நம்மளோட தினசரி பகல் நேர ரொட்டீன்ல என்னைக்காவது ஒருநாள் தூக்கம் வருவதுபோல, ரொம்பவே டயர்ட் ஆக ஃபீல் பண்றது இயல்பானதுதான். ஆனால், எப்போதும் சோர்வாகவும் தூக்க கலக்கத்துடனும் இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். குறிப்பிட்டு சொல்லப்போனால் ஆபத்தானதும்கூட. அதிகம் டயர்ட் ஆவதால் உங்களது அன்றாட வேலையை செய்ய முடியாமல் போகலாம். வாகனங்கள் ஓட்ட முடியாமல் போகலாம். எனவே, இதனை முடிந்தவரை சீக்கிரம் சரிசெய்ய வேண்டும். இப்படியான சோர்வு நிலை ஏன் ஏற்படுகிறது? அதனைபோக்க எளிதாக என்ன செய்யலாம்? என்பதைத்தான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

சரியாக தூங்காமல் இருப்பது!
ஒன்று, இரண்டு நாள் நீங்கள் தூங்காமல் இருந்தால் பிரச்னையில்லை. ஆனால், அதையே வழக்கமாகக் கொண்டு ஒருநாளைக்கு சராசரியாக 7 முதல் 8 மணி நேரம் தூங்காமல் இருந்தால் இந்த சோர்வு நிலைப் பிரச்னை கண்டிப்பாக ஏற்படும். இது காலப்போக்கில் அதிகரித்து குறைந்த நேரம்கூட உங்களால் தூங்க முடியாத நிலை ஏற்படும். உங்களுக்கு சரியாக தூக்கம் வராமல் இருப்பதற்கு Alzheimer’s disease, Cancer, Depression, Head injuries, Intellectual disabilities, Pregnancy, Schizophrenia மற்றும் Stroke ஆகிய பிரச்னைகள்கூட காரணமாக இருக்கலாம். அதுமட்டுமல்ல நினைவில் குறைபாடுகள், எரிச்சல், கவனமின்மை போன்றவையும் ஏற்படும். எனவே, இவற்றைத் தடுக்க எளிமையான வழி சரியான நேரத்தில் தூங்கி எழுவதுதான். அதனை உங்களால் சரியாக செய்ய முடியவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகி இதற்கு தீர்வு காண வேண்டும்.

காபி மற்றும் மது அருந்துதல்
தூக்கத்தின் அளவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தூக்கத்தின் தரமும் முக்கியம். உங்களது மூளை தூக்க நேரத்தில் சரியான தூக்க நிலையை அடைவது முக்கியம். அதற்கு தடையாக இருக்கும் பொருள்களை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன் நீங்கள் காபி அருந்தினால் உங்களது தூக்க நேரத்தை ஒருமணி நேரம் அது குறைக்கும். இதனால், உங்களது தூக்கம் நிச்சயம் பாதிக்கப்படும். அதேபோல, மது அருந்துவதும் உங்களது தூக்கத்தை அதிகளவில் பாதிக்கும். இதனை தடுக்க மிகச்சிறந்த வழி நீங்கள் படுக்கச் செல்லும்முன் காபி மற்றும் மது அருந்துவதைத் தடுக்க வேண்டும். காபியை தூங்குவதற்கு ஆறு மணி நேரத்துக்கு முன்பும் மதுவை நான்கு மணி நேரத்துக்கு முன்பும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

மருந்துகள்கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்!
பல்வேறு உடல் நலப்பிரச்னைகளுக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள்கூட உங்களது தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, மாத்திரைகளில் உள்ள பக்கவிளைவை நீங்கள் முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும். தூக்கத்தில் பாதிப்புகள் ஏற்பட்டால் உங்களது மருத்துவரை சந்தித்து தக்க ஆலோசனைகளைப் பெற வேண்டும். அதற்கு முன்பு நீங்கள் மருந்துகள் சாப்பிடுவதை கண்டிப்பாக நிறுத்தக்கூடாது.

தூக்கத்தில் மூச்சுத்திணறல்
தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது இன்றைக்கு பொதுவான பிரச்னைகளில் ஒன்றாக மாறியுள்ளது. இதனால், 25% ஆண்களும் 10% பெண்களும் பாதிப்படைகின்றனர். இந்தப் பிரச்னையால் தூக்கம் கடுமையாக பாதிப்படையும். மூச்சுத்திணறலின் பாதிப்பைப் பொறுத்து சிகிச்சையின் தீவிரமும் அதிகமாக இருக்கும். அதிக உடல் எடை இருந்தால் அதனைக் குறைப்பது, இயற்கையான காற்றோட்டம் உள்ள இடங்களில் அதிகம் இருப்பது போன்றவை உங்களுக்கு கொஞ்சம் ஆசுவாசத்தை ஏற்படுத்தலாம்.

நார்கோலெப்ஸி (Narcolepsy)
பகலில் நீங்கள் அதிகளவு சோர்வாக இருப்பதாக உணர்ந்தாலும் திடீரென தூங்குவதுபோல நீங்கள் உணர்ந்தாலும் உங்களுக்கு இந்த நார்கோலெப்ஸி என்ற நோய் இருக்கலாம். இது மிகவும் அரிதாகவே ஒருவருக்கு ஏற்படும். தூக்கம் தொடர்பாக மூளையில் பாதிப்பு ஏற்படுவதால் இந்த நோய் உருவாகும். ஹாலுஸினேஷன்ஸ், உணர்ச்சிபெருக்கின்போது வலுவிழந்து காணப்படுவது, பேசவோ அல்லது தூங்கி எழும்பும்போது முடக்கப்பட்டது போன்றநிலை போன்றவை இதனால் ஏற்படும். வாழ்நாள் முழுவதும் இந்த நோய் இருக்கும். ஆனால், தொடர்ந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் தீவிரமான நிலையை அடைவதைத் தடுக்கலாம்.

Also Read: ‘பிரேக் அப் – க்கு பிறகும் நட்பு..!’ – இந்த 5 விஷயங்களையெல்லாம் மறக்காதீங்க!
0 Comments