இன்றைய சூழலில் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நாளை அல்ல, ஒரு மணி நேரத்தைக் கூட பெரும்பாலனவர்களால் கழிக்க முடியாது. ஆப்களால் வழிநடத்தப்படும் ஒரு நாளின் சில மணி நேரங்களைக் கூட அவை இல்லாமல் கடந்துபோக முடியாது. சராசரியாக ஒரு நாளைக்கு 2,617 முறை ஸ்மார்ட்போன் டச் ஸ்கிரீனை நாம் தொடுகிறோம் என்கிறது ஒரு ஆய்வு. மொபைல் போனுக்கு அடிமையாக இருக்கிறேன் என்று ஒப்புக்கொள்ளலாம் அல்லது அதை மறுக்கலாம். ஆனால், மொபைல் இல்லாமல் ஒரு நாளைக் கழிப்பது கடினம் என்பது மட்டும் நிதர்சனம். ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் என்ன நடக்கும்? குறைந்தது ஒரு வாரத்துக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தக் கூடாது என்ற நிலை வந்தால், உங்கள் மூளைக்கும் உடலுக்கும் என்ன நடக்கும்…. வாங்க பார்க்கலாம்.
-
1 போபியா
முதலில் போன் பயன்படுத்தாமல் இருப்பதால் உங்களுக்கு ஒருவித பயம் ஏற்படலாம். ஸ்மார்ட்போன் அடிக்ஷனுக்கு ஆளானவர்கள் மன அழுத்தத்தோடும், கோபமாகவும் ரியாக்ட் செய்வார்கள் என்கிறது ஒரு ஆய்வு. சில நேரங்களில் வேலைக்குக் கிளம்பும் அவசரத்தில் வீட்டில் போனை மறந்துவிட்டு செல்ல நேரிடும். அந்த நேரத்தில் ஸ்மார்ட்போன் அடிக்ஷனுக்கு ஆளானவர்கள் கவலையாகவும், பதட்டமாகவும் நடந்துகொள்வார்கள். இதை `nomophobia’ என்றழைக்கிறார்கள் மருத்துவர்கள். மொபைல் போனிடமிருந்து விலகியிருக்க நேர்ந்துவிட்டதாக ஒருவித பயம் ஏற்படும் மனநிலையே இந்த மனநோய் என்கிறது மருத்துவத் துறை. உலகத்தில் இருந்தே தனித்துவிடப்பட்டதாக அவர்கள் உணர்வார்களாம். இதிலிருந்து எவ்வளவு சீக்கிரம் மீள்கிறீர்களோ... அவ்வளவு நல்லது என்பது மருத்துவர்களின் அட்வைஸ்.
-
2 பிரமை
மொபைல் போன் அடிக்ஷனுக்கு நீங்கள் ஆளாகியிருக்கிறீர்களா என்பது ஒரு சின்ன உதாரணம் கொண்டு கண்டுபிடிக்க முடியும். போனை நீங்கள் சார்ஜ் போட்டிருக்கும்போதோ அல்லது போன் உங்களிடமிருந்து தொலைவில் இருக்கும்போதோ ரிங் டோன் அடிப்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுகிறதா... அப்படி உணர்வு ஏற்படும்போது போனை எடுத்துப் பார்த்தால் எந்தவொரு அழைப்பும் வந்திருக்கவில்லையா... மேலே கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் உங்கள் பதில் ஆம் என்றால், நீங்கள் மொபைல் போனுக்கு அடிமையாகிவிட்டீர்கள், உங்களால் அதைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்று பொருள். கொஞ்சம் கொஞ்சமாக மொபைல் பயன்படுத்தும் நேரத்தைக் குறைத்துக் கொள்வதோடு, உரிய மருத்துவ சிகிச்சையும் இதற்கு அவசியம்.
-
3 டோஃபோமைன்
செல்போன்களை கேம் விளையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்துபவர்கள் நிலை மோசமாக இருக்கும். செல்போன்களில் கேம் விளையாடும்போது நமது உடலில் டோபோமைன் என்ற அமிலம் சுரக்கும். அதனால், எப்போதும் எனர்ஜிட்டிக்காகவும் தன்னம்பிக்கையோடும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் செல்போன் பயன்பாட்டை திடீரென நிறுத்தினால், அவர்கள்பாடு திண்டாட்டம்தான்.
-
4 மொபைல் பயன்பாட்டை மெச்சுவீர்கள்
ஒரு காலத்தில் ஷாப்பிங் செல்லும்போது பர்ஸ் நிறைய பணத்தை கையோடு எடுத்துச் செல்லவேண்டிய நிலை இருந்தது. பின்னர், அந்த நிலை மாறி டெபிட் அல்லது கிரடிட் கார்டுகளை எடுத்துச் செல்லும் நிலைக்கு வந்தோம். இப்போது இன்னும் அடுத்த கட்டத்துக்குச் சென்று இவை எதுவும் தேவையில்லை, ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், பேமெண்ட் செய்துவிடலாம் என்ற சூழல் வந்திருக்கிறது. அதேபோல்தான், இசை கேட்பது, செல்லும் இடத்துக்கான வழியைத் தெரிந்துகொள்ள மேப் உதவி என ஸ்மார்ட்போன் அளிக்கும் வசதிகள் ஏராளம்.
இப்படிப்பட்ட நிலையில், ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதனால் கிடைத்த வசதிகள், பயன்களை உங்கள் மனது அசைபோடும். சின்னஞ்சிறிய ஸ்மார்ட் போனால் கிடைத்திருக்கும் பயன்கள் என்னென்ன என்பது பற்றியும் நீங்கள் அதிக நேரம் சிந்திக்கத் தொடங்குவீர்கள்.
-
5 அமைதி நிலை
எந்தவொரு அடிக்ஷனுக்கு எதிராகப் போராடி வெற்றிபெற்றால் இறுதியில் ஒரு அமைதி நிலை கிடைக்கும். அதேபோல்தான், ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத முதல் சில நாட்களில் நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்திருப்பீர்கள். பின்னர், மெதுவாக அதிலிருந்து மீண்டு உங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள். இதேபோல், ஒருவாரம் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்ற சவாலை ஏற்று அந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய அமெரிக்க இளைஞர் ஒருவர் கேட்ட கேள்வி இது. `நான் உண்மையில் தனிமைப்படுத்தப்பட்டேனா அல்லது எனது வாழ்வின் முக்கியமான முடிவுகளை நானே எடுக்கும் வகையில் தெளிவுபெற்று விட்டேனா?’ என்பதுதான்.
உங்கள் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் எவையெவை என நீங்கள் அதை ஃபோகஸ் செய்யத் தொடங்குவீர்கள். புத்தகங்கள், செய்தித் தாள்கள், குழந்தைகள், குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். ஒரு அமைதியான மனநிலையை எட்டுவீர்கள். -
6 உறக்கம் இனிமையாகும்
பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயனாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்னை சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்த சில நாட்களுக்குப் பிறகு இந்தப் பிரச்னையிலிருந்து நீங்கள் விடுபட்டிருப்பீர்கள். நமது மூளை வெளிச்சத்தைச் சரியாகக் கிரகித்துக் கொள்ளக் கூடியது. குறிப்பாக ஸ்மார்ட்போனில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளி தூக்கத்தை நெறிப்படுத்தும் மெலடோனின் சுரப்பைக் குறைக்கும். இதனால், தூக்கமில்லாமல் அவதிப்பட நேர்ந்த நீங்கள், ஸ்மார்ட்போன் பயன்பாடு இல்லாத நிலையில் இந்த பிரச்னையிலிருந்து வெளிவந்திருப்பீர்கள். உங்கள் உறக்கம் இனிமையானதாக மீண்டும் மாறியிருக்கும். இதனால், உங்கள் மனநிலையும் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டிருப்பதோடு, வாழ்வின் தரமும் உயர்ந்திருப்பதாக உணர்வீர்கள் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
-
7 மாற்றம்
உலகம் தகவல்களால் நிரம்பி வழிகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த இன்றைய சூழலில் உலகின் எந்த மூலையில் நிகழும் சம்பவங்களையும் சில நிமிட இடைவெளியில் நம்மால் அறிந்துகொள்ள முடியும். அதுபோன்ற தகவல்களில் மூளை பிஸியாக இருப்பதால், அதைத் தவிர்த்து வேறு எதையும் யோசிக்க முடியாத நிலையில் இருப்போம். ஸ்மார்ட்போன் பயன்பாடு இல்லாத நிலையில், புதிது புதிதாக சிந்திக்க வாய்ப்பு ஏற்படும். சுற்றுலா, நண்பர்களுடன் வெளியில் நேரம் செலவிடுதல் போன்ற மனதுக்கு நெருக்கமான விஷயங்களில் ஈடுபட மூளை உங்களைத் தூண்டும்.
-
8 மகிழ்ச்சி
கடைசியாக ஒரு வாரம் கழித்து மீண்டும் ஸ்மார்ட்போன் உங்கள் கையில் கிடைத்ததும் மகிழ்ச்சியாக அதை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். சிலர், மன அழுத்தம், தினசரி வேலைப்பளு போன்றவற்றில் இருந்து ஒரு பிரேக் எடுப்பதற்காக ஒரு வாரம் போன் பயன்படுத்தாமல் இருப்பதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு செய்கிறார்கள். அப்படி செய்யும்போது `மனதில் இருந்த பாரமே இறங்கிடுச்சு’ போன்ற ரிசல்டுகளையும் பெறுவதாகச் சொல்கிறார்கள் சிலர்.
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் செல்போன் பயன்படுத்துகிறோம் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அதன் அடிப்படையில் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டுமா என்பதும் உங்கள் முடிவுக்கே. செல்போனிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் விலகியிருப்பது உங்களுக்கு நேர்மறையான, புத்துணர்ச்சியான முடிவுகளையே அளிக்கும்.
ஒரு நாளைக்கு செல்போனோடு நீங்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?... இந்த முயற்சியை எடுக்க விரும்புகிறீர்கள்.... உங்கள் கருத்துகளை கமெண்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.
0 Comments