Celebrities

விஜய் முதல் ரொனால்டோ வரை… செலிபிரிட்டிகளின் செயல்களால் நஷ்டமடைந்த பிராண்ட்கள்!

கோகோ கோலா பாட்டிலை எடுத்து ரொனால்டோ தள்ளி வைத்தது உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோகோ கோலாவின் சந்தை மதிப்பையும் அதிகளவில் பாதித்துள்ளது. இந்த நிலையில் பிரபலங்களின் செயல்களால் நஷ்டமடைந்த பிராண்டுகள் குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

ரொனால்டோ VS கோகோ கோலா

ஐரோப்பாவில் 2020-ம் ஆண்டுக்கான யூரோ கால்பந்து கோப்பை போட்டியானது கடந்த வாரம் தொடங்கியது. இந்தப் போட்டியில் உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அணியும் விளையாடுகிறது. இந்த நிலையில், ஹங்கேரி அணியுடனான போட்டிக்கு முன்பாக வழக்கமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் ரொனால்டோ கலந்து கொண்டார். அப்போது அவரது மேசைக்கு முன்பாக தண்ணீர் பாட்டிலுடன் கோகோ கோலா பாட்டில்களும் வைக்கப்பட்டிருந்தன.

ரொனால்டோ

ரொனால்டோ இந்த பாட்டில்களில் கோகோ கோலா பாட்டில்களை மட்டும் எடுத்து ஒதுக்கி வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தன்னிடம் தண்ணீர் இருப்பதாகவும் காட்டினார். ரொனால்டோவின் இந்த செயல் உலக அளவில் கவனத்தைப் பெற்றது. `பாட்டிலை எடுத்து ஒதுக்கி வச்சேன்… 4 பில்லியன் டாலர் க்ளோஸ்; உன் முன்னாடி கோகோ கோலா பாட்டில தெரியாம கொண்டு வந்து வச்சதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட’ போன்ற மீம்ஸ்கள் உள்ளிட்ட கொகோ கோலா நிறுவனத்தை விமர்சிக்கும் பதிவுகளும்  உலக அளவில் வைரலாகின. 

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக யூரோ உலக கோப்பையின் ஸ்பான்சராக கோகோ கோலா பிராண்ட் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரொனால்டோவின் இந்த செயல் கோகோ கோலா நிறுவனத்தின் சந்தை மதிப்பை அதிகளவில் பாதித்துள்ளது. இந்திய மதிப்புக்கு சுமார் ரூபாய் 29,337 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோகோ கோலா நிறுவனம் வெளியிட்டு அறிக்கையில், “யூ ரோ கால்பந்தாட்டத்தின் முக்கிய விளம்பரதாரராக நாங்கள் இருக்கிறோம். அவர்களின் விருப்பத்தைத் தேர்வு செய்ய அனைவருக்கும் விருப்பம் உண்டு” என்று தெரிவித்துள்ளனர். எனினும், கோகோ கோலா விளம்பரத்தில் ரொனால்டோ நடித்த வீடியோவும் சமூக வலைதளவாசிகள் இடையே அதிகமாக வைரலானது.

விஜய் VS கோகோ கோலா

விஜய்

கத்தி படத்தில் விஜய் நடித்த சம்பவத்தையும் ரொனால்டோவின் தற்போதைய செயலையும் ஒப்பிட்டு பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி. இந்தப் படத்தில் நடிகர் விஜய் தண்ணீர் தொடர்பான அரசியலை முன்வைத்து வசனங்களை பேசியிருப்பார். கத்தி படம் வெளியானபோது தமிழகத்தில் பலரும் கோகோ கோலாவுக்கு எதிராக தங்களது கருத்துக்களை முன்வைத்து பேசி வந்தனர். அப்போது, கோகோ கோலா விளம்பரத்தில் விஜய் நடித்த வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்கள் விஜயை விமர்சித்தனர். தற்போது, ரொனால்டோவின் செயலையும் நடிகர் விஜயின் செயலையும் ஒப்பிட்டு `தங்களது பழைய தவறுகளை திருத்திக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை’ என மீம்ஸ்களை போட்டு ரொனால்டோ மற்றும் விஜயின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.

கைலி ஜென்னர் VS ஸ்னேப் சாட்

பிரபல ரியாலிட்டி டிவி நட்சத்திரமான கைலி ஜென்னர் கடந்த 2018-ம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில், “வேறு யாரும் ஸ்னேப் சாட்டை பயன்படுத்தவில்லையா? இல்லை நான் மட்டும்தானா.. இது மிகவும் வருத்தமான விஷயம்” என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்னேப் சாட்டின் சந்தை மதிப்பு அதிகளவில் வீழ்ச்சி அடைந்தது. இதனால், அந்த நிறுவனத்துக்கு சுமார் 1.3 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. ஸ்னேப்சாட்டில் அதிக ஃபாலோயர்ஸ் உள்ள நபர்களின் கைலி ஜென்னரும் ஒருவர். இந்த ட்வீட்டைத் தொடர்ந்து, “ஸ்டில் வல் யூ ஸ்னேப்.. மை ஃபஸ்ட் லவ்” என்றும் ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார். 

டொனால்ட் ட்ரம்ப் VS போயிங்

ட்ரம்ப்

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடக செல்வாக்கைப் பயன்படுத்தி மிகப்பெரிய நிறுவனங்களை பாதிப்படையச் செய்ய அடிக்கடி ட்வீட்களை பதிவிட்டு வந்தார். இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டுகளின் ஒன்று 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏரோஸ்பேஸ் நிறுவனமான போயிங்கைப் பற்றியது. விமான உற்பத்திப் பற்றி குறிப்பிட்ட ட்ரம்ப் `செலவுகள் கட்டுப்பாட்டில் இல்லை. ஆர்டரை கேன்சல் செய்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இதனால் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் போயிங் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு ப்ளாக் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெர்மி ஜோர்டன் VS சிபோட்டில்

ஜெர்மி ஜோர்டன்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகர் ஜெர்மி ஜோர்டன். இவர் சிபோட்டில் என்ற உணவு நிறுவனத்தை குற்றம்சாட்டி தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிவித்திருந்தார். இதனால், சிபோட்டிலின் பங்குகள் அதிகளவில் சரிந்தன. ஜோர்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கிளிப்பையும் பகிர்ந்துகொண்டார். அதிகளவில் அந்நாட்டு செய்தி ஊடகங்கள் இந்த விஷயத்தைப்  பற்றி எழுதின. இதன் விளைவாக 5.9 சதவிகிதம் வரை பங்குகள் குறைந்தன.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்கின் ட்வீட்டுகளால் சந்தைகளில் 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு டெஸ்லா நிறுவனத்தின் மொத்த மதிப்பில் இழப்பு ஏற்பட்டது. ட்வீட்டுகளால் சந்தை மதிப்பு அதிகரிக்கும் என்று நினைத்து அவர் ட்வீட் செய்திருந்தபோதும் இது நடந்திருக்கிறது. மேலும், முதலீட்டாளர்கள் பின்வாங்கியதால் டெஸ்லா நிறுவனத்தில் அவருக்கு சொந்தமான 3 பில்லியன் மதிப்பிலான பங்குகளும் குறைந்திருக்கின்றன. பங்கு வர்த்தகத்தில் அவரது ட்வீட்டுகளை வைத்து முதலீட்டாளர்களை ஈர்க்க நினைக்கும் உத்தி பற்றி விசாரணை வேண்டும் என்றும் சில முதலீட்டாளர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

Also Read : தனுஷ் சொன்ன 11 நச் பன்ச் டயலாக்குகள்… இதை மறந்திருக்க மாட்டீங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top