவும் ஆபீஸ்ல நமக்கு கீழ வேலைப் பார்க்குற 4 பேர் வரலைனா அதையும் நாமதான் பார்க்க வேண்டியிருக்கும். அதுலகூட ஒரு மன அழுத்தம் இருக்கு. சின்ன சின்ன விஷயங்களைக் கூட மன அழுத்தம்னு சொல்லி மூளையில ஏத்திக்காம இருக்கணும். அப்படி மன அழுத்தத்தை ஏத்திக்கிட்டா நிச்சயமா Depression அதிகமாகிடும். அதனால மூளையை free-யா வச்சுக்கங்க. அதுதான் ஒரே தீர்வு.

மன அழுத்தம் எப்படி உடல்நிலையைப் பாதிக்குது?

இந்த மன அழுத்தம்ங்குறது சைக்கோ சொமேட்டிக் டிஸ்ஆர்டரைக் கொண்டு வருது. இந்த உலகத்துல ஆஸ்துமா, அல்சர், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை மாதிரியான நோய்கள் எல்லாத்துக்கும் முக்கியமான காரணம், மன அழுத்தம். கடுமையான மன அழுத்தத்தல உடல்ல இருக்குற ஹார்மோன்கள் அதிகமா பாதிக்கப்படுது. மன அழுத்தத்தை மூளையில ஏத்திக்காம இருந்தா உடலுக்கு வர்ற பிரச்னைகள் தானாவே சரியாகிடும்.

மருத்துவர் ராமகிருஷ்ணன்
மருத்துவர் ராமகிருஷ்ணன்

ஆபீஸ் டார்கெட் பிரசர் மன அழுத்தத்துக்கு காரணமா இருக்குமா?

இன்றைக்கு சர்வைவல் ஆகணும்னா டார்கெட்னு ஒண்ணு இருக்கும். ஒரு Competitor கூட போட்டி போடணும்னா Streategy ரெடி பண்ணனும். அப்போ அதிகமா வேலை செஞ்சுதான் ஆகணும். அப்போ எனக்கு மன அழுத்தம் இருக்குணு சொல்ல முடியாது. கடுமையான வேலைக்கு நாம தயாரா இருக்கணும். இப்படி பண்ணலாம்னு ஒரு வேலையை முன்கூட்டியே முடிவெடுத்துட்டா ஆபீஸ்ல மன அழுத்தம் வரவே வராது.

மன அழுத்தத்தில இருக்கும்போது அதிலிருந்து வெளியே வர ஒரு குட்டி ட்ரிக் சொல்லுங்க?

மன அழுத்தம் அதிகமா இருக்குற நேரங்கள்ல வேகமா ரியாக்‌ஷன் காட்ட வேணாம். விபத்துல சிக்குறது, ஹார்ட் அட்டக்ல தவிக்கிறதுதான் என்னைப் பொறுத்தவரை எமர்ஜென்சி. நிதானமா யோசிச்சு முடிக்காம, அவசர கோலத்துல டக்குனு முடிக்கிறது. அவசரக் கோலத்துல முடிக்கலைனா தலையாவ வெட்டிட போறாங்க. இதுவரைக்கும் 75 ஆயிரம் நோயாளிகளுக்கு மேல பார்த்துட்டேன். என்கிட்ட ட்ரீட்மெண்ட்க்கு வர்ற எல்லாருக்கும் நான் சொல்றது இதுதான். மன அழுத்தத்தால அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். அதுவே மன அழுத்தம் இல்லாம நம்மளைப் பாதுகாக்கும்.

Longterm-ல் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த என்ன வழி?

Longterm தீர்வுங்குறது லைப்ஸ்டைல் Modificationதான். உலகத்துல அதிகமா சாதிச்ச எல்லோரும் பட்டன் போன்தான் வச்சிருக்காங்க. அதுக்கு மேல அவங்க தொடர்பை அதிகரிக்க விருப்பப்படவில்லை.. மேல ஏதாவது தொடர்புக்கு மெயில் பயன்படுத்துவாங்க. அந்த அளவுலதான் நிறையபேர் அவங்க லைப்ஸ்டைலை வச்சுக்குறாங்க. மன அழுத்தத்தை போக்குறதுக்கான வழிகள் நிறையவே இருக்கு. வாரம் இறுதி நாட்கள்ல குடும்பத்தோட நேரம் செலவழிக்கணும். வீட்ல சண்டை போட்டு வேலைக்கு வந்தா ஆபீஸ்ல நிம்மதியா வேலை பார்க்க முடியாது. வீட்டில் இருப்பவர்களுடன் சந்தோசமா இருந்தாலே பாதி மன அழுத்தம் கம்மியாகிடும். கூடவே Meditation கொஞ்சம் இருந்தா மனசு எப்பவுமே நிம்மதியா இருக்கும். அதே மாதிரி நம்ம வேலையை புடிச்சு செய்யணும். இதையெல்லாம் பாலோ பண்ணா நல்லா இருக்கும். முடிவா சொல்றது இதுதான்.. மன அழுத்தம் சார்ந்த பிரச்னை தொடாதது நகத்தை மட்டும்தான். மத்த எல்லா பிரச்னைகள்லயும் மனஅழுத்தத்துக்கு பங்கு இருக்கு. நம்ம லைப்ஸ்டைல நமக்கு பிடிச்சுகிட்ட மாதிரி அமைச்சுகிட்டா மன அழுத்தம் எப்பவுமே நம்மகிட்ட வராது. மக்களுக்காகவே 98424 22121-ங்குற நம்பர் 24 மணிநேரமும் இயங்குகிற சேவை மையம் இருக்கு. மன அழுத்தம் மற்றும் மனநல பிரச்னைகளுக்கு எப்போதும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Also Read – ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகும் சிறார்கள்… மீட்க இதுதான் வழி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top