ஒரு ஹோட்டல்ல ஃப்ரெண்ட்ஸ்லாம் சேர்ந்து சாப்பிட்டு பில் ஷேர் பண்றதுலயே யார் எவ்வளவு கொடுக்கணும்னு அவ்வளவு குழப்பம் வருது. ஒரு நாட்டுக்கே வரி விதிக்கணும் அதுவும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு வரினா எவ்வளவு குழப்பம் வரும். அப்படி சில குழப்பங்களையும், இந்தக் குழப்பங்களை பயன்படுத்தி நிறுவனங்கள் எப்படி வரிச்சலுகை வாங்குறாங்க அப்படிங்குறதுக்கான சில காமெடியான உதாரணங்களையும்தான் இப்போ பார்க்கப்போறோம்.
‘நடிகர்’ சச்சின்
சரி சொல்லுங்க.. சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வீரரா..? நடிகரா..? இது என்ன அபத்தமான கேள்வினு தோணுதா? நீங்க நம்ப மாட்டீங்க… சச்சின் டெண்டுல்கர் தன்னோட பிரதானமான தொழில் நடிப்புனு சொல்லிக்குறாரு. நடிகர்கள், கலைஞர்கள் வெளிநாட்டுல சம்பாதிக்குற வருமானத்துக்கு வரிச்சலுகை தருது இந்திய அரசாங்கம். காரணம் அவங்க இந்தியாவோட கலாசாரத்தை மத்த நாடுகளுக்கு பரப்புறாங்க. சச்சின் சில விளம்பரங்களில் நடிச்சதுக்கு வெளிநாட்டில இருந்து வருமானம் வந்தது. அப்போ தன்னுடைய பிரதானமான தொழில் நடிப்புனு சொல்லி கிரிக்கெட்ல சம்பாதிக்குறது பிற வருமானங்கள்ல (Other Income Sources) சேர்த்து வரிச்சலுகை பெற்றார் சச்சின் டெண்டுல்கர். God of Cricket னு சொல்லப்பட்டவரையே நடிகராக்கிட்டீங்க!
கிட்கேட் பிஸ்கட்டா? சாக்லேட்டா?
ஒரு நாலு சாக்லேட் பேரு சொல்லுங்கனு சொன்னா கண்டிப்பா எல்லாரும் கிட்கேட்டை ஒரு சாக்லேட்டா சொல்வாங்க. ஆனா கிட்கேட்டை சாக்லேட்னு சொல்றதா? வேஃபர் பிஸ்கட்னு சொல்றதா? என்ற குழப்பம் இந்திய அரசாங்கத்துக்கு வந்தது. காரணம் வேஃபர் பிஸ்கட்டுக்கு 10% வரி. அதுவே சாக்லேட்டாக இருந்தால் 20% வரி. கிட்கேட் சாக்லேட்தான் அதற்குள் பிஸ்கட் வைத்து விற்கிறார்கள் என்று வாதிட்டது அரசு தரப்பு. ஆனால் நாங்க வேஃபர் பிஸ்கட்தான் மேல சாக்லேட் தடவி விற்கிறோம் என்று மல்லுக்கட்டியது கிட்கேட். கடைசியில் 70% பிஸ்கட்டும் 30% சாக்லேட்டும் இருந்ததால் கிட்கேட்டுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் கோடிக்கணக்கில் வரியை மிச்சம் பிடித்தது கிட்கேட் சாக்லேட்.. ஸாரி.. வேஃபர்.
பாராசூட் தேங்காய் எண்ணெய்
கிட்கேட் போல ஒரு பிரச்னை பாராசூட் தேங்காய் எண்ணெய்க்கும் வந்தது. பாராசூட் என்றாலே நமக்கு புரிவது தலைக்கு தேய்க்கும் எண்ணெய்தானே? ஆனால் பாராசூட் தன்னை சமையல் எண்ணெயாகத்தான் கருதுகிறது. காரணம், தலைக்கு தேய்க்கும் எண்ணெய்க்கு வரி அதிகம், சமையல் எண்ணெய்க்கு வரி குறைவு. அடுத்த முறை பாராசூட் பாட்டில் வாங்கினால் கொஞ்சம் கவனித்து பாருங்கள். அதில் சமையல் தேங்காய் எண்ணெய் என்று போட்டிருப்பார்கள்.
பரோட்டாவுக்கு ஒரு நீதி ரொட்டிக்கு ஒரு நீதி
ஜி.எஸ்.டி வந்த பிறகு இந்த வரிக் குழப்பங்கள் இன்னமும் அதிகமாகவே இருந்தது. எந்த பொருளை எந்த ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் சேர்ப்பது என்பது பெரும் பஞ்சாயத்தாக இன்னமும் போய்க்கொண்டிருக்கிறது. உதாரணமாக கேரளா பரோட்டாவுக்கு 18% ஜி.எஸ்.டி ஆனால் சப்பாத்தி, ரொட்டிக்கு 5% ஜி.எஸ்.டி. என்னங்க லாஜிக் இது என்று ஜி.எஸ்.டி வரி தீர்ப்பாயத்திடம் முறையிட்டதற்கு அவர்கள் சொன்ன காரணம்தான் அல்டிமேட். “ஒரு உணவுப் பொருளை அப்படியே சாப்பிடுவதாக இருந்தால்தான் 5%. பரோட்டாவை சூடு பண்ணி சாப்பிடணும்; அதனால 18%” என்று மிரளவைத்தார்கள்.
Also Read – Youtube-ன் TOP 10 Most viewed videos எதெல்லாம் தெரியுமா?