ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ரிஷப் பண்ட், டி20 ஸ்பெஷலிஸ்டாகவே பார்க்கப்பட்டார். தன்னால் டெஸ்டிலும் களமாட முடியும் என மூன்று இன்னிங்ஸ்களால் உணர்த்தியிருக்கிறார் பண்ட். சிட்னி, பிரிஸ்பேன் மற்றும் அகமதாபாத்தில் இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் என ரிஷப் பண்ட்டின் கிளாஸ் இன்னிங்ஸ்கள் மூலம் விமர்சகர்களையும் வியந்து பார்க்க வைத்திருக்கிறார்.
ரிஷப் பண்டைப் பொறுத்தவரையில் அவரது அதிரடிதான் பலம். டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானமாக நின்று பந்துவீச்சாளர்களின் பொறுமையைச் சோதிக்க ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் மனரீதியாக பலம் அதிகம் வேண்டும். அதேபோல், நாள் முழுவதும் விளையாட எனர்ஜியும் வேண்டும். இது இரண்டுமே பண்டுக்கு இல்லை என்பதுதான் குறையாகப் பார்க்கப்பட்டது.
நான்கு மாதங்களுக்கு முன்பு வரை இந்திய அணிக்காக டெஸ்டில் உடனடியாகக் களமிறங்குவோம் என பண்டே நினைத்திருக்க மாட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட பண்ட் தேர்வாகவில்லை. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை விருத்திமான் சாஹாதான் முதல் டெஸ்டுக்கு அணி நிர்வாகத்தின் சாய்ஸாக இருந்தார். ஆனால், அடிலெய்டு டெஸ்டில் இந்தியா 36 ரன்களுக்கு சுருண்டது, அணி நிர்வாகத்தை யோசிக்க வைத்தது. பேட்டிங்கில் வலுசேர்க்கும் வகையில் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு நடந்தது வரலாறு. அதன்பிறகு நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு கேம் – சேஞ்சிங் இன்னிங்ஸ் ஆடி டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை நிலைநிறுத்தினார் பண்ட். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டுக்குப் பிறகு 7 போட்டிகளில் விளையாடியிருக்கும் பண்ட் 544 ரன்கள் குவித்திருக்கிறார்.
-
1 அதிரடிதான் என் பாணி
சிறுவயது முதலே அதிரடி ஆட்டம்தான் தனது அடையாளம் என்பதில் ரிஷப் பண்ட் உறுதியாக இருந்திருக்கிறார். 2016ம் ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய பண்ட், ஜார்க்கண்ட் அணிக்கெதிரான போட்டியில் 48 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். அதேபோல், 2018 ஜனவரியில் நடந்த மண்டல டி20 தொடரில் இமாச்சலப்பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் சதமடித்தார். டி20 போட்டிகளில் இது இரண்டாவது அதிகவேக சதமாகும்.
ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து அதிரடி பாணி ஆட்டத்தையே தொடர்ந்த பண்ட், பல மறக்கமுடியாத இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார். 2016ம் ஆண்டு பிப்ரவரி 6ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, ரிஷப் பண்டை ரூ.1.6 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அதேநாளில் சதமடித்து ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தார். -
2 பயமா... கிலோ என்ன விலை?
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டம் (மார்ச் 5) அது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள் எடுத்திருக்க, இந்தியா பேட்டிங்கில் 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த சூழலில் களமிறங்கிய பண்ட், சதமடித்து இந்திய பேட்டிங்கில் நம்பிக்கை ஒளி பாய்ச்சினார். அவர் களமிறங்கிய சிறிதுநேரத்திலேயே ஒருமுனையில் தாக்குப்பிடித்து ஆடிக்கொண்டிருந்த ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அஷ்வினும் நடையைக் கட்ட இந்திய அணி 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அப்போது வாஷிங்டன் சுந்தருடன் கைகோர்த்து ரிஷப் பண்ட், 7வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தார். 118 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து பண்ட் ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் இங்கிலாந்தின் அனுபவமிக்க பௌலரான ஆண்டர்சன் பந்துவீச்சை பண்ட் எதிர்க்கொண்ட விதம் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களுக்கு பாடமெடுப்பது போல் இருந்தது.
அந்த இன்னிங்ஸில் இரண்டாவது புதிய பந்தோடு 81வது ஓவரை 38 வயதான ஆண்டர்சன் வீசவந்தார். அதற்கு முன்பாக 17 ஓவர்கள் வீசியிருந்த ஆண்டர்சன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். அந்த 17 ஓவர்களில் 11 ஓவர்கள் மெய்டன். மொத்தமாகவே 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். அந்த ஓவரில் கிரீஸில் இருந்து இறங்கிவந்து ஆண்டர்சன் வீசிய பந்தை மிட் ஆஃபில் பவுண்டரியாக்கினார். அடுத்த பந்தை பாயிண்ட் திசையில் பவுண்டரியாக்கி ஆண்டர்சனை வரவேற்றார்.
ஆனால், ஆண்டர்சனின் அடுத்த ஓவரில் பண்ட் செய்த சம்பவத்தை கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களே குறிப்பிட்டுப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். 83-வது ஓவரை ஆண்டர்சன் வீச வந்தபோது 89 ரன்களில் பேட் செய்துகொண்டிருந்தார் பண்ட். ஸ்டம்ப் லைனில் டைட்டாக வீசப்பட்ட அந்த ஓவரின் இரண்டாவது பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து அநாயசமாக பவுண்டரி அடித்தார் பண்ட். இன்றைய சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டின் மூத்த பௌலரான ஆண்டர்சன் ஓவரில் எந்தவொரு பேட்ஸ்மேனும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட நிச்சயம் யோசிப்பார்கள். ஆனால், பண்டின் அடிநாதமே அந்த ஃபியர்லஸ் கிரிக்கெட்தான். குறிப்பாக, இந்த டெஸ்டுக்கு முன்பாக அவர் விளையாடிய 8 இன்னிங்ஸ்களில் இரண்டு முறை 90-100 ரன்களில் ஆட்டமிழந்திருக்கிறார். ஒரு முறை 89 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் எந்தவொரு பேட்ஸ்மேனும் அதை செஞ்சுரியாக மாற்றவே முயற்சிப்பார்கள். Pant Has other Ideas. -
3 என்ன ஆனாலும் விட்டுக் கொடுத்துடாத...
ரிஷப் பண்டின் போராட்ட குணம் இந்திய அணியின் சமீபத்திய 2 டெஸ்ட் தொடர் வெற்றிகளில் முக்கியப் பங்கு வகித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த இரண்டாவது டெஸ்ட், பிரிஸ்பேனில் நடந்த நான்காவது டெஸ்ட், இங்கிலாந்து அணிக்கெதிராக சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போராட்டம் என 3 இன்னிங்ஸ்கள் பண்ட்டின் போராட்ட குணத்தை நமக்கு எடுத்துச் சொல்லும்.
சிட்னி டெஸ்டுக்கு முன்பாக நடந்த இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என்று தொடர் சமநிலையில் இருந்தது. கடைசி நாள் ஆட்டத்தை 2 விக்கெட்டுகள் இழப்போடு இந்தியா தொடங்கியது. 97 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், ஆஸ்திரேலிய முதல் செஷனிலேயே வெற்றி பெற்றுவிடும் என்றார்கள். ஆனால், அன்று நடந்ததோ வேறு. பண்ட் - புஜாரா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது. பொதுவாக 6வது வீரராகக் களமிறக்கப்படும் பண்ட், அந்தப் போட்டியில் கவுண்டர் அட்டாக் கொடுப்பதற்காக 5வது வீரராகக் களமிறக்கப்பட்டார். பண்ட் - புஜாரா ஜோடி அந்த இன்னிங்ஸில் ஏறக்குறைய 40 ஓவர்கள் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டது. பண்ட் 118 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஹனுமா விஹாரி - அஷ்வின் ஜோடியின் நிதானமான ஆட்டத்தால், ஆஸ்திரேலியா எளிதாக வென்றுவிடும் என்று கணிக்கப்பட்ட போட்டியை டிரா செய்தது இந்தியா.
பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியா 1988ம் ஆண்டுக்குப் பின்னர் தோல்வியை சந்தித்ததில்லை என்ற வரலாறோடு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் தொடங்கியது. இந்தியா வெற்றிபெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. ஐந்தாவது நாள் ஆட்டத்தை விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா தொடங்கியது. 91 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு சுப்மன் கில் அடித்தளம் அமைத்துக் கொடுக்க, சட்டீஸ்வர் புஜாரா, வாஷிங்டன் சுந்தர் என இருவருடன் சேர்ந்து அரைசத பாட்னர்ஷிப்கள் அமைத்த ரிஷப் பண்ட், அந்த போட்டியில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்தார். குறிப்பாக, இரண்டாவது புதிய பந்தை 80 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா எடுத்தபோது 20 ஓவர்கள் மீதமிருந்தன. ரிஷப் பண்ட் - வாஷிங்டன் சுந்தர் களத்தில் நிற்க இந்தியாவின் வெற்றிக்கோ 100 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது. ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாற்றி மாற்றி தாக்குதல் நடத்த அத்தனையும் தாக்குப்பிடித்த பண்ட், 89 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். ரிஷப் பண்டின் இந்த சிறப்பான ஆட்டத்தால், மேன் ஆஃப் தி மேட்சாக அவர் தேர்வு செய்யப்பட்டார். -
4 மகிழ்ச்சியைப் பரப்பு
`எந்தவொரு கஷ்டமானாலும் உன்னுள்ளேயே புதைத்துக் கொள்; மகிழ்ச்சியை மட்டுமே பரப்பு’ - ஒரு பேட்டியில் ரிஷப் பண்ட், தனது தாரகமந்திரம் எது என்ற கேள்விக்கு அளித்த பதில். ஆம் அது உண்மையும் கூட.
சிறுவயதில் தந்தை, தாய்,சகோதரியுடன் ஒரே ஒரு அறை கொண்ட சின்ன வீட்டில் வசித்த பண்ட், சர்வதேச கிரிக்கெட்டில் உயரம் தொடும்வரை பட்ட கஷ்டங்கள் ஏராளம்.
சிறுவயதில் பல்கலைக்கழகங்கள் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையடிய ரிஷப் பண்டின் தந்தைக்கு, தனது மகன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது பெருங்கனவு. இதற்காக அவரது குடும்பம் கடுமையாக உழைத்தது. உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் இருந்து இரவில் பஸ் பிடித்து டெல்லி வந்து, அங்கு கிரிக்கெட் பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னர் மீண்டும் சொந்த ஊர் திரும்புவது ரிஷப் பண்ட் வழக்கம். வார இறுதி நாட்களில் ரிஷப் பண்டை டெல்லி அழைத்து வந்து மீண்டும் ஊருக்கு அழைத்துச் செல்வது அவரது தாயின் வழக்கம். டெல்லியில் குருத்வாரா ஒன்றில் தங்கியவாறே இரண்டு நாட்கள் பயிற்சியை முடித்துக் கொண்டு தாயுடன் ஊர் திரும்புவார் பண்ட்.
ஐபிஎல் தொடரில் தேர்வாகி விளையாடிக் கொண்டிருந்தபோது ரிஷப் பண்டின் தந்தை திடீரென மரணமடைந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த பண்ட் சோர்வாகியிருக்கிறார். பின்னர் தாய் மற்றும் சகோதரிக்காக மனதைத் தேற்றிக்கொண்ட பண்ட், சோகம் முழுவதையும் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டிருக்கிறார். இதை ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கும் பண்ட், பல இடங்களில் வாய்விட்டு கதறி அழுதிருப்பதாகவும் குறிப்பிட்டார். தந்தையின் இறுதிச் சடங்கில், அடுத்தநாள் பெங்களூரில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் விளையாட விரும்புகிறாயா என தாத்தா தன்னிடம் கேட்டதாகவும், அதற்கு நிச்சயம் விளையாட வேண்டும் என தாம் பதிலளித்ததாகவும் பண்ட் நினைவு கூர்ந்தார். தந்தை இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு காலை 8 மணியளவில் தாம் பெங்களூரு கிளம்பிவிட்டதாகவும் ரிஷப் பண்ட் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். -
5 சும்மா கற்பூரம் மாதிரி...
அதிரடி ஆட்டம் மட்டுமல்லாது கீப்பிங்கில் பண்ட் செய்த சின்னச் சின்ன தவறுகளே டெஸ்ட் அணித் தேர்வின்போது பண்டின் பெயர் பரிசீலிக்கப்படாமல் இருந்ததற்குக் காரணமாக இருந்தது. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ஸ்பின்னர்களின் முக்கியமான ஆயுதமே விக்கெட் கீப்பர்தான். ஸ்டம்பிங், கேட்ச் என விக்கெட் கீப்பர் கைகளாலே ஸ்பின்னர்கள் அதிக விக்கெட் வீழ்த்துவதுண்டு.
விக்கெட் கீப்பர் வலுவாக இல்லாத நிலையில், ஸ்பின்னர்களிடம் ஒருவித மனச்சோர்வு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் பண்ட் அறிமுகமான சமயத்தில் ஸ்டம்பிங், கேட்ச் போன்ற தருணங்கள் சிலவற்றை பண்ட் தவறவிடவே, அது அவருக்கு மிகப்பெரிய பின்னடவைக் கொடுத்தது. ஆனால், அதையெல்லாம் குறைந்தபட்ச கால அளவில் சரிசெய்து தனது கீப்பிங்கை மெருகேற்றியிருக்கிறார் பண்ட்.
பண்டின் கீப்பிங் குறித்து பேசிய அவரது ஆரம்பகால கோச் டரக் சின்ஹா, ``பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு, வலுவான பங்களிப்பைச் செய்துவிட்டாலே, அது உனது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்துவிடும். அதன்பின்னர் தானாகவே உனது கீப்பிங் திறன் மேம்படும்’ என்று பண்டிடம் சொன்னேன். இப்போது அது நடந்திருக்கிறது. பேட்டிங்கால் பண்டின் தன்னம்பிக்கை கூடியிருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார்.
ஸ்பின்னர்கள் பந்துவீசும்போது அவர்களை பண்ட் கையாளும் விதம் மெருகேறியிருக்கிறது. ஸ்டம்பிங் வேகம், கேட்ச் என முன்னர் அவர் மீது வைக்கப்பட்ட குறைகளை வெகுவாகக் குறைத்துவிட்டார். ஸ்பின்னர்கள் பந்துவீசும்போது விரைவாகப் பந்துகளைப் பிடித்து பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுப்பது, வேகப்பந்து வீச்சின்போதும் நீண்டநேரம் கீப்பிங் செய்தாலும் முன்னர் இருந்த சோர்வு அவரிடம் இல்லை என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மூர் போன்ற சீனியர்களே அவரைப் பாராட்டத் தொடங்கிவிட்டார்கள். அதேநேரம், பேட்டிங்கில் பண்டின் செயல்பாடுகளை ஆஸ்திரேலியாவின் சக்சஸ்புல் விக்கெட் கீப்பரான கில் கிறிஸ்ட் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வுபெற்று 8 ஆண்டுகளுக்குப் பின் நிலையான விக்கெட் கீப்பரை இந்தியா அடையாளம் கண்டுகொண்டிருக்கிறது.
0 Comments