காதல் என்பது ஒரு மேஜிக்கல் வார்த்தைதான். காதல் இருக்கும் வரை வாழ்க்கை வண்ணமயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஆனால், துரதிஷ்டவசமாக எல்லா காதலும் திருமணத்தில் முடிவது கிடையாது. இன்றைய நவீன சமுதாயத்தில் காதல் தோல்வி என்பது மிகவும் பொதுவாகிவிட்டது என்றாலும் இளைஞர்கள் இந்த காதல் தோல்வியை எளிதாக எடுத்துக்கொள்வது இல்லை. நாம் அதிகம் நேசிக்கும் ஒரு நபர் நம்மை மீண்டும் நேசிக்காமல் இருப்பதை பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அப்படியான சூழ்நிலைகளில் வேலையின் மீதான ஈடுபாட்டை இழக்கிறார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தங்களை அந்நியப்படுத்தி கடுமையான மன அழுத்தத்தில் மூழ்கி விடுகிரார்கள். சிலர் தங்களுடைய வாழ்க்கையை முடிக்கும் அளவுக்குக்கூட சென்றுவிடுகின்றனர். காதல் தோல்வி நிச்சயம் வேதனையானதுதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், காதல் தோல்வியடைந்த நேரங்களில் வேறு சில விஷயங்களில் நமது கவனத்தைச் செலுத்தினால் எளிதாக நம்மால் அதிலிருந்து மீண்டு வர முடியும். அதற்கான வழிகளைதான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்!
உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்..
காதல் தோல்வியை பலராலும் சமாளிக்க முடியாத நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ரியாலிட்டியை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான். உங்களது காதல் தோல்வியை மீண்டும் மீண்டும் நினைத்து அதற்கான காரணங்களைத் தேட தொடங்குவது உங்களது மன அழுத்தத்தை இன்னும் அதிகமாக்குமே தவிர ஒருபோதும் உங்களை, உங்களது காதலை மீட்டுத்தரப் போவதில்லை. காதல் தோல்வி என்பது உடலில் ஏற்பட்ட காயம் அல்ல. எதாவது மருந்தினைப் பயன்படுத்தி அதனை குணப்படுத்த. உண்மையில் சொல்லப் போனால் அது வலிகூட கிடையாது. காதல் தோல்வி என்பது வெறுமையான உணர்வை ஏற்படுத்தும். இந்த வெறுமையான உணர்வால் துயரங்களில் மூழ்குவீர்கள். மீண்டும் இங்கே குறிப்பிட விரும்புவது.. `இந்தத் துயரங்களால் ஒருபோதும் உங்களது காதலை மீட்டுத்தர முடியாது’ என்பதைதான். எனவே, உங்களது காதல் தோல்வியை புரிந்து அதனை ஏற்றுக்கொண்டு கடந்து வர நீங்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். யதார்த்தத்தை மறுப்பது அதிக ஆபத்தை மட்டுமே ஏற்படுத்தும்.
நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்..
உங்களது சோகங்களில் இருந்து வெளிவருவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, உங்களது உணர்வுகளை மதிக்கும், புரிந்துகொள்ளும் நண்பர்களுடன் சோகத்தை நீங்கள் பகிர்ந்துகொள்வதுதான். `சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்’னு உங்களுக்கு உள்ளாகவே சோகத்தை நீங்கள் வைத்திருந்தால் அது அதிக வலியையே ஏற்படுத்தும். நண்பர்களிடம் உங்களது கஷ்டத்தைப் பகிர்ந்துகொள்வதால் பெரிய பாரத்தை இறக்கி வைத்ததுபோல நீங்கள் உணரலாம். மேலும், நீங்கள் தனியாக இல்லை என்ற எண்ணம் இதன்மூலம் வரும். எவ்வளவு கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் சாய்வதற்கு ஒரு தோள்பட்டையும் நாம் பேசுவதை கேட்பதற்கு காதுகளும் இருந்தால் எப்படியான பிரச்னைகளில் இருந்தும் வெளிவந்துவிடலாம் என்ற நம்பிக்கை கிடைக்கும். இந்த நம்பிக்கை மூலம் நீங்கள் வாழ்வில் நீண்ட தூரம் பயணிக்கலாம். அதேபோல தனிமையான சூழலில் இருப்பதை முடிந்த அவரை தவிருங்கள். தனிமையான சூழல் உங்களது எண்ணங்களை மோசமாக்கும். உங்களை நேசிக்கும் நபர்களுடன் உங்களது நேரத்தை செலவிடுங்கள். அவர்களுடன் நேரத்தை செலவிடும்போது தனிமையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
பொழுதுபோக்குகளில் நேரத்தை செலவிடுங்கள்..
உங்களுக்கு மிகவும் ஆர்வமுள்ள துறையில் உங்களது நேரத்தை அதிகமாகவே செலவிடலாம். உங்களுக்கு பிடித்தமான விஷயங்களில் உங்களது நேரத்தை செலவிடுவதால் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்வதோடு சோகமான மனநிலையில் இருந்தும் உங்களை திசைத்திருப்பிக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக நீங்கள் சமைக்க அதிகம் விரும்புபவர்களாக இருந்தால் அதில் புதுவிதமான டிஷ்களை செய்து உங்களது நேரத்தை செலவிடலாம், புத்தகங்கள் வாசிக்கலாம், உடற்பயிற்சி செய்யலாம், பைக் ரைடுகள் செல்லலாம், நடைப்பயணங்களை மேற்கொள்ளலாம். உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் நீங்கள் அதிக நேரம் செலவிடுவதால் அந்தத் துறையிலேயே உங்களது வேலை வாய்ப்புகளை அமைத்துக்கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம்.
உங்களது காதலரை முழுமையாகத் தவிருங்கள்..
உங்களது எக்ஸ் காதலரை முழுமையாக தவிர்ப்பதே சிறந்தது. அவர்களுடன் அடிக்கடி பேசுவது, டெக்ஸ்ட் செய்வது போன்றவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும். இதனால், அவர்கள் இல்லாமலும் உங்களால் வாழ முடியும் என்ற நம்பிக்கை கிடைக்கும். உங்களது காதலரின் வீடுக்கு அருகில் வசிக்கிறீர்கள், உங்களுக்கு பொதுவான நண்பர்கள் உள்ளனர் போன்ற காரணங்களால் உங்களது காதலரை பார்ப்பதை தவிர்க்க முடியாத சூழல் ஏற்படலாம். அப்படியான சூழ்நிலைகளில் உங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. நீங்கள் அவர்களிடம் இருந்து நகர்ந்து உங்களது வாழ்க்கையை சிறப்பாக கையாள்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு காட்டுங்கள். நீங்கள் உங்களது முன்னாள் காதலருடன் ஏதேனும் ஒருவகையில் தொடர்பில் இருக்கும்போது உங்களது எதிர்காலத்தை நோக்கி உங்களால் பயணிக்க முடியாது. கடந்த காலங்களிலேயே தேங்கி விடுவீர்கள். இதனை நீங்கள் நினைவில் வைத்துக்கொண்டு உங்களது ஒவ்வொரு செயல்களையும் செய்ய வேண்டும்.
ஒரு ஃப்ரீ அட்வைஸ்..
காதல் தோல்வியால் சிலர் ஒட்டுமொத்தமாக காதலின் மீதான நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். ஆனால், காதலின் மீதான நம்பிக்கையை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான அன்பு இல்லை என்று உணரத் தேவையில்லை. அவ்வாறு உணர்ந்தால் உங்களது வாழ்வில் மீண்டும் வரும் உண்மையான காதலை உங்களால் உணர முடியாத நிலை ஏற்படும். உங்களுக்கான சரியான நபர் வருவார் என்பதை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும். அவர் உங்களை மிகுந்த அன்புடன் சுயமரியாதையுடன் நடத்துவார் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் விட்டுப்போன அல்லது உண்மையற்ற காதலுக்காக உங்களது வாழ்க்கையை நீங்கள் வீணாக்குவது புத்திசாலித்தனம் அல்ல. உண்மையாக அன்பைத் தரும் நபரை சந்திக்க எப்போதும் தயாராக இருங்கள். அவர்கள் வந்தவுடன் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் மேஜிக்குகளைப் பார்க்க நம்பிக்கையோடு காத்திருங்கள். அந்த மேஜிக் எப்போ வேணாலும் நடக்கலாம்.
Also Read : போரினால் வாழ்க்கையை இழந்த லாங் – யார் இவர்?