‘PTSD பிரச்னையால மருத்துவர்களே தற்கொலை பண்றாங்க!’ – விளக்கும் மருத்துவர் ராமகிருஷ்ணன்

“சுனாமி பாதிக்கப்பட்ட சமயத்துல அந்த பகுதிகளுக்கே நேரடியாக சென்று அந்த மக்களை சந்திச்சுப் பேசினோம். அவங்க சொன்னது எல்லாத்தையும் வைச்சு பார்த்தா அங்க எவ்வளவோ கொடூரமான சம்பவங்கள் நடந்ததுனு புரிஞ்சுக்க முடிஞ்சது. அப்போ அங்க ஒரு பையன் அமைதியா உட்கார்ந்திருந்தான். அவன்கிட்ட ரொம்ப நேரம் பேச்சுக் கொடுத்துகிட்டே இருந்தோம். ஆனால், எந்த பதிலும் இல்லை. அப்போதான் இவனுக்கு PTSD பிரச்னை இருக்குறது புரிஞ்சுது. தொடர்ச்சியா இரண்டு மணிநேரம் போராடி அவனை பேச வைச்சோம். வீட்டுக்குள்ள எல்லோரும் இருக்குற நேரம் சுனாமி வந்திருக்கு. இந்த பையன் தூக்கி வீசப்பட்டு மரத்துக்கு மேல மாட்டிக்கிட்டான். அந்தக் குடும்பத்தை மொத்தமா சுனாமி இழுத்துகிட்டு போயிடுச்சு. இப்போ அந்த சின்ன பையனுக்குனு யாரும் இல்லை. அவனோட நிலைமை புரிஞ்ச உடனே பக்கத்துல இருந்த என்.ஜி.ஓ-ல சேர்த்து அவனை முழுமையா குணப்படுத்தினோம். அது ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் நடந்தது. இன்றைக்கு கோவிட்கால சூழலில் பெரும்பாலானோர் PTSD பிரச்னையால் பாதிக்கப்பட்டு என்னிடம் சிகிச்சைக்காக அதிகம் வருகிறார்கள். சாதாரண மக்களுக்கு மட்டும் வரும்னு கடந்துபோக முடியாது. PTSD-யால மருத்துவர்களே அதிகமா தற்கொலை பண்ணிட்டு இறந்திருக்கிறாங்க” என்று அதிர்ச்சித் தகவலை பகிர்ந்தார், திருச்சியில் அமைந்துள்ள ஆத்மா மனநல மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன். 

மருத்துவர் ராமகிருஷ்ணன்
மருத்துவர் ராமகிருஷ்ணன்

PTSD என்றால் என்ன?

 Post-traumatic stress disorder என்பதன் சுருக்கமே PTSD ஆகும். சில பேருக்கு சில அனுபவங்கள் சராசரி மனிதனால் எதிர்பார்க்க முடியாத அனுபவங்களாக இருக்கும். அதுதான் Post-traumatic stress disorder. உதாரணமா எல்லோருக்கும் தெரிஞ்சது சுனாமி. யாராவது எதிர்பார்த்தாங்களா? அந்த நிலையில என்ன நடக்கப்போகுதுனு தெரியாத ஒரு மனநிலையில இருந்தாங்க. அந்த மனநிலையில் இருக்கிறவங்களுக்கு என்ன நடக்குதுன்னே தெரியாது. அந்த நிகழ்வால அதிகமான கோபம், அமைதி, தூக்கமின்மை, திரும்பத் திரும்ப அதே சுனாமி நியாபகங்களும், அதன் விளைவுகளும் கண் முன்னால் வந்துகிட்டே இருக்கும். இதைத்தான் PTSDனு சொல்றாங்க. இப்போ கோவிட் காலத்தைக் கூட நல்ல உதாரணமா சொல்லலாம். சீனாவில் அங்கங்க இருக்குனு சொன்னாங்க. 2018 டிசம்பர் மாசத்துக்கு அப்புறமா உலகமே பதற்றத்துல இருந்தது. மக்கள் மட்டும் மன உளைச்சலுக்கு ஆளாகவில்லை, மருத்துவர்களே மன உளைச்சலுக்கு ஆளானார்கள். நிறைய மருத்துவர்கள் Depression-ல இருந்தவங்களை பர்த்தோம். அடுத்ததா என்ன பண்றதுனே தெரியாம மனசு குழம்பிப்போய் இருந்தது. இந்த நிலையைத்தான் PTSDனு சொல்வாங்க. இதுபோல சாதாரண மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியாத நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு மனது நிலையில்லாமல் இருக்கும் எல்லாமே PTSDதான்.

PTSD
PTSD

PTSDஆல் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அதிலிருந்து மீட்பது?

இதற்கு நிறைய தெரபிகள், மருந்துகள் இருக்கு. மருத்துவரிடம் கவுன்சிலிங் போகலாம். சமீபகாலமாக எங்களிடமே அதிகமான நபர்கள்  PTSD ஆல் பாதிக்கப்பட்டு ட்ரீட்மெண்ட்க்கு வர்றாங்க. PTSD ஆல் பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுக்கக் கூடிய தெரபி குரூப் தெரபி. ஒவ்வொரு மாதிரியான சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களை தனித்தனியாக பிரித்து அவர்களுக்குள் குழு அமைத்து தெரபி கொடுக்கிறோம். அவர்களுக்கு யோகா, உடற்பயிற்சி, விளையாட்டு என நாள் முழுவதும் ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது அவர்கள் படிப்படியாக அதிலிருந்து குணமடைகிறார்கள். 

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

எவ்வளவு நாட்களுக்குள் சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும்?

மத்த நோய்கள் மாதிரி PTSD அன்றைக்கே தெரியாது. பாதிக்கப்பட்டதுல இருந்து ஒரு மாசத்துக்கு அப்புறம்தான் நல்லாவே தெரிய ஆரம்பிக்கும். ஒருமுறை வந்துட்டா அது 6 மாசம் வரைக்கும் இருக்கலாம். சொல்லப்போனால் வாழ்நாள் முழுவதும் கூட இருக்கலாம். 

PTSD பற்றி நீங்கள் சந்தித்த மோசமான அனுபவம் என்ன?

கும்பகோணம் தீ விபத்தில் எரிந்த பள்ளிக்கூடத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அந்த பள்ளியில் படித்த மாணவன் நான். அந்த செய்தி வந்த அடுத்த 2 மணி நேரத்தில் நாங்க அங்க போயிட்டோம். இறந்த குழந்தைகளின் குடும்பங்களை நேரடியாக சந்தித்துப் பேசினோம். எல்லோரும் ஒருவித மன அழுத்தத்தில் இருந்தனர். எல்லோரையும் பேச வைத்து, பழைய நினைவுகளை மீட்டு, அழ வைத்து அவர்களை மீட்டெடுத்தோம். மனது இறுக்கமாக இருப்பவர்கள் கண்ணீர்விட்டு அழுதாலே முக்கால்வாசி சரியாகிவிடும். எங்கள் டீம் ஒரு வாரக் காலமாகத் தங்கியிருந்தது. அதுமட்டுமில்லாமல் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு 1 லட்சம் ரூபாய் கொடுப்பதில் முறைகேடுகள் நடக்க இருந்தது. அதையும் தடுத்து மக்களை வங்கிக் கணக்கு தொடங்க வைத்து உரியவர்களிடத்தில் பணத்தைச் சேர்த்தோம்.

PTSD
PTSD

இன்னொரு சம்பவமும் நியாபகம் இருக்கு. பள்ளி தீ விபத்துல பாதிக்கப்பட்ட குடும்பத்துல ரெண்டு குழந்தைகளும் இறந்து போயிட்டாங்க. முன்னாடியே அவங்க அம்மா குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாங்க. இப்ப நான் என்ன செய்வேன்னு அந்த அம்மா கவலையோட இருந்தாங்க. நான் அழைச்சுகிட்டுப் போய் மகப்பேறு மருத்துவர்கள்கிட்ட காட்டி இலவசமா சிகிச்சை கொடுத்து அடுத்த குழந்தை பெத்துக்கிட்டாங்க. இன்னமும் அவங்க வந்து பார்த்துட்டு போவாங்க. PTSDயால பாதிக்கப்பட்டவங்களுக்கு வெறும் கவுன்சிலிங் மட்டும் பத்தாது. அவங்களுக்கும் சமுதாயத்துக்குமான பந்தத்தை உணர வைக்கணும். அதுக்கான பல பயிற்சிகள் இருக்கு. இன்னைக்கு இருக்கிற காலக்கட்டத்துல மனசு சார்ந்த குழப்பங்களும் அதனால சிக்கல்களும் அதிகமாகிட்டு இருக்கு. அதுக்காகவே எங்ககிட்ட 24 மணிநேரமும் இயங்குற ஹெல்ப்லைன் இருக்கு. எப்போ வேணாலும் 98424 22121 இந்த நம்பர்ல போன் பண்ணி தங்களுடைய சந்தேகங்களைக் கேட்கலாம்.

Also Read: “மன அழுத்ததுக்கு தற்கொலைதான் தீர்வா?” விளக்குகிறார், மனநல மருத்துவர் ராமகிருஷ்ணன்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top