Chennai Central Railway Station

ஆங்கிலேயர்களின் முதல்கோட்டை, சிக்கன் 65… நம்ம சென்னையின் இந்த 15 விசேஷங்கள் உங்களுக்குத் தெரியுமா?!

தமிழகத்தின் தலைநகரான சென்னை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம். பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சென்னை, தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் பிரபலமான நகராக விளங்குகிறது.

நம்ம சென்னை பற்றிய 15 சுவாரஸ்யத் தகவல்கள்…

  1. மதராஸப்பட்டினம்

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் வடக்கே இருந்த மீனவ கிராமத்தின் பெயரால் மதராஸப்பட்டினம் என்று பெயர்பெற்றதாகச் சொல்வார்கள்.

  1. ஆங்கிலேயர்களின் முதல் கோட்டை

இப்போது சட்டப்பேரவை செயல்படும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைதான் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் கட்டிய முதல் கோட்டையாகும். 1639ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோட்டை இன்றளவும் கம்பீரமான வரலாற்றுச் சான்றாக நிற்கிறது.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
  1. முதலாம் உலகப் போர்

முதலாம் உலகப் போரின்போது (28 ஜூலை 1914 – 11 நவம்பர் 1918) தாக்குதலுக்குள்ளான ஒரே இந்திய நகரம் சென்னைதான். ஜெர்மனியின் எஸ்.எம்.எஸ் எம்டன் போர்க்கப்பல் சென்னையின் ஆயில் டேங்கர்களைக் குறிவைத்தது.

  1. பழமையான பொறியியல் கல்லூரி

கிண்டி பொறியியல் கல்லூரி 1794-ல் நிறுவப்பட்டது. நில அளவை குறித்த படிப்புக்காகத் தொடங்கப்பட்டு, 1859-ல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரியாக உருவெடுத்தது. 1858-ல் ஒரே ஒரு மாணவருடன் சிவில் என்ஜினீயரிங் படிப்பு தொடங்கப்பட்டது. 160 ஆண்டுகளுக்கு மேலாக பொறியியல் கல்வி அளித்து வரும் கிண்டி பொறியியல் கல்லூரி இந்தியாவின் பழமையான பொறியியல் கல்லூரியாகும்.

கிண்டி பொறியியல் கல்லூரி (Wikimedia Commons)
  1. புற்றுநோய் மருத்துவமனை

1920-ல் தொடங்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் இந்தியாவின் பழமையான புற்றுநோய் மருத்துவமனையாகும்.

  1. ராயபுரம் ரயில் நிலையம்

இன்றளவும் பயன்பாட்டில் இருக்கும் இந்தியாவின் பழமையான ரயில் நிலையம் நம்ம ராயபுரம் ரயில்நிலையமாகும். 1856ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. 1853ல் ராயபுரம் முதல் ஆற்காடு வரையிலான ரயில் பாதைப் பணிகளை மெட்ராஸ் ரயில்வே கம்பெனி தொடங்கியது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் இருந்ததால், ராயபுரத்தில் ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 1856 ஆம் ஆண்டு ஜூன் 28-ல் அப்போதைய கவர்னர் லார்டு ஹாரிஸ் ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார். அப்போது ராயபுரம் – ஆம்பூர் மற்றும் ராயபுரம் – திருவள்ளூர் என இரண்டு ரயில் சேவைகள் இருந்தன.

மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (Credit – Old Indian Photos)
  1. பழமையான கிரிக்கெட் ஸ்டேடியம்

சென்னையில் கிரிக்கெட் மிகவும் பிரபலமாக இருந்ததால், 1846ல் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. பின்னர், 1916ம் ஆண்டு கட்டப்பட்ட சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் இந்தியாவின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று.

  1. சிக்கன் 65

1965-ல் சிக்கன் 65 என்ற புதிய டிஷ்ஷை சென்னையில் செயல்பட்டு வந்த புஹாரி ஹோட்டல் அறிமுகப்படுத்தியது. பெயர்க்காரணம் பற்றி பல்வேறு தகவல்கள் இருக்கும் நிலையில், புஹாரி ஹோட்டலின் மெனு கார்டில் 65-வதாக இடம்பெற்றதால் இந்தப் பெயர் என்றும் கூறப்படுகிறது.

  1. மிகப்பெரிய ஐடி பார்க்

சென்னையில் அமைந்திருக்கும் டைடல் பார்க், ஆசியாவின் மிகப்பெரிய ஐடி பார்க்குகளில் ஒன்று. உலகின் பல முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்கு அமைந்திருக்கின்றன.

  1. வனவிலங்கு சரணாலயம்

வண்டலூரில் அமைந்திருக்கும் அறிஞர் அண்ணா வனவிலங்குகள் சரணாலயம் இந்தியாவின் மிகப்பெரிய வனவிலங்குகள் சரணாலயமாகும். 1,265 ஏக்கர்கள் பரப்பளவில் பரந்து, விரிந்திருக்கும் இது உலகின் மிகப்பெரிய வனவிலங்குகள் சரணாலயங்களுள் ஒன்றாகும்.

  1. பழமையான புத்தக நிலையம்

சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் ஹிக்கின் போத்தம்ஸ் இந்தியாவில் இருக்கும் பழமையான புத்தக நிலையங்களில் ஒன்று. 1844 ஆம் ஆண்டு முதல் இந்த புத்தக நிலையம் செயல்பாட்டில் இருக்கிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகம்
  1. அண்ணா நூற்றாண்டு நூலகம்

சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாகும். 2010ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி திறக்கப்பட்ட அந்த நூலகத்தில் 12 லட்சத்துக்கும் மேலான புத்தகங்கள் இருக்கின்றன. எட்டு ஏக்கர் பரப்பளவில் 9 மாடிகள் கொண்டது அண்ணா நூற்றாண்டு நூலகம்.

  1. ஆசியாவின் டெட்ராய்டு

ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனங்களான அசோக் லேலண்ட், கேடர்பில்லர், டைம்லர், ஃபோர்டு, ஹூண்டாய், பி.எம்.டபிள்யூ, ரெனால்ட் நிசான் மற்றும் மிட்சுபிஷி போன்றவற்றின் தொழிற்சாலைகள் சென்னையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் மொத்த ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக சென்னையில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

  1. சுற்றுலா

உலக அளவில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நகரங்கள் பட்டியலில் 2015-ம் ஆண்டு 43-வது இடத்தில் இருந்த சென்னை, 2019-ம் ஆண்டு 36-வது இடத்துக்கு முன்னேறியது.

  1. மாநகராட்சி

லண்டனுக்குப் பிறகு இன்றும் உயிர்ப்போடு செயல்படும் மாநகாராட்சி வரிசையில் சென்னை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சென்னை மாநகராட்சி 1688-ல் தோற்றுவிக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top