கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் ஆன்லைன், வொர்க் ஃப்ரம் ஹோம் போன்ற பதங்கள் நியூ நார்மலாகிவிட்டன. ஜூம், கூகுள் மீட் போன்ற செயலிகளின் பயன்பாடும் எகிறியிருக்கிறது. ஆன்லைனில் அ..ஆ தொடங்கி செயற்கைக்கோள் பொறியியல் வரை வகுப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆன்லைன் வகுப்புகள் பற்றி தேடத் தொடங்கியபோது நம் கண்ணில் பட்ட சில விநோத ஐடியாக்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.
-
1 காதல் தோல்வியிலிருந்து மீள...
வில் ஸ்மித் நடித்திருக்கும் Hitch படம் பார்த்திருக்கிறீர்களா... அதில், பெண்களைக் கவருவது எப்படி என கிளாஸ் எடுக்கும் கோச்சாக நடித்திருப்பார் அவர். தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சந்தானம் நடித்திருக்கும் அதே கதாபாத்திரம்தான். இதெல்லாம் கற்பனைதானே என நீங்கள் எண்ணலாம். ஆனால், உண்மையில் அப்படி ஒருவர் இருக்கிறார். கோச் வில்சன் என்றழைக்கப்படும் லீ வில்சன் இதற்காகவே ஆன்லைனில் கிளாஸ் எடுத்துவருகிறார்.
காதல் தோல்வியிலிருந்து மீண்டு, உங்கள் காதலியோடு மீண்டும் சேர்வது மற்றும் திருமண வாழ்வின் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்வு சொல்வதாகக் கூறும் இவர், அந்த ஆன்லைன் கோர்ஸ் மூலம் மட்டுமே மாதந்தோறும் 30,0000 அமெரிக்க டாலர்களை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். -
2 சாப்பிடுவது எப்படி?
ஆன்லைன் கோர்ஸுகளுக்குப் பிரபலமான `Udemy' தளத்தில் இருக்கும் இந்த கோர்ஸ், முழுக்க முழுக்க சைவ உணவுகள் பற்றியது. எவிடா (Evita Ochal) என்பவர் உங்கள் கலோரி தேவைகளுக்கேற்ப எந்தவகை சைவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதை ஆன்லைனில் சொல்லிக் கொடுக்கிறார். இதற்காக ரூ.3,840 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆஃபர் பிரைஸாக ரூ.490 வசூலிப்பதாகச் சொல்கிறார்கள்.
-
3 இன்டர்நெட்டில் நேரத்தை செலவிடுதல்
ஆன்லைன் மயமாகிவிட்ட சூழலில் இன்டர்நெட் இல்லாமல் ஒருநாளைக் கழிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். ஆன்லைனில் அதிக நேரத்தை செலவிடுபவர்கள், அதை எப்படி ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தலாம் என அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ஆன்லைன் கிளாஸ் வழியாகச் சொல்லிக் கொடுக்கிறது. இதற்காக அவர்கள் தனி சான்றிதழும் தருகிறார்கள்.
-
4 நாய்கள் சைக்காலஜி
நாய்களின் மனநிலையைப் புரிந்துகொள்வதற்காக நடத்தப்படும் இலவச ஆன்லைன் கோர்ஸ் இது. பெட் லவ்வர்கள் இந்த கோர்ஸில் இணைந்து, தங்கள் செல்லப் பிராணி எதற்கெல்லாம் எப்படியெல்லாம் ரியாக்ஷன் கொடுக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்கிறது ஆன்லைனில் வகுப்பெடுக்கும் இங்கிலாந்தின் ஐ.எஸ்.சி.பி அமைப்பு. இதுபற்றிய கூடுதல் விவரங்களை https://www.theiscp.co.uk/ என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
-
5 இறப்பு
எல்லோரும் ஓர் நாள் இறக்கத்தானே போகிறோம். ஆனால், இறப்பு என்பது முடிவல்ல என்கிறது இந்த ஆன்லைன் கோர்ஸை அளிக்கும் யேல் பல்கலைக்கழகம். பேராசிரியர் ஷெல்லி கெகன் (Shelly Kagan) என்பவர் இந்த ஆன்லைன் கோர்ஸை எடுக்கிறார். இறப்பு என்றால் என்ன என்பது குறித்தும், இறப்பில்லா நிலை என்பது சாத்தியமா என்பது குறித்தும் முனைவர் பட்டம் பெற்ற ஷெல்லியின் குரலிலேயே நீங்கள் கேட்க முடியும். கூடுதல் தகவல்களுக்கு https://oyc.yale.edu/death/phil-176 என்ற இணையதளம் உதவலாம்.
-
6 எதிர்காலத்தைக் கணிக்கலாம் வாங்க...
தலைப்பைப் போலவே எதிர்காலத்தைக் கணிக்கலாம் வாங்க என்றழைக்கிறது ஒரு ஆன்லைன் கிளாஸ். ஹூஸ்டன் பல்கலைக்கழகம் நடத்தும் `Master of Science in Foresight’ பற்றி தேடினால் தகவல்கள் கொட்டுகின்றன. எதிர்காலத்தில் நடப்பதை எப்படிக் கணிக்க முடியும் என்கிறீர்களா... `இது மேஜிக் இல்லை; கடந்த காலத்தை வைத்து எதிர்காலத்தில் நடப்பதைக் கணிப்பது சாத்தியமே’ என்கிறது இந்த ஆன்லைன் கோர்ஸ். இதற்காக ஹூஸ்டன் பல்கலைக்கழகம் சான்றிதழும் உங்களுக்கு அளிக்கிறது. கூடுதல் தகவல்களை https://uh.edu/technology/programs/graduate/foresight/index என்ற இணையதளத்தில் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
0 Comments