கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “உலகம் முழுவதும் இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. காட்டுத் தீ போல அது பரவி வருகிறது. அதனால் உலக நாடுகள் படும் கஷ்டத்தைப் பார்த்து, சமூக இடைவெளி ஒன்றே இந்த வைரஸ் ஆபத்திலிருந்து தப்ப ஒரே வழி என வல்லுநர்கள் கூறுகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.
லாக்டௌன்
2020ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் லாக்டௌன் உத்தரவு அமலுக்கு வந்தது. அனைத்து நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அரசு, தனியார் அமைப்புகள் போன்றவை மூடப்பட்டன. பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. `இது ஊரடங்கு போன்றது. ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும், மாவட்டமும், கிராமத்திலும் லாக்டௌன் போடப்படுகிறது. ஜனதா ஊரடங்கு போலல்லாமல், கடுமையாகக் கடைபிடிக்கப்படும்’ என்று 21 நாட்கள் லாக்டௌன் விதிக்கப்படுவதாக பிரதமர் மோடி அப்போது கூறினார்.
லாக்டௌனில் புலம்பெயர் தொழிலாளர்களால் சொந்த ஊர் திரும்ப முடியாமல், பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே போனது. உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கே அன்றாடங்காய்ச்சிகள் அல்லல்பட்டது என பல்வேறு விஷயங்கள் நடந்தன. மறுபுறம் துயரத்தில் இருக்கும் மக்களுக்கான உதவிக்கரங்கள் நீண்டன. சாதாரண மனிதர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவிகள் செய்தனர். பெருநகரங்களில் முடங்கியிருந்த தொழிலாளர்களுக்குத் தங்களது வீடுகளிலேயே சமைத்து, அவர்களுக்கு நேரடியாகச் சென்று உணவு வழங்கிய லட்சக்கணக்கானோரை இந்தியா கண்டுகொண்டது. லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களைத் தனது சொந்த செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார் பாலிவுட் நடிகர் சோனு சூத்.
ஜாலி ரீவைண்ட்
கொரோனா ஊரடங்கில் மக்கள் வீடுகளை விட்டு அத்தியாவசியமில்லாத வேலைகளுக்காக வெளியே வர வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியிருந்த நிலையில், பல காமெடிகள் நாடு முழுவதும் அரங்கேறின.
-
1 எங்க ஓடுற?
லாக்டௌனில் கண்காணிப்புப் பணிக்காக ட்ரோன்களை காவல்துறையினர் பயன்படுத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் காட்டுப்பகுதி ஒன்றில் இளைஞர்கள் கேரம்போர்டு விளையாடியதை ட்ரோன் மூலம் போலீஸார் கண்டுபிடித்தனர். ட்ரோனைப் பார்த்த பிறகு இளைஞர்கள் பதறியடித்து ஓடிய நிலையில், ஒருவர் மட்டும் கேரம்போர்டில் தன்னை மறைத்துக் கொண்டார். இந்த வீடியோ தேசிய அளவில் வைரலானது.
-
2 டெஸ்டுக்கு வாங்க
டூ வீலர்களில் டிரிபிள்ஸ் வந்த இளைஞர்களை மடக்கி கொரோனா பரிசோதனைக்காக போலீஸார் ஆம்புலன்ஸில் ஏற்ற முயன்றனர். முகக் கவசம் அணியாமல் வந்திருந்த அந்த மூன்று இளைஞரும் ஆம்புலன்ஸில் பி.பி.இ கவச உடையுடன் இருந்த நபரைப் பார்த்து மிரண்டதுடன், அங்கிருந்து தப்ப அவர்கள் முயற்சி செய்த விதம் கிச்சுக்கிச்சு மூட்டியது. ஆம்புலன்ஸில் ஏற்றவே முடியாதபடி ஒரு இளைஞர் அடம்பிடிக்க, வாகனத்தில் ஏற்றப்பட்ட மற்ற இருவரோ ஜன்னல் வழியாகக் குதித்து ஓட முயற்சித்தனர். இதுவும் நேஷனல் டிரெண்டுக்குப் போனது. -
3 கோ கொரோனா... கோ கொரோனா
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஒரு நிகழ்ச்சியில் பாடிய கோ கொரோனா... கோ கொரோனா டிரெண்ட் வரிசையில் பல மாதங்களாக முன்னணியில் இருந்தது. கொரோனா வாரியர்களுக்கு கைதட்டி ஆதரவு, பாராட்டு தெரிவிக்கும்படி பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதையடுத்து சிலர் செய்த அதகளம் ஆன்லைனில் வெறித்தனமாக வியூஸ் பெற்றது. கம்புகளைக் கொண்டு தட்டுகளைத் தட்டியபடியும், மிகப்பெரிய தகரம் ஒன்றை தரையில் போட்டு ஓங்கி அடித்தபடியே கோ கொரோனா... கோ கொரோனா என பலர் பாடிய பாடல்களால் நிரம்பி வழிந்தது சோசியல் மீடியா.
இதற்கிடையில் இரண்டு தாம்பாளத் தட்டுகளைத் தட்டியபடியே வீட்டிலிருந்து ரோட்டுக்கு என்ட்ரி கொடுத்த வடமாநில பாட்டி ஒருவரின் வீடியோவையும் நெட்டிசன்கள் வைரலாக்கினர். அதிலும் ஒருவர் ஓவர் உணர்ச்சிவசமாகி வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை குக்கர் மூடியைக் கொண்டு அடித்துத் துவைத்த வீடியோவும் லட்சக்கணக்கான லைக் பெற்றது. -
4 கொரோனா ஊர்வலம்
சமூக இடைவெளியைத் தயவு செஞ்சு கடைபிடிங்க மக்களே என அரசுகள் கெஞ்சிக் கொண்டிருந்த நிலையில், கையில் தீப்பந்தத்துடன் ஊர்வலம் போய் கொரோனாவுக்கே மரண பயத்தைக் காட்டினார்கள் வடமாநில சகோதரர்கள் பலர். அதிலும் தீப்பந்தத்துடன் இளைஞர்கள் கொரோனா பாட்டுக்கு ஆடிய ஆட்டம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலித்தது.
-
5 கொரோனா ஹெல்மெட்
கொரோனா லாக்டௌனில் வெளியே சுற்றுவோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு, வித்தியாசமான ஹெல்மெட்டோடு அறிவுரைகள் வழங்கியது தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. கொரோனா வைரஸ் போன்ற ஹெல்மெட்டோடு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தியது 2020-ன் வைரல் மொமண்ட்.
-
6 முகக் கவசம்
கொரோனாவால் சமூக இடைவெளி, முகக் கவசம் போன்றவை நியூ நார்மலாகிவிட்ட நிலையில், லாக்டௌனின் தொடக்க காலத்தில் நம்ம மக்கள் அணிந்துவந்த முகக்கவசங்களைப் பார்த்து போலீஸே ஜெர்க்காகினர். உள்ளாடை, காய்கறிகள், இரும்புத் தட்டுகள் என டிசைன் டிசைனாக மக்கள் அணிந்து வந்த முகக் கவசங்கள் வைரலாகின.
-
7 போலீஸின் தண்டனைகள்
கொரோனா லாக்டௌன் விதிமுறையை மீறி வீதிகளில் சுற்றித் திரிந்த இளசுகளைப் பிடித்த போலீஸார் கொடுத்த நூதன தண்டனைகளும் வைரலாகின. புஷ் - அப், காதில் பூ, தோப்புக் கரணம், கொரோனா விழிப்புணர்வுப் பணி, சாக்குப் பை ஓட்டம், ஆரத்தி எடுத்தல், மாலை அணிவித்தல் என மாநிலத்துக்கு மாநிலம் போலீஸார் தண்டனை கொடுப்பதில் வெரைட்டி காட்டினர். இதில் மாறாத அம்சமாக லத்தி சார்ஜ் மட்டும் இடம்பெற்றிருந்தது.
-
8 டல்கோனா காஃபி
ஊரடங்கில் பெரும் நேரத்தை ஆன்லைனில் செலவிட்ட சாதாரண மனிதர்கள் முதல் பிரபலங்கள் மத்தியில் டல்கோனா காஃபி பிரபலமானது. இந்த டல்கோனா காஃபியை பெரும்பாலானோர் ஒரு டாஸ்காகவே செய்து இணையத்தில் பதிவேற்ற, டல்கோனா காஃபி நேஷனல் டிரெண்டானது.
-
9 ஜூம் அலப்பறைகள்
லாக்டௌனால் வீடுகளே அலுவலகங்களாக மாறிய நிலையில், ஜூம், கூகுள் மீட் போன்ற செயலிகளின் பயன்பாடு அதிகரித்தது. வீட்டிலிருந்தபடியே ஜூமில் அலுவலக மீட்டிங்களை அட்டண்ட் செய்த பலர் செய்த அட்ராசிட்டிகளால் இணையம் சிரிப்பலையில் அதிர்ந்தது. கேமரா ஸ்கீரின் ஆனில் இருப்பது தெரியாமல் உடையை மாற்றியது, சக ஊழியர்களுடன் மீட்டிங்கில் மனைவி இருந்தபோது உள்ளாடையுடன் ஸ்கீரினில் தோன்றிய கணவர், மீட்டிங்கில் இருக்கும் அப்பாவைத் தேடி வந்து தொல்லைகொடுத்த குழந்தைகள் என ஜூம் மீட்டிங்கில் செய்த அலப்பறைகள் லாக்டௌனால் மன அழுத்தத்தில் இருந்த நெட்டிசன்களுக்கு சிரிப்பு மருந்தாய் அமைந்தது.
0 Comments