தினசரி சுழற்சி முறை வாழ்க்கையில் இருந்து விடுபட்டு குடும்பத்தோடு, நண்பர்களோடு, உறவுகளோடு நேரம் செலவிடவும் மனதை புத்துணர்ச்சியாக்கவும் பயணம் உதவும். பனி படர்ந்த மலைகளைப் பார்த்துக்கொண்டே ஒரு கப் டீ குடிக்கும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. சுற்றுலா அல்லது பயணம் போக நீங்கள் முடிவு செய்துவிட்டால், உரிய திட்டமிடல் அவசியம். என்னதான் நாம் திட்டமிட்டாலும் நமது பயணத்தின்போது சில பிரச்சனைகள் எழவே செய்யும். அவற்றையெல்லாம் கடந்து போனால்தான் நமது பயண அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.
பயணம் அல்லது சுற்றுலாவின்போது ஏற்படும் சில பொதுவான பிரச்னைகளைப் பார்க்கலாம்.
-
1 வயிறு பிரச்னை
நம்மில் பெரும்பாலானோர் பயணங்களின்போது இந்தப் பிரச்னையை எதிர்க்கொண்டிருக்கலாம். நீண்டதூர பயணங்களின்போது திடீரென வயிறு பிரச்னை ஏற்படலாம். அந்த மாதிரியான சூழல்களில் கையில் மாத்திரை எதுவும் இல்லையே என பதற்றப்படாமல், அருகில் இருக்கும் ஆயுர்வேத மருந்துக் கடைகளை அடையாளம் காணுங்கள். அங்கு கிடைக்கும் ஹிங்கோலி போன்ற மாத்திரைகள் உங்களுக்கு உதவலாம். அதுபோன்ற கடைகள் எதுவும் இல்லையா... கவலையை விடுங்கள், சாதாரண டீ மூலமே இந்தப் பிரச்னையிலிருந்து உங்கள் நிவாரணம் கிடைக்கலாம். டீயில் இஞ்சியைச் சேர்த்து பருகுங்கள் அல்லது எலுமிச்சம் பழச்சாறு அருந்தலாம். டீயில் மிளகுத் தூள் சேர்த்து பருகுவதும் கைகொடுக்கும்.
-
2 உடல் வலி
ஆஃப் ரோடு, ஆன் ரோடு என எந்த சாலைகளில் பயணம் மேற்கொண்டாலும் உடல்/தசை வலியை நாம் பொதுவாக எதிர்க்கொள்வதுண்டு. எந்த இடங்களில் எல்லாம் வண்டியை நிறுத்துகிறீர்களோ அல்லது பேருந்து, ரயிலில் பயணம் செய்தால் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் சிறிய அளவில் உடலுக்கு வேலை கொடுத்து சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்து ரிலாக்ஸாகுங்கள்.
-
3 குமட்டல் உணர்வு (Motion sickness)
நீண்டதூர பயணங்களின்போது நாம் எதிர்க்கொள்ளும் பொதுவான பிரச்னை இது. அப்படி குமட்டல் உணர்வு ஏற்படும்போது காரில் பயணித்தால், காரின் முன்சீட்டில் அமர்ந்து குறிப்பிட்ட புள்ளி அல்லது வானத்தின் குறிப்பிட்ட இடத்தை நோக்கி பார்வையைக் குவித்து உங்கள் மனதை ஒருமுகப்படுத்துங்கள். அது முடியாவிட்டால் கண்களை மூடி சிறிதுநேரம் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் கவனத்தை வேறு விஷயங்களை நோக்கி மடைமாற்ற உதவியாக இருக்கும். சில நேரங்களில் இப்படிச் செய்வதால் குமட்டல் உணர்வு மறைந்துகூட போகலாம். இசையை ரசிப்பது உள்ளிட்ட உங்களுக்குப் பிடித்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும் அதிலிருந்து நீங்கள் விடுபடலாம்.
-
4 உடைமைகள் இழப்பு (Baggage Lost)
பயணங்களில்போது நாம் உடன் எடுத்துச் செல்லும் உடைமைகளை (Baggage) சில நேரம் இழக்க நேரிடலாம். அப்படிப்பட்ட சூழலில், பயணத் திட்டத்தில் பெரிய பாதிப்பு ஏற்படலாம். அதனால், செல்லும் இடம் குறித்த தகவல்கள், மேப் உள்ளிட்ட தேவையான பொருட்களை மற்றொரு சிறிய பையில் வைத்து அது எப்போதும் உங்களுடனே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல், பயணம் முடிந்து வீடு திரும்பும்வரை உங்கள் உடைமைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும் மறக்காதீர்கள்.
-
5 பாஸ்போர்ட் இழப்பு (Lost passport)
வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது பாஸ்போர்ட்டைத் தொலைத்து விட்டால், அது உங்களது மொத்தத் திட்டத்தையும் கலைத்துப் போட்டு விடும். அப்படியான சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் எல்லாமே முடிந்துவிட்டது என்ற எண்ணத்துக்குப் போகாதீர்கள். உள்ளூர் போலீஸ் மற்றும் அந்த நாட்டில் இருக்கும் தூதரகம் உங்களுக்கு நிச்சயம் உதவிக்கு வரும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சில விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது மட்டுமே. இதன்மூலம் உங்களுக்குப் புதிய பாஸ்போர்ட் கிடைக்க வழி ஏற்படும். அதேபோல், பாஸ்போர்ட்டின் ஜெராக்ஸ் அல்லது ஸ்கேன் செய்து டிஜிட்டலாக சேமித்து வைப்பது எல்லா வகையிலும் உங்களுக்கு உதவும்.
-
6 உடல் நீர் வறட்சி (Dehydration)
பொதுவாக பெரும்பாலான பயணங்களின்போது நாம் சந்திக்கும் பிரச்னைதான். அதுவும் மலைப் பகுதிகளுக்கு நாம் செல்லும்போது ஏற்படலாம். நாக்கு வறண்டு, உதடுகள் உலர்ந்து போகும். முறையாக இதைக் கவனிக்காவிட்டால் பெரிய பிரச்னைக்கு வித்திடும். அப்படியான சூழலில் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்ள உதவும். ஆனால், ஒரே நேரத்தில் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள்.
0 Comments