தீரன் சின்னமலை வரலாற்றில் முக்கியமான 6 தருணங்கள்
-
1 ஆரம்பகால வாழ்க்கை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகிலுள்ள மேலப்பாளையம் கிராமத்தில் 1756ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் ரத்னசாமி கவுண்டர் - பெரியாத்தா. பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் வழிவந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் தீர்த்தகிரி. தனது முன்னோர்களைப் போலவே புலவர்களுக்கு வாரி வழங்கி வள்ளலாகத் திகழ்ந்த இவரை தீர்த்தகிரி சர்க்கரை என்றே அழைத்திருக்கிறார்கள். இளம் வயதிலேயே வாள் பயிற்சி, குதிரையேற்றம், வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் என பல கலைகளைக் கற்றுத் தேர்ந்து இளம் வீரராக உருவெடுத்தார். சக நண்பர்களுக்கும் அந்தப் பயிற்சியை அளித்து சிறுவயதிலேயே ஒரு படையையும் திரட்டி வைத்திருந்தார் தீர்த்தகிரி.
-
2 தீர்த்தகிரி `தீரன்’ சின்னமலையான தருணம்
அந்த காலத்தில் கொங்குநாடு மைசூர் மன்னரின் ஆளுகையின் கீழ் இருந்தது. மைசூர் மன்னரின் திவான்கள் கொங்கு மக்களிடம் கடுமையான வரி வசூலித்து வந்தனர். இதைக் கேள்விபட்ட தீர்த்தகிரி, அதைத் தடுக்க எண்ணினார். தனது நண்பர் படையுடன் சங்ககிரி வழியாக மைசூருக்குக் கொண்டுசெல்லப்பட்ட வரிப் பணத்தைத் தடுத்தார். எதிர்ப்புத் தெரிவித்த ஹைதர் அலியின் திவான் முகமது அலியிடம், `சென்னிமலைக்கும் சிவன் மலைக்கும் இடையே இருக்கும் சின்னமலை பறித்தது என ஹைதர் அலியிடம் போய்ச்சொல்’ என்று கூறி மைசூர் படையை விரட்டியடித்தார். அதன்பிறகே தீர்த்தகிரி தீரன் சின்னமலை என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.
-
3 திப்பு சுல்தான் நட்பு
மைசூர் மன்னராக இருந்த ஹைதர் அலி 1782ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி மரணமடைந்தார். அதையடுத்து அவரது மகன் திப்பு சுல்தான் மைசூர் அரியணையில் ஏறினார். அப்போது ஆங்கிலேயரின் ஆதிக்கமும் வளர்ந்து வந்தது. இதனால், ஆங்கிலேயரை அடக்க வேண்டும் என்ற ஒத்த கருத்தியலின் அடிப்படையில் திப்பு சுல்தானோடு கைகோர்த்தார் தீரன் சின்னமலை. திப்பு சுல்தான் - தீரன் சின்னமலை கூட்டணி ஆங்கிலேயப் படைகளை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் ஆகிய இடங்களில் நடந்த முதல் மூன்று மைசூர் போர்களிலும் வென்றழித்தது.
-
4 நான்காம் மைசூர் போர்
நான்காம் மைசூர் போர் தீரன் சின்னமலை வாழ்வில் முக்கியமான முடிவை எடுக்க வைத்தது. முதல் மூன்று மைசூர் போர்களிலும் தோற்றிருந்த ஆங்கிலேயப் படை மாவீரன் நெப்போலியன் உதவியோடு புதிய யுக்திகளை அந்தப் படை கையாண்டது. தீரன் சின்னமலையும் தனது படையினரோடு துணிந்து போராடினார். ஆனால், துரதிருஷ்டவசமாக திப்பு சுல்தான் இந்தப் போரில் உயிர் நீத்தார். 1799ம் ஆண்டு மே 4-ம் தேதி திப்பு சுல்தான் இறப்புக்குப் பிறகு தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களை எதிர்க்க வேறுவிதமாகத் திட்டம் போட்டார்.
-
5 ஓடாநிலை
திப்பு மரணத்துக்குப் பின்னர் ஓடாநிலை கோட்டையில் முகாமிட்டு பிரெஞ்சுப் படையினர் உதவியோடு பீரங்கிகள் உள்ளிட்டவைகளைத் தயாரித்தார். திப்பு சுல்தான் இறப்புக்குப் பழிதீர்க்கும் விதமாக சிவன்மலைக் காட்டில் வீரர்களுக்குப் பயிற்சியளித்து பெரும் படையைத் திரட்டினார். திப்புவின் படையில் இருந்த சிறந்த வீரர்களான துண்டாஜிவாக், அப்பாச்சி போன்றவர்களைத் தனது படையில் சேர்த்தார்.
1800-ல் ஆங்கிலேயப் படை முகாமிட்டிருந்த கோவை கோட்டையைத் தகர்க்க எண்ணிய தீரன் சின்னமலையில் முயற்சி வெற்றிபெறவில்லை. கலங்காத அவர், 1801ல் பவானி காவிரிக் கரையிலும், 1802-ல் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடந்த போரில் பிரெஞ்சுப் படை உதவியோடு ஆங்கிலேயப் படையை முறியடித்தார். அறச்சலூரில் 1803-ம் ஆண்டு நடந்த போரில் கர்னர் ஹாரிஸ் தலைமையிலான ஆங்கிலேயப் படையை விரட்டியடித்தார். ஆங்கிலேயர்களுக்கு அவர்களது பாணியிலேயே கையெறி குண்டுகள் மூலம் இந்தப் போரில் தீரன் சின்னமலை பதிலடி கொடுத்தார். -
6 சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தீரன்
போரில் நேரிடையாக வெல்ல முடியாத தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வெல்ல ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். அவரது சமையல்காரரான நல்லப்பனுக்கு ஆசைவார்த்தை காட்டினர். ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியில் வீழ்ந்த நல்லப்பனும், தீரன் சின்னமலை இருக்குமிடத்தை அவர்களுக்குக் காட்டினார். இதையடுத்து, தீரன் சின்னமலை மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்தது ஆங்கிலேயப் படை. அவர்கள் அனைவரும் சங்ககிரி கோட்டையில் 1805-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.
0 Comments