நட்பு

Male vs Female Friendship – என்ன வித்தியாசம்?

உலகத்தில் மிகவும் அற்புதமான விஷயங்களில் நட்பும் ஒன்று. ஒரு புத்தகம் 100 நல்ல நல்ல நண்பர்களுக்கு சமம் என்பார்கள். நாம் இதனைக் கொஞ்சம் மாற்றி ஒரு நல்ல நண்பன் 100 புத்தகங்களுக்கு சமம் என்று கூறலாம். ஆமால், ஒரு நல்ல நண்பன் வாழ்க்கையில் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டம் – நஷ்டங்கள் வந்தாலும் அதனை சமாளிப்பதற்கான ஊக்கம் கிடைக்கும். வேறு எந்த உறவுக்கும் இத்தகைய சக்தி கிடையாது என்றே கூறலாம். சரி.. நட்புகளில் ஆண் – ஆண் நட்புக்கும் பெண் – பெண் நட்புக்கும் வித்தியாசம் உள்ளதா என்று கேட்டால் பெரும்பான்மையான ஆராய்ச்சிகள் ஆம் என்றுதான் கூறுகின்றன. உண்மையிலேயே இந்த இரண்டு நட்புக்கும் என்ன வித்தியாசங்கள் உள்ளன. இதனைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

நண்பர்கள்
நண்பர்கள்

* ஆண் – ஆண் நட்புக்கும் பெண் – பெண் நட்புக்கும் இடையே ஒற்றுமைகளைவிட பல்வேறு வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆண்கள் செயல்பாடுகளை அதிகமாகவும் உணர்வுகளை குறைந்த அளவும் பகிர்ந்துகொள்பவர்களாகவும் பெண்கள் உணர்வுகளை அதிகளவிலும் செயல்களை குறைந்த அளவில் பகிர்ந்துகொள்ளக்கூடியவர்களாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக பார்க்கப்படுகிறது. 

* பெண்களுக்கு இடையேயான நட்பைவிட ஆண்களுக்கு இடையேயான நட்பு மிகவும் சாதாரணமாக இருக்கும். பெண்களின் நட்பு தொடர வேண்டும் என்றால் அவர்கள் நண்பராக கருதும் நபருடன் அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நீண்ட நாள் கழித்து பெண் நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் அந்த நட்பு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஆண்கள் நட்பில் தொடர்ந்து அவர்கள் தொடர்பில் இல்லாவிட்டாலும் பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும்போது அவர்களை சாதாரணமாகவே ட்ரீட் செய்வார்கள். 

* ஆண்கள் நட்பில் ஒருவருக்கொருவர் மிகவும் சாதாரணமாக எதிர்பார்ப்புகள் இன்றி மகிழ்ச்சியாக உதவிகளை செய்கிறார்கள். பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகம் தொடர்பான புரோஜெக்டுகளில் ஒன்றாக வேலை செய்கிறார்கள். அறிமுகமான நிலையில் இருந்தாலும் அவர்களுடன் எளிதாக ஹேங்கவுட்களை செய்கிறார்கள். பல நண்பர்கள் இணைந்து வெளியே செல்கிறார்கள். ஆனால், பெண்கள் மத்தியில் ஆண்கள் நட்பில் இருப்பது போன்ற எதார்த்தம் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும், அவர்கள் ஒன்று அல்லது இரண்டு நண்பர்களுடன் மட்டுமே வெளியே செல்ல விரும்புகிறார்கள்.

* ஆண்கள் நட்பில் ஒருவரை ஒருவர் எளிதாக கேலி செய்து வேடிக்கையாக விளையாடுகின்றனர். ஆனால், பெண்கள் நட்பில் கேலி செய்தால் அவர்களுடைய நண்பர்களின் உணர்வுகள் பாதிப்படையக்கூடும் என்று எண்ணி கேலி செய்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றனர். 

* ஆண்களின் நட்பைவிட பெண்களின் நட்பு எளிதில் உடையக்கூடிய ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பெரிய சண்டை அல்லது வாதங்களுக்குப் பிறகு ஆண்கள் மீண்டும் சகஜமாக பேசிக்கொள்வார்கள். ஆனால், பெண்கள் தங்களது நண்பர்களிடையே சண்டை மற்றும் வாதங்களுக்குப் பிறகு சகஜமாக பேசிக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

* ஒரு ஆண் இன்னொரு ஆணை எளிதில் நண்பர்களாக ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் நண்பர்களாக ஆவதற்கு மிகப்பெரிய விஷயங்கள் எதுவும் நடைபெறத் தேவையில்லை. ஆனால், பெண்கள் நட்பு அவ்வளவு எளிதாக உருவாவதில்லை. ஒரு பெண் மற்றொரு பெண்ணை அவ்வளவு எளிதில் நண்பராக ஏற்றுக்கொள்ள மாட்டார். அவர்கள் மற்றொரு பெண்ணை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட நேரம் ஆகும்.

ஆண் – ஆண் மற்றும் பெண் – பெண் நட்பு இடையேயான வேறுபாடுகளாக நீங்க என்னலாம் நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!

Also Read : இன்டர்வியூவை பாஸிட்டிவா எதிர்க்கொள்ளலாம் வாங்க… டிப்ஸ்… டிப்ஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top