நடிகர் மோகனை இன்றைய தலைமுறையினர் மைக் மோகன் என்று அழைத்தாலும் அவர் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் வெள்ளிவிழா நாயகன் என்று அழைக்கப்பட்டார். அவர் எதனால் வெள்ளிவிழா நாயகனாக இருந்தார் என்பதையும் அவருக்குப் பின் வேறு எந்த நடிகரும் ஏன் அடுத்த மோகனாக மாறவில்லை என்பதற்கான சில விஷயங்களையும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
-
1 குரல்:
நடிகர் மோகனுக்கு அவரது சொந்த குரல் மைனஸ் ஆக அமைய விஜய்யின் தாய்மாமா சுரேந்தர் தான் மோகனுக்கு ஆரம்பகாலத்தில் டப்பிங் செய்தார். அந்தக் குரல் மோகனுக்கு பக்காவாக செட் ஆனதும் தொடர்ந்து அவர் நடித்த அனைத்து படங்களுக்கும் டப்பிங் செய்தார். ஒரு நடிகர் தனது சொந்த குரல் இல்லாமல் நடித்த அத்தனை படங்களும் வெற்றிப் படங்களாக மாற்றியது மோகன் வரலாற்றில் மட்டுமே சாத்தியம். இது தற்போது இருக்கும் நடிகர்களுக்கு சாத்தியமே கிடையாது.
-
2 பாடல்கள்
மோகன் படங்களில் தற்போது இருக்கும் இளைஞர்களும் ஞாபகம் வைத்திருப்பது பாடல்கள் தான். அந்த அளவுக்கு மோகன் நடித்த படங்களில் ஆல்பம் முழுக்கவே ஹிட்டாக அமைந்தது. ஒரு பாடல் 2 பாடல்கள் என இல்லாமல் ஒரு படத்தின் அத்தனை பாடல்களும் ஹிட் செய்த நடிகர் என்ற பெருமையை அந்த காலத்திலேயே மோகன் பெற்றிருந்தார். அதற்கு சான்றாக அவரது பாடல்கள் இன்று வரைக்கும் பல இடங்களில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. அதற்கு இளையராஜா மிகப்பெரிய காரணம். மோகன் - இளையராஜா கூட்டணி தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு கூட்டணியாக அமைந்திருக்கிறது. தற்போது வரும் படங்களில் ஒரு பாடலோ அல்லது இரண்டு பாடல்களோ வெற்றி அடைவதே பெரிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில் ஒரு ஆல்பம் முழுக்க ஹிட் என்பது மிக அரிதாகவே தற்போது நடக்கிறது.
-
3 கதாபாத்திரம்
இசையில் இளையராஜாவோடு கூட்டணி சேர்ந்த மோகன் கதையிலோ, இயக்குநர்களிலோ, நடிகைகளிலோ தனக்கென ஒரு கூட்டணி என்று அமைத்துக் கொள்ளாமல் பல இயக்குநர்களுடனும் பல நடிகைகளுடனும் நடித்து வெவ்வேறான அனுபவங்களை மக்களுக்குக் கொடுத்தார். அவர் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் இருந்தாலும் அவர் நெகட்டிவான கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்தார். குறிப்பாக விதி என்கிற படத்தில் பெண்ணை ஏமாற்றும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார் மோகன். இப்படி பெண் ரசிகைகள் அதிகம் இருந்தாலும் சமூகத்துக்குத் தேவையான பல கதைகளிலும் நடித்திருக்கிறார் மோகன். ஆனால், தற்போது இருக்கும் நடிகர்கள் தங்களுக்கென ஒரு பாணியையும் தங்களுக்கென சில இயக்குநர்களும் சில நடிகைகளையும் மட்டும் வைத்தே படங்கள் நடிப்பதால் மோகனின் இந்த முயற்சியை தற்போது இருக்கும் எந்த நடிகரும் செய்யவில்லை என்றே சொல்லலாம்.
-
4 ரசிகர்கள்
மோகன் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் இருந்தார்கள் என்பது எதார்த்தம் தான். ஆனால், அந்த ரசிகர்கள் இன்று வரை அவருக்காக, அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். ஒரு வருடத்துக்கு முன்பு கூட நடிகர் மோகன் அவர்களது ரசிகர்களை சந்தித்தார். அந்த நிகழ்வு மிகப்பெரிய நிகழ்வாகவே சென்னையில் நடந்தது. மற்ற 80'ஸ் நடிகர்கள் அந்த நிகழ்வைப் பார்த்து கொஞ்சம் பொறாமைப்பட்டிருக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு மிகப்பெரிய நிகழ்வாகவும் இப்போதும் அவருக்கான ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதை காட்டும்படியாகவும் அது இருந்தது. தற்போது இருக்கும் நடிகர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும் நடிகர் மோகனைப் போல் 20 வருடங்கள் நடிக்காமல் இருந்தாலும் அந்த ரசிகர்கள் அப்படியே இருப்பார்களா என்பது கேள்விக்குறியே.
இந்த காரணங்கள்தான் நடிகர் மோகனை வெள்ளிவிழா நாயகனாக வலம் வர வைத்தது. இந்த விஷயங்கள் தற்போது இருக்கும் நடிகர்கள் செய்ய தவறியதாலும் செய்ய முடியாததாலும் தான் மீண்டும் ஒரு மோகன் தமிழ் சினிமாவில் உருவாகவே இல்லை.
-
5 மோகன்
0 Comments