தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீங்களா? அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் பரிந்துரைப்படி ஆண்கள் தினசரி 3.7 லிட்டரும் (தோராயமாக 15 கப்) பெண்கள் 2.7 லிட்டர் (தோராயமாக 11 கப்) தண்ணீரும் குடிக்க வேண்டும்.
உங்கள் தினசரி ரொட்டீனைப் பொறுத்து நீங்கள் குடிக்கும் நீரின் அளவும் மாறுபடலாம். உதாரணமாக நீங்கள் கடினமாக வொர்க் அவுட் செய்யும் ஆளாக இருந்தால், நிச்சயம் மற்றவர்களை விட நீங்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டி இருக்கும். அதேநேரம், போதுமான அளவு நீரை எடுத்துக்கொள்ளாவிட்டால், பல எதிர்மறை பக்க விளைவுகள் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அப்படி உங்களை எச்சரிக்கை செய்யும் 7 அறிகுறிகள், பக்க விளைவுகள் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.
தலைவலி
`எனக்கு அடிக்கடி தலைவலி வர்றது வழக்கமானது தான்பா’ – இப்படி ஸ்டேட்டஸ் தட்டும் ஆளா நீங்க? நீங்க போதுமான அளவு நீர் குடிக்காததும் இந்தத் தலைவலிக்குக் காரணமாக இருக்கலாம். சரியான இடைவெளியில் தொடர்ந்து போதுமான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்வதன் மூலமும் தலைவலியைக் குறைக்கலாம் என்கிறது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. கொடியதாகக் கருதப்படும் மைக்ரேன் தலைவலிக்கு மற்ற தீர்வுகளை நாடுவதற்கு முன்பு, தினசரி போதுமான அளவு தண்ணீரைக் குடிக்கிறோமா என்பதை முதலில் செக் செய்துகொள்ளுங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உலர்ந்த உதடுகள்
உதடுகள் உலர்ந்த நிலையில் இருக்கும் பிரச்னை குளிர், காற்று மற்றும் கடும் வெயில் போன்ற காரணங்களால் மட்டுமே ஏற்படுவதில்லை. டீஹைட்ரேஷன் ஆனாலும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். அதனால், குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
குறைந்த ரத்த அழுத்தம்
இதயத்தில் ஏற்படும் ஒரு சில பிரச்னைகளால் ரத்த அழுத்தம் குறைய அதிக வாய்ப்பிருக்கிறது. அதேநேரம், ரத்த அழுத்தம் குறைய டீஹைட்ரேஷனும் முக்கியமான காரணி என்கிறார்கள் மருத்துவர்கள். தினமும் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை சீராக்கலாம். குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் மது அருந்துவதைத் தவிர்த்துவிடுங்கள். ஆல்கஹால் ஹைப்போ டென்சன் நிலையைக் கொண்டுவந்து விடும்.
தசையிறுக்கம்
நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால்தான், அது தசைகள் இயங்கத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கும். நீரின் இன்டேக் அளவு குறைந்தால், தசைகளுக்குத் தேவையான எனர்ஜி கிடைப்பது மிஸ்ஸாகும். இதனால், தசையிறுக்கம் ஏற்பட்டு உடல்வலியில் கொண்டுபோய் நிறுத்தும்.
தலைசுற்றல்
என்னதான் நல்லா தூங்கி எழுந்திருந்தாலும், ஒரு சில நேரங்கள்ல ஃபிரெஷ்ஷா இருக்க ஃபீலிங் இருக்காது. பல நேரங்கள்ல தலைசுற்றல் பிரச்னையாலும் அவதிப்படுறீங்களா… போதுமான அளவு தண்ணீர் குடிக்காததும் இதற்குக் காரணமாக இருக்கலாம். வாட்டர் நிறைய குடிச்சும் இந்தப் பிரச்னை போகலியா… உடனே டாக்டரைப் போய் பாருங்க.. அதுக்கு வேற எதாவது ரீசன் இருக்கலாம்.
சிறுநீரின் அடர்த்தியான நிறம்
உங்கள் சிறுநீரின் நிறம் அடர்த்தியாக இருக்கிறதா? இது டீஹைட்ரேஷனின் அறிகுறியாக இருக்கலாம். அலட்சியம் வேண்டாம். அந்த நிறத்துக்குக் காரணம் ரத்தத்தில் இருக்கும் பிலிரூபன் எனும் ஒருவித பொருள். உடனே தண்ணீர் எடுத்துக் கொள்வதை அதிகப்படுத்துங்கள்.
மலச்சிக்கல்
நிறைய தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலில் இருந்து காக்க உதவும். தண்ணீர் குடிப்பது குறைந்தால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. நிறைய தண்ணீர் குடித்தும் மலச்சிக்கல் இருக்கிறதென்றால், டாக்டரைப் போய் பார்ப்பது நல்லது.
Also Read – தினமும் ஒரே நேரத்தில் எழுவதால் உங்கள் உடலில் என்ன நடக்கும்… இந்த 7 விஷயங்கள் தெரியுமா?