ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகும் சிறார்கள்… மீட்க இதுதான் வழி!

திருச்சியைச் சேர்ந்த ஒரு நபர் இன்டர்நெட் சேவை மையத்தை நடத்தி வந்தார். அவர் மகன் அடிக்கடி இவரது கடைக்கு வந்து இன்டர்நெட் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். அப்பாவும் நமக்கு ஏதும் தொல்லை கொடுக்காமல் இருக்கிறானே என்று விட்டுவிட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் சாப்பிடக் கூடப் போகாமல் விளையாட்டே கதி என இணையதளத்தில் விளையாடிக் கொண்டிருந்தார் மகன். இதனைக் கண்டு தந்தை  மகனுக்கு வீட்டிலேயே தனியாக இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டரை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதை விளையாட ஆரம்பிக்க தன் மகனின் மனநிலை மூர்க்கத்தனமாக மாறி வருவதைக் கண்டுபிடித்தார் அந்த தந்தை. ஒரு கட்டத்தில்  விளையாட்டுக்குத் தந்தை தடை சொல்ல இன்டர்நெட் மையத்தையே அடித்து உடைத்தார், மகன். பரவாயில்லை என்ன வேணாலும் நடக்கட்டும், நீ கேம் மட்டும் விளையாடக் கூடாது எனத் தந்தை எவ்வளவோ சொல்லியும் மகன் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு தன்னுடைய மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்த்தார், அந்த தந்தை.

Online Gaming
Online Gaming

இப்படி ஒரு வித்தியாசமான சூழலில் ஒரு குடும்பம் தன்னிடம் சிகிச்சைக்காக வந்ததாகத் தெரிவிக்கிறார் திருச்சியில் உள்ள ஆத்மா மனநல மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் ராமகிருஷ்ணன். “ஒரு மாதமாக கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை கொடுத்தும் இயல்பு நிலைக்குத் திரும்புவது அந்த மாணவருக்குச் சிக்கலாக இருக்கிறது” என்று வருத்தத்துடன் மருத்துவர் சொல்ல, கேமிங் அடிக்சன் பற்றி மேலும் சில கேள்விகளை முன்வைத்தோம்.

குழந்தைகளுக்கு கேமிங் அடிக்சன் எந்த அளவுக்கு இருக்கு?

மனசுக்கு ரொம்ப வருத்தமான விஷயமா இருக்கு. நாளுக்கு நாள் குழந்தைகள் விட்டில் பூச்சிகளைப் போல மாறிகிட்டு வர்றாங்க. அதிகமான தற்கொலைகளைப் பார்க்கும்போது நிறையக் கஷ்டமா இருக்கு. கேமிங் அடிக்சன்ல இருந்து திசை திருப்ப நினைச்சா ரொம்ப Violent ஆகிடுறாங்க. என்ன செய்றாங்கனு அவங்களுக்கே சில நேரம் தெரியலை. ஆல்கஹாலை விட இது மோசமான விளைவை மாணவர்களுக்குக் கொடுக்கிறது. கோவிட் சூழலுக்கு முன்பு வரை கேமிங் அடிக்சனிலிருந்து மாணவர்களை ஓரளவு மீட்க முடிந்தது. ஆன்லைன் கிளாஸ்க்கு ஆண்ட்ராய்டு போன்களை மாணவர்கள் உபயோகிக்க ஆரம்பித்த பின்னர், குணப்படுத்தல் விகிதம் ரொம்பவே குறைந்திருக்கிறது. என்கிட்ட சிகிச்சைக்காக வர்ற மாணவர்களின் பெற்றோர்கள்கிட்ட நீங்க பட்டன்போனுக்கு மாறிடுங்கங்குறதுதான் நான் வைக்குற முதல் கோரிக்கை. அதை செஞ்சாலேபோதும். குழந்தைகளுக்குப் படிக்கிறதுக்காக வாங்கிக் கொடுக்கிற செல்போன் அவங்க உயிருக்கே ஆபத்தா முடிய வாய்ப்புகள் அதிகமா இருக்கு.

கேமிங் அடிக்சன் குழந்தைகளை எந்த அளவுக்கு Violent ஆக்குது?

online gaming
online gaming

சமீபத்துல இரண்டு விதமான குழந்தைகளைப் பார்த்தேன். அண்ணன் தங்கைக்குள்ள கேமிங் சண்டை. அதுல தங்கச்சி சாகிற அளவுக்கு அண்ணன் அடிச்சிட்டான். கிட்டத்தட்ட இரண்டுபேருக்குமே அதே நிலைமைதான். அப்புறமா எங்க மருத்துவமனையில் சேர்த்து கவுன்சிலிங் கொடுத்து 15 நாட்கள் வச்சுப் பார்த்தோம். அந்த மாணவர்களோட குடும்பத்தில் யாருமே கொஞ்ச நாளைக்கு ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தக் கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன். அதனால் இப்போ அவர் கொஞ்சம் கொஞ்சமா குணமாகிட்டு வர்றாரு. 

ஆன்லைன் ரம்மியால ஏன் அதிகமான நபர்கள் பாதிக்கப்படுறாங்க?

இன்றைக்கு கேமிங் அடிக்சனில் மிக மோசமானது ஆன்லைன் ரம்மி மாதிரியான பணம் பறிக்கும் கேம்கள்தான். இவர்கள் முதலில் கிரிடிட் பாய்ண்ட்களைக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நமது கவனத்தை ஆன்லைன் ரம்மி பக்கம் திசை திருப்புவார்கள். உள்ளே சென்று விளையாடத் துவங்கும்போதுதான் நம்மை அறியாமல் நாம் ரம்மி விளையாட்டுக்குள் சிக்க ஆரம்பிக்கிறோம். பொழுதுபோக்குக்காக ஆரம்பிச்சு பணத்துக்காகனு விளையாடுற நேரத்துலதான் பிரச்னையே ஆரம்பிக்குது. முடிவு தற்கொலையில் போய் முடியுது. ரம்மி மட்டுமில்லை, Dream 11 மாதிரியான கேம்களும் ஆபத்தான கேம்கள்தான். இதற்கு அடிமையாவதற்குப் பெயர் எண்ணச் சுழல் நோய். இந்த நோயானது ஜெயிக்கணும், பணத்தை வாங்கணும்னு மனசு நினைக்க வச்சுக்கிட்டு இருக்கும். இதை முழுசா தடுக்கணும்னா இந்த மாதிரி விளையாட்டுகளை அறவே தவிர்க்கணும்.

மருத்துவர் ராமகிருஷ்ணன்
மருத்துவர் ராமகிருஷ்ணன்

அடிக்கடி சோசியல் மீடியா பார்க்குறது கூட அடிக்சன்ல வருமா?

இன்னைக்கு 5 நிமிடம் கூட சோசியல் மீடியாவைப் பார்க்காம யாராலையும் இருக்க முடியாது. கிடைக்கிற நேரங்களில் எல்லாமே சோசியல் மீடியாவில்தான் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். நம்மை யார் கவனிக்கிறார்கள், நமக்கு ஏன் லைக் போடலைனு ஒருவித கவலைக்கு ஆளாகிடுறாங்க. இது எல்லாமே டிப்ரசனோட அறிகுறிகள்தான். அவ்ளோ ஏன் செல்பி அடிக்சனே வியாதிதான். இவர்களை பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே திசை திருப்ப வேண்டும். குழந்தைகளிடம் அன்பு காட்ட வேண்டும். அதேபோல பெற்றோர்கள் நேரம் ஒதுக்கி தங்கள் குழந்தைகளுடன் விளையாடுதல், சுற்றுலா செல்லுதல் மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்த வைக்கலாம். ஆரம்ப நிலையிலேயே கேமிங் அடிக்சனை கண்டுபிடித்தால் அவர்களை வரைதல், நீச்சல் போட்டிகள், சிலம்பம் என பல விஷயங்களில் தொடர்ச்சியாக ஈடுபடச் செய்வது அவர்களின் அடிக்சனைக் குறைக்கும்.

ஆத்மா மருத்துவமனை
ஆத்மா மருத்துவமனை

அடிக்சனில் இருந்து விடுபட நினைக்குறவங்களுக்கு ஆத்மா மருத்துவமனை என்ன மாதிரியான உதவிகளைச் செய்யும்?

இப்போ கேமிங்அடிக்சனுக்காக ஒரு வார்டே கொண்டு வரப்போறோம். அங்க ஆவங்களுக்குத் தனியா கிரிக்கெட்,புட்பால்,கபடினு உள்ள முழுக்க Physical Game தான் இருக்கபோகுது. அங்கவச்சு அவங்களுக்கு சிகிச்சை கொடுத்தா முழுமையா குணமடைவாங்க. எங்ககிட்ட வர்ற பெரும்பாலான நோயாளிகளைக் கவனமா பார்த்துதான் குணப்படுத்த வேண்டியிருக்கு. ஆரம்ப கட்டம்னா ஈஸியா குணப்படுத்தி அனுப்பிடலாம். முத்தின நிலைனா கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் குணப்படுத்த வேண்டியிருக்கும். மக்களுக்காகவே 98424 22121-ங்குறநம்பர் 24 மணிநேரமும்இயங்குது. மன அழுத்தம் மாதிரியான பிரச்னைகளுக்கு எப்போ வேணாலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top