சி.எஸ்.கே-வின் புதிய ஜெர்ஸி பற்றிய 5 சுவாரஸ்யங்கள்
-
1 பாதுகாப்புப் படையினருக்கு மரியாதை
சி.எஸ்.கே ஜெர்ஸியில் முன்னெப்போதும் இல்லாத வகையில், பாதுகாப்புப் படையினரைக் குறிக்கும் வகையில் `camouflage’ எனப்படும் பச்சை நிறம் தோள்பட்டையில் இடம்பெற்றிருக்கிறது. இதுகுறித்து சி.எஸ்.கே-வின் தலைமை செயலதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், ``நமது எல்லையைக் காக்கத் தன்னலமற்று சேவையாற்றி வரும் பாதுகாப்புப் படையினர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பலகாலமாக நாங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தோம்.
அவர்களுக்கு மரியாதை செலுத்தும்பொருட்டே சி.எஸ்.கே ஜெர்ஸியில் camouflage இடம்பெற்றிருக்கிறது. ஏற்கனவே கடந்த 2019ல் பாதுகாப்புப் படைக்கு ரூ.2 கோடி சி.எஸ்.கே சார்பில் நிதி அளிக்கப்பட்டது. சி.எஸ்.கே கேப்டன் தோனி ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் பதவியில் இருக்கிறார். அதேபோல், கடந்த 2019ல் பாராசூட் ரெஜிமெண்டில் சுமார் இரண்டு மாத காலம் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டிருந்தார். -
2 கோல்டன் பார்டர்
தோள்பட்டையில் இடம்பெற்றிருக்கும் camouflage அருகில் இருபுறமும் தங்க நிறத்தில் பட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிறப்பான செயல்பாடு மற்றும் ஃபேர் பிளே மதிப்பீடுகளை சி.எஸ்.கே தொடர்ந்து வருவதைக் குறிக்கிறது. இதுவரை நடைபெற்றுள்ள 11 சீசன்களில் 6 முறை ஃபேர் பிளே விருதை தோனி தலைமையிலான சி.எஸ்.கே வென்றிருக்கிறது.
-
3 3 ஸ்டார்
ஜெர்ஸியின் இடதுபுறம் சி.எஸ்.கே லோகோவுக்கு மேலே புதிதாக 3 நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சி.எஸ்.கே 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் சாம்பியனாகி கோப்பையை மூன்று முறை வென்றிருப்பதைக் குறிக்கும் வகையில் இந்த நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 11 சீசன்களில் 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற சி.எஸ்.கே, அதில் 8 முறை இறுதிப் போட்டியில் விளையாடியிருக்கிறது.
-
4 மறுசுழற்சி
ஒவ்வொரு ஜெர்ஸியும் 15 பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டதாகச் சொல்கிறது சி.எஸ்.கே. ஒவ்வொரு ஜெர்ஸி தயாரிப்பின்போதும் 270 கிராம் கார்பன் வெளியீடு குறைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல், ஜெர்ஸி உருவாக்கத்துக்குப் பயன்பட்ட பாலியஸ்டர் தயாரிப்பின்போது வழக்கத்தை விட 90 சதவிகிதம் அளவுக்கு தண்ணீர் குறைவாக எடுத்துக் கொள்ளப்பட்டதாவும் கூறியிருக்கிறது சி.எஸ்.கே.
-
5 இந்தியா சிமெண்ட்ஸின் 75-வது ஆண்டு
சி.எஸ்.கேவின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் 75வது வைரவிழாவைக் கொண்டாடுகிறது. அதைக் குறிப்பிடும் வகையில் ஜெர்ஸியின் பின்புறம் வீரர்களின் எண்ணைக் குறிப்பிடும் இடத்துக்கு மேலே India Cements என்ற வாசகத்துக்கு மேலே `75 years of’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த முறை சி.எஸ்.கேவின் முதன்மையான ஸ்பான்சராக முத்தூட் ஃபைனான்ஸுக்குப் பதிலாக மிந்த்ரா நிறுவனம் இணைந்திருக்கிறது.
0 Comments