மூடர்கூடம் படத்துல வீட்டு பிரச்னை, சோத்து பிரச்னை, வேலை பிரச்னைனு ஆயிரம் பிரச்னை இருக்குனு ஹீரோ மூச்சு விடாமல் டயலாக் பேசுவாருல. சென்னைல இருந்து கன்னியாகுமரிக்கு பஸ்ல போறவங்கக்கிட்ட அவங்க டிராவல் எக்ஸ்பீரியன்ஸ் கேட்டா இதேமாதிரிதான் பஸ் பிரச்னை, பக்கத்துல இருக்குறவன் பிரச்னை, சாப்பாடு பிரச்னை, டிராஃபிக் பிரச்னை, ஃபோன் சிக்னல் பிரச்னைனு மூச்சு விடாமல் பல பிரச்னைகளை சொல்லுவாங்க. அதைப் பத்திதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.
கன்னியாகுமரிக்கு போறவங்களோட முதல் பிரச்னை பஸ்தான். ஆனால், எல்லாருக்கும் புடிச்ச சாப்பாடுல இருந்து ஆரம்பிப்போம். சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல இருந்து பஸ் கிளம்பிச்சுனு வைங்க. சாப்பாட்டுக்கு நைட்டு விழுப்புறம்ல நிப்பாட்டுவாங்க. அப்போதான், அப்பாடானு செட்டில் ஆகி நல்ல ஆழ்ந்த தூக்கத்துக்கு போய்ருப்போம். பஸ் நிக்கிறதுகூட தெரியாது. திடீர்னு சப்பு சப்புனு செவுட்டுலயே அரையுற மாதிரி சவுண்ட் கேக்கும். என்னடானு கடுப்புல எழும்பி பார்த்தா, சாப்பாட போறவங்க ஹோட்டலுக்கு போங்க, ஒன்னுக்கு போறவங்க பாத்ரூம் போங்கனு சொல்லுவானுங்க. ஏன்டா, பஸ்ல அத்தனை தடவை தனியா டிராவல் பண்ணிருக்கேன், வேலை பார்க்குறேன், படிச்சிருக்கேன். சாப்பிட ஹோட்டலுக்குப் போணும், ஒன்னுக்கு போக ரெஸ்ட் ரூம் போகணும்னுகூடவாடா தெரியாம இருக்கும். ரைட்டு விடுங்க. இதுல அவங்களுக்கே டஃப் கொடுக்குற மாதிரி நம்ம ஊர்க்காரங்க அவங்க்கிட்ட போய்ட்டு “ஒன்னுக்கு எப்படி போணும்”னு கேப்பாங்க. ஏன்டா, உங்க ஷார்ட் ஃபார்ம்க்கு அளவே இல்லையா? ஆல்ரெடி எல்லா ஊர்க்கார்னும் நம்மள கலாய்க்கிறாங்க. இதுல நீங்க வேற கன்டென்ட் கொடுக்குறீங்க!
விழுப்புரமை ட்விட்டர்ல எப்படி ஓட்டுவாங்க. ஏன்டா, ஒன்னுக்கு இருக்குற ஊர்ல இருந்து வந்துட்டு இவ்வளோ பேசுறியானு கேப்பாங்கள்ல. அதுக்கு முழுக்க முழுக்க காரணம் தேட் செவுட்டுல அரையும் ஆஃபிஸர்ஸ் தான். எப்படியும் ஊருக்குப் போகும்போது அவசர அவசரமா கிளம்புவோம். பிஸ்கட் பாக்கெட், தண்ணி பாட்டில் மட்டும்தான் வாங்கிருப்போம். பசிக்குமேனு ஹோட்டலுக்குள்ள போனாலே, ஏன்டா ஹோட்டலுக்கு வந்து என் தாலிய அறுக்குறீங்கன்ற மாதிரியே பார்ப்பானுங்க. அதுமட்டுமில்ல உள்ள போகும்போதே சேட்டை படத்துல சந்தானம், ஆர்யா வீட்டுக்குள்ள போற ஃபீல்தான் வரும். வாசல்ல வந்து நின்னாலே, வசீகரால வடிவேலு சொல்ற மாதிரி போ, போ, போனு உள்ள புடிச்சு தள்ளுவாங்க. சரி, உள்ளப்போய் வேற என்னத்த சாப்பிடபோறோம். 2 இட்லி, 1 தோசை இல்லைனா 2 பரோட்டா.இட்லி, தோசைக்கு கடைசியா மாவு ராஜ ராஜ சோழன் காலத்துல அரைச்சிருப்பாங்கனு நினைக்கிறேன். பரோட்டாவலாம் பிச்சு சாப்பிடுறதுக்கு புரோட்டீன் ஷேக் குடிச்சிட்டுப் போகணும். சால்னா, சட்னி அப்டின்ற பேருலலாம் ஒண்ணு ஊத்துவாங்க. ஏன்டா, நரகத்துலயாடா ஹோட்டல் வைச்சிருக்கீங்கனு கேட்க தோணும்.
சாப்பாடுதான் இப்படி இருக்கு, சரி வெளிய போய் டீயை குடிச்சு மனசை ஆத்துவோம்னு பார்த்தா, அட்லீஸ்ட் அந்த டீ கப்ல இதுதான் டீ-னு எழுதியாவது தரலாம். அதைப் படிச்சாவது மனசு சாந்தி அடையும். முதல் சிப் பண்ணும்போதே நம்மள விரக்தி நிலைக்கு தள்ளிடுவாங்க. அப்படி இருக்கும் டீ. ஏன்டா, ஒரு நல்ல டீக்கூட தரமாட்டீங்களாடா? விழுப்புரம் மேல எந்த வன்மமும் இல்லை. அங்க மோட்டல்ஸ் வைச்சு நம்மள அதிகமா சோதிக்கிற தேட் விழுப்புரன்சியன்ஸ் மேலதான் வன்மம். சரி, எதாவது ஸ்நாக்ஸ் வாங்கலாம்னு போனால். 10 ரூபாய் டிக்கெட் 20 ரூபாய்ன்ற மாதிரிதான் விப்பாங்க. ஒரு தடவை கூட வந்த ஒருத்தர் வாய்விட்டு கேட்டுட்டாரு. “காசு குடுத்துதான வாங்குறோம். ஒரு நல்ல டீ தரமாட்டிங்களா?”னு. வருஷத்துக்கு ஒருதடவை வர்ற உன்னைய நம்பி டெய்லி நல்ல டீ கொடுப்பாங்களா?னு கேக்குறாங்க.
ஸ்நாக்ஸ் கடைக்காரன்கிட்ட எம்.ஆர்.பி 30 தான போட்ருக்குனு கேட்டா, “எம்.ஆர்.பி 30 தான். ஆனால், நான் 50 வாங்குவேன். ஏன் தெரியுமா? உனக்கு வேற ஆப்ஷனே கிடையாது”ன்னுவாங்க. என்னடா, வில்லன் ரேஞ்சுக்கு பேசுறீங்க? கடைசியா பஸ்ல ஏறும்போது திரும்பி அந்த கடையெல்லாம் பார்த்து நல்லாருங்கடா சொல்லிட்டுதான் பஸ்ல ஏறுவோம். டீன்ற பேருல கொடுக்குற அந்த சுடுத்தண்ணியை குடிக்கிறதுக்குள்ள கன்டெக்டர் வந்து, ஏறு ஏறு நேரமாச்சுனு மாட்டு வண்டில ஏத்துற மாதிரி ஏத்துவாங்க. சார், டீ இன்னும் குடிக்கலைன்னா, டிரைவர்கிட்ட “இவர் முகத்தை நியாபகம் வைச்சிக்கோ அடுத்த ட்ரிப்ல ஏத்திட்டுப் போவோம்”னு கலாய்ப்பாங்க. சூடு, சொரணை இல்லாத டீக்கு மானத்தையெல்லாம் அடகு வைச்சு எந்தவித ஆக்ஷனும் எடுக்க முடியாத சிச்சுவேஷன்ல தள்ளிருவாங்க.
நாகர்கோயில்னு போர்டு போட்ட பஸ்ல ஏறும்போது வர்ற ஃபீல் இருக்கே. அது செமயா இருக்கும். ஆனால், பஸ்ல சில கன்டெக்டர்கள் ஏறுன உடனே “எங்கப்போணும்?, வழில நிக்காது!, சில்லறை இல்லையா?”னு வடிவேலுக்கிட்ட சிசர் மனோகர் பேசுற மாதிரி கேக்கும்போது பேசாமல் பல்லக் கடிச்சிட்டு சென்னைலயே இருந்துரு பரமானு மனசு சொல்லும். புக் பண்ணி ஏறுனா பெருசா பிரச்னை இல்லை. ஆனால், நாம தனியா சிங்கிள் சீட் புக் பண்ணியிருப்போம். அப்போ, நம்ம நேரத்துக்கு கப்புளா வருவாங்க. எல்லாரையும் பார்த்துட்டு, நம்மக்கிட்ட வந்து, “தம்பி அங்க மாறி உட்காரு”ன்னுவாங்க. “ஏன்டா, மழை, யுவன் சாங்ஸ், வீல் சிப்ஸ், ஃபீல் பண்ணனும்னு முன்னாடியே ஜன்னல் சீட் புக் பண்ணிட்டு வந்து உட்கார்ந்துருக்கேன். மனசாட்சியே இல்லாமல் அங்க போய் உட்காருன்ற! மாறி உட்கார முடியுமா?னு கூட கேட்காம, உட்காருனு ஆர்டர் போடுறீங்க” என்ன ரங்கா நியாயமா இதெல்லாம்?
சரி, சீட் மாறி உட்கார வைச்சதும் பக்கத்துல ஒருத்தன் இருப்பான். நாமளே ஊருக்குப் போற அந்த 12, 13 மணி நேரம் நிம்மதியா, அமைதியா, ஜென் நிலைல இருக்கணும்னு நினைப்போம். ஆனால், அவன் தம்பி பேரென்ன, என்ன பண்றீங்கனு ஆரம்பிப்பான். குடும்பக்கதைல இருந்து தொடங்கி கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி பஸ்ல ஏறுன கதை வரைக்கும் சொல்லுவான். அவன் சொல்லி முடிக்கிறதுக்குள்ள திருச்சி வந்துரும். ஏன்டா, பஸ்ல கேக்குறதுக்கு கஷ்டப்பட்டு பிளே லிஸ்ட்லாம் ரெடி பண்ணி வைச்சிருந்தேன். மொத்தமா அதுல மண்ணள்ளி போட்டுட்டேல்ல?னு நினைப்போம். ஒருதடவை ஒரு பார்ட்டைம் ஜோசியன் கிட்ட மாட்டினேன். என்னெல்லாமோ கேட்டான். நானும் சொன்னேன். ராமானுஜம் தம்பி மாதிரி கணக்குலாம் போட்டு பார்த்துட்டு, வாழ்க்கைல உறுப்பட மாட்ட, உனக்கு கல்யாணம் ஆகாது, நீ நினைக்கிற எதுவும் நடக்காதுனு சாபம் போடுற மாதிரி சொல்றான். ஏன்டா, இதெல்லாம் உங்கிட்ட கேட்டனா? எனக்குனே வருவீங்களாடா? இன்னொரு டைப் இருக்காங்க. கால தூக்கி தலைல வைப்பானுங்க. கைய தூக்கி மூஞ்சில வைப்பானுங்க. நல்ல குற்றாலத்துல இருக்க வேண்டியவங்கலாம் சுத்தி உட்கார்ந்து அட்டகாசம் பண்ணுவாங்க. எஸ்பெஷலி தேட் இந்திய குடிமகன்கள் இருக்காங்களே. ஒருத்தன் பஸ்ல பெப்சி பாட்டிலோட ஏறுனா, சம்பவம் இருக்குனு அர்த்தம்.
Also Read: `எம்.ஜி.ஆரை விட பெரிய வள்ளல் நான்தான்’ – பழனிபாபா அலப்பறைகள்!
சென்னைல இருந்து கிளம்பும்போது சந்திக்கிற மிகப்பெரிய பிரச்னை டிராஃபிக். பெருங்களத்தூர் தாண்டுறதுக்கு முன்னாடி உயிர் போய்ட்டு உயிர் வர்ற மொமண்ட்தான் இருக்கும். சரி, கன்டெக்டர்கிட்ட போய் எப்போ நாகர்கோயில் போவோம்?னு கேட்டா, “போனதும் சொல்லட்டா?”னு நக்கல் பண்ணுவாங்க. இன்னும் சிலர் பஸ்க்கிட்ட பேசுவாங்க. அடேய், விட்டா கிறுக்கன் ஆக்கிடுவீங்கள்ல? சரி, பஸ் போய்கிட்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அப்புறம் எங்கப்போறோம்னு தெரியாது. ஒருகட்டத்துக்கு அப்புறம் பாட்டு கேக்க சலிப்பா இருக்கும். சரி, நமக்கு புடிச்சவங்க யாருக்காவது ஃபோன் பண்ணுவோம்னு பண்ணுவோம். அவங்களும் எப்பவும் இல்லாமல் அன்னைக்கு நல்லா பேசுற மூட்ல இருப்பாங்க. அப்போ, வைச்சாம் பாரு ஆப்புனு சிக்னல் வந்து நிக்கும். “நி… ச… ப… ம… க” இப்படி ஸ்வரங்கள் மட்டும்தான் அவங்க பேசுறதுல கேட்கும். அட போங்கடானு கண்ணை மூடி தூங்கும்போது, பக்கத்துல இருக்குறவனுக்கு ஃபோன் வரும். அவன் ஊருக்கே பதில் சொல்லுவான். இவனுக்கு மட்டும் எப்படி சிக்னல் கிடைக்குது?னு கொஞ்சம் வயித்தெரிச்சலோட யோசிச்சு முடிச்சு. லைட்டா கண்ணை மூடுனா. நாகர்கோயில் வந்துடுச்சுன்னுவாங்க. இவங்க மத்தில வாழ்றது கஷ்டம்னு தெரியும். இப்போ, நிம்மதியா டிராவல் பண்றது எவ்வளவு கஷ்டம்னு தெரியுதா?
தமிழ்நாட்டுலயே அதிக தூரம் டிராவல்னா அது சென்னை – கன்னியாகுமரிதான். ஆனால், அந்த டிராவல்ல இவங்க கொடுக்குற டார்ச்சர்ல இன்னொரு தடவை ஊருக்குப் போகனும்னாலே செம காண்டாகும். இருந்தாலும் சிலர் அன்பு, ஊருக்குப்போற ஃபீல் எல்லாம் சேர்த்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும். நீங்க இங்க டிராவல் பண்ணிருந்தா, உங்களுக்கான எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்துச்சுனு கமெண்ட்ல சொல்லுங்க!