குழந்தை வளர்ப்பு முறை 1990களில் இருந்ததை விட முற்றிலும் மாறியிருக்கிறது. இன்றைய சூழலில் பெரும்பாலான குடும்பங்கள், பெற்றோர் – குழந்தைகள் என்றளவில் சுருங்கிவிட்டன. கூட்டுக் குடும்பங்களைக் காண்பது அரிது என்ற சூழலில், குழந்தை வளர்ப்பில் இளம் பெற்றோர்கள் நிறைய சிக்கல்களை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கிறது. கிராமங்களில் வளரும் குழந்தைகளின் சூழலுக்கும் நகர்ப்புறங்களில் வளரும் குழந்தைகளின் சூழலுக்கும் பெரியளவில் வித்தியாசங்கள் இருக்கின்றன.
கூட்டுக் குடும்பமாக இருக்கும்போது குழந்தைகளுக்கு தாத்தா – பாட்டி உள்ளிட்ட பல உறவுகளின் அரவணைப்பு கிடைப்பதோடு, அவர்கள் வளரும் சூழலும் ஆரோக்கியமாக இருக்கிறது என்கின்றன ஆய்வுகள். அதேநேரம், தாய் – தந்தை அரவணைப்பில் வளரும் குழந்தைகள் வளரும்போது, அவர்களின் அனைத்து தேவைகளையும் பெற்றோர்களே கூட இருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய நிலை.
நீங்கள் எப்படிப்பட்ட பெற்றோர்.. இந்த 6 விஷயங்கள் உங்களிடம் இருந்தால் நீங்க டாக்சிக் பேரண்ட் என்கிறார்கள் நிபுணர்கள்.
Also Read – எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணுமா – அப்போ இந்த 7 வழிகளை ஃபாலோ பண்ணுங்க!
-
1 கருத்து
சில பெற்றோர்கள், தங்கள் கருத்தோடு குழந்தைகள் எப்போதும் ஒத்துப்போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குழந்தைகள், தங்கள் மாற்றுக் கருத்தை வெளிப்படுத்த அவர்கள் அனுமதிப்பதில்லை. இந்த அணுகுமுறை தவறானது என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள். குழந்தைகள், சுதந்திரமாகத் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும்படியான ஆரோக்கியமான சூழல் அவர்களின் மனநலனுக்கு முக்கியமானது.
-
2 தனித்துவம்
பெற்றோர்களில் சிலர், தங்கள் குழந்தைகளுக்கான தனித்துவமான இடத்தைக் கொடுப்பதில்லை. இவர்கள், குழந்தைகளைத் தங்களின் நீட்சியாகவே பார்க்கிறார்கள். குழந்தைகள் தனியாக எதையும் செய்வதையோ அல்லது செய்ய முயற்சிப்பதையே இவர்கள் பயத்தோடே அணுகிறார்கள். பெற்றோர்களின் இந்த மனநிலை குழந்தைகள் மனதில் அச்ச உணர்வையே விதைக்கும் என்கிறார்கள்.
-
3 குழந்தைகளின் பிரைவசி
குழந்தைகளுக்கு பிரைவசியா என்று கேட்பவரா நீங்கள்? அப்படியென்றால் நிச்சயம் உங்கள் மனநிலையை நீங்கள் மாற்றிக்கொண்டே ஆக வேண்டும். பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் பிரைவசி இருக்கிறது. அவர்களுக்கான இடத்தைப் பெற்றோர்கள் கொடுக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமான மனநிலையைக் குழந்தைகளிடம் வளர்க்கும் என்பது குழந்தைகள் நல மருத்துவர்களின் ஆலோசனை. குழந்தைகள் அறைக் கதவை சாத்திக்கொண்டு ஒரு புராஜக்ட் வேலையையோ அல்லது பள்ளி வீட்டுப் பாடத்தையோ செய்யும்போது, சந்தேகத்தோடு அதை அணுகாதீர்கள்.
-
4 கோபம் - பயம்
குழந்தைகள் தவறுகள் செய்யும்போது அவர்களைப் பயமுறுத்தி அல்லது கோபத்தில் சத்தம்போட்டு அதைத் திருத்த முயலும் பெற்றோரா நீங்கள்... ஆம் என்பது உங்கள் பதிலாக இருந்தால், அது நிச்சயம் கைகொடுக்காது என்பதே உண்மை. நீங்கள் அவர்களின் நன்மைக்காகவே செய்தாலும், செய்யும் முறையில் இருக்கிறது தவறு. மாறாக, அவர்கள் செய்யும் சிறு தவறுகள் குறித்து பேசிப் புரிய வைக்க முயற்சி செய்யலாம். அது அவர்களுக்குப் புரியும் நேரத்தில், மீண்டும் ஒருமுறை அந்தத் தவறை செய்ய மாட்டார்கள்.
-
5 கனவுகளைத் திணிப்பது
உங்களால் நிறைவேற்ற முடியாத கனவை உங்கள் குழந்தைகள் நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்காதீர்கள். அவர்களுடைய தனித்துவத்தை அறிந்து, அவர்களின் ஆசைகளைக் கேட்டு அந்த வழியில் சுதந்திரமாக நடைபோட அவர்களுக்கு உதவுங்கள்.
-
6 எண்ணங்கள்
குழந்தைகளின் உணர்ச்சிகள், எண்ணங்களுக்கு மதிப்பளிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் குழந்தைகள்தானே, நாம் சொல்வதையெல்லாம் அவர்கள் கேட்பதில் என்ன பிரச்னை இருக்கிறது என்ற எண்ணம் வேண்டாம். அதேபோல், உங்களது எண்ணங்களை மட்டுமே வைத்து குழந்தைகள் குறித்த எந்தவொரு முடிவுக்கும் வராதீர்கள். அவர்களிடம் பேசி அந்த கருத்துகளையும் தெரிந்துகொண்டு முடிவெடுங்கள். நமது முடிவு குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையே கொடுக்கும். அதனால், என்ன பிரச்னை வந்துவிடப் போகிறது என்று எண்ண வேண்டாம். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து, அவர்கள் தங்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க ஆரோக்கியமான சூழலை அளிப்பதே பெற்றோரின் கடமை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
0 Comments