நம்மளோட பெர்சனல் லுக் பத்தி, கனவுகள் முடங்கிப் போவது பத்தி, வாழ்க்கைய பத்தி நிறையவே கவலைகள் இருக்கும். இதே மாதிரியான கவலைகள்ல இருந்து மீண்டு தங்கள மட்டுமே நம்பி வாழ்க்கைல கான்ஃபிடன்டா ஜெயிச்சு வாழ்றவங்களோட கதைகளை பார்க்கலாமா?
-
1 எல்லார் வாழ்க்கைலயும் ஒரு அதிசயம் நடக்கும்!
``என்னுடைய திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. எனக்கு 23 வயதாக இருக்கும்போது நான் அவரைச் சந்தித்தேன். அவர் ஒரு மருத்துவர். மிகவும் துணிச்சலானவர் என்று எனக்கு தெரிந்தது. எனவே, `உனக்கு அவரைப் பிடித்திருக்கிறதா?’ எனப் பெற்றோர்கள் என்னிடம் கேட்டபோது, ஆமாம் என்றேன். முதல் ஒரு வருடம் எங்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. போக போக அவர் வேலை காரணமாக தாமதமாக வீட்டுக்கு வந்தார். எவ்வளவு சோர்வாக இருந்தாலும் என்னுடன் பேச முயற்சி செய்வார். நான் கர்ப்பம் அடைந்தேன். அதன்பின்னர், எனது கணவரின் அணுகுமுறையில் மாற்றத்தைக் கவனித்தேன்.
காலை உணவை தயார் செய்ய நேரமாகிவிட்டால், `கர்ப்பம் அடைந்த முதல் நபர் நீ இல்லை’ என்று கோபப்படுவார். அவர் நடவடிக்கைகளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அவரை எதிர்கொள்ள முடிவு செய்தேன். ஆனால், விஷயங்கள் இன்னும் தீவிரமானது. நான் அப்போது ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்தே்ன். வாழ்க்கையில் மிகவும் விரக்தியடைந்த நான் மொட்டை மாடிக்குச் சென்று என் வாழ்க்கையை முடிக்க முடிவு செய்தேன். ஆனால், அந்த தருணத்தில்தான் அதிசயம் நிகழ்ந்தது. என் குழந்தை என்னை முதன் முறையாக உதைத்ததை உணர்ந்தேன். என் குழந்தை நான் வாழ வேண்டும் என்று விரும்பியது. நான் ஒரு அடி பின் வாங்கினேன்.
வளைகாப்பு முடிந்து பிரசவத்துக்காக எனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றேன். அப்போதும்கூட துன்புறுத்தல் முடிவுக்கு வரவில்லை. வரதட்சணைக் கேட்டு பெற்றோரை துன்பப்படுத்தினர். பிரசவ நாளில் கூட எனது கணவர் மருத்துவ பில்களை செலுத்த மறுத்தார். அனைத்தையும் மீறி அவருடைய வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தேன். ஆனால், மூன்று மாதங்களில் பிரிந்து வந்தோம். `அவள் திரும்பி வந்தால், என்னுடைய பெற்றோர்களுடன் தங்க வேண்டும்’ என்று எனது கணவர் கூறினார். அதுதான், கடைசி என்னுடைய திருமண வாழ்க்கையின் கடைசி நாளாக இருந்தது.
இன்று எனது பெற்றோரின் உதவியுடன் மகனை வளர்க்கிறேன். சில மாதங்களுக்கு முன்புதான் அவனுக்கு முதல் பிறந்தநாளைக் கொண்டாடினோம். எங்களுக்கென சிறிய உலகத்தை உருவாக்கி வாழ்ந்துட்டு இருக்கோம். நாங்கள் இங்கே மகிழ்ச்சியாக இருக்கிறோம். இன்றும் பலர், `அட்ஜஸ்ட் பண்ணி வாழணும்; திரும்பி அவர்கிட்டயே போ’ என்றெல்லாம் சொல்லுவாங்க. ஆனால், அவற்றுக்கெல்லாம் செவி சாய்ப்பதை நிறுத்திவிட்டேன். ஏனெனில், நான் என்ன செய்கிறேனோ, அதை தான் என்னுடைய மகனும் செய்வான். அவன் என்னிடமிருந்து கற்றுக்கொள்வான். நான் அத்தகைய டாக்ஸிக் சமூகத்தில் மகன் வளருவதை விரும்பவில்லை. என் மகன் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்பட வேண்டியவர் என்பதை அறிந்து வளருவான்” என்கிறார் ஷ்ரவனின் அம்மா.
0 Comments