இந்தியாவில் பிரிண்ட் மீடியா எழுச்சி பெறத் தொடங்கிய காலம் முதலே மக்களிடம் அதற்கான ரீச் என்பது வேற லெவலில் இருந்து வருகிறது. கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நோக்கில் பிரிட்டீஷ் ஆட்சிக் காலம் தொட்டே புத்தகங்களுக்குத் தடை விதிக்கும் பழக்கம் இருந்து வருகிறது.
இதற்கு சிறந்த உதாரணமாக மகாகவி பாரதியின் `ஆறில் ஒரு பங்கு’ நூலைக் குறிப்பிடலாம். 1910ம் ஆண்டு மூன்று அணா விலையில் வெளிவந்த இந்தப் புத்தகம்தான் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்பு என்ற அந்தஸ்து பெற்றது. மக்களிடம் சுதந்திர வேட்கையைத் தூண்டக்கூடிய விதத்திலான கருத்துகளைக் கொண்ட புத்தகம்’ என்று காரணம் கூறி அன்றைய பிரிட்டீஷ் அரசாங்கம் இந்தியப் பகுதிகளில் இந்தப் புத்தகத்தின் புழக்கத்துக்குத் தடை விதித்தது. இந்தியாவில் புத்தகம் ஒன்றுக்கு விதிக்கப்பட்ட முதல் தடை என்று இதைக் குறிப்பிடலாம்.
இந்தக் கட்டுரையில் அப்படி இந்தியாவில் தடை செய்யப்பட்ட 10 புத்தகங்கள் பற்றி பார்ப்போம்.
The Polyester Prince: The Rise of Dhirubhai Ambani – Hamish McDonald

ஆஸ்திரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஹாமிஷ் மெக்டொனால்டு எழுதிய புத்தகம் தி பாலியஸ்டர் பிரின்ஸ். ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் தொழில் வளர்ச்சி, எழுச்சியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த நூல் 1998ல் ஆஸ்திரேலியாவில் வெளியானது. இந்த நூல் அம்பானி குடும்பத்தைப் பொதுவெளியில் தவறாக சித்தரிப்பதாகக் கூறி ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் புத்தகத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.
Lajja – Taslima Nasreen

சர்ச்சைக்குரிய மேற்குவங்க எழுத்தாளர் தஸ்லீமாவின் புத்தகங்களுக்கு இன்றளவும் மேற்குவங்கத்திலும் வங்காளதேசத்திலும் தடை நீடிக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தஸ்லீமா 1993-ல் லஜ்ஜா என்ற நூலை எழுதினார். இந்த நூல் மதரீதியிலான சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கொண்டிருப்பதகாவும் இஸ்லாத்துக்கு எதிரானது என்று கூறி இந்த நூலுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
An Area of Darkness – V.S. Naipaul

இங்கிலாந்து எழுத்தாளரான வி.எஸ்.நைபால் 1960-களின் தொடக்கத்தில் இந்தியாவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது நூல். 1964-ல் வெளியான இந்த நூல், `இந்தியாவையும் இந்திய மக்களையும் எதிர்மறையாக சித்தரிப்பதாகக் கூறி உடனடியாகத் தடை விதிக்கப்பட்டது.
The Price of Power – Seymour Hersh

அமெரிக்க எழுத்தாளர் செய்மர் ஹெர்ஷ் எழுதிய பிரின்ஸ் ஆஃப் பவர் புத்தகம், 1983-ல் வெளியானது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் இன்ஃபார்மர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், ஆண்டுக்கு 20,000 அமெரிக்க டாலர்கள் வரையில் பணம் கொடுத்ததாகவும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே, இந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டது.
The Heart of India – Alexander Campbell

டைம் இதழின் டெல்லி செய்தியாளராக 1950களில் பணியாற்றிய அலெக்ஸாண்டர் கேம்பர் எழுதிய தி ஹார்ட் ஆஃப் இந்தியா புத்தகம் 1958-ல் வெளியானது. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பிராக்ரஸியைப் பற்றி கற்பனையாக எழுதப்பட்ட இந்தப் புத்தகம் அவதூறு கிளப்புவதாகக் கூறி 1958-ல் தடை செய்யப்பட்டது.
Jinnah: India-Partition-Independence – Jaswant Singh

இந்திய முன்னாள் நிதியமைச்சரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஜஸ்வந்த் சிங், பாகிஸ்தானின் தந்தையாகக் கருதப்படும் முகமது அலி ஜின்னாவைப் பற்றி எழுதிய புத்தகம் இது. இந்திய பிரிவினையின் பின்னணியில் இருக்கும் அரசியல் பற்றி எழுதப்பட்ட இந்தப் புத்தகம், 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய பிரிவினைக்கு வித்திட்டது ஜவஹர்லால் நேருவின் கொள்கையே என்றும் ஜஸ்வந்த் சிங் அந்தப் புத்தகத்தில் கூறியிருந்தது சர்ச்சையான நிலையில், அவர் பா.ஜ.க-விலிருந்து நீக்கப்பட்டார். இந்தப் புத்தகத்துக்கு முதலில் குஜராத்தில் தடை விதிக்கப்பட்டது.
Understanding Islam through Hadis – Ram Swarup

ஆங்கிலத்தில் அப்துல் ஹமித் சித்திக் எழுதிய புத்தகத்தை அதே பெயரில் இந்தியில் ராம் ஸ்வரூப் என்பவர் மொழி பெயர்த்தார். 1982-ல் வெளியான இந்த புத்தகம் இஸ்லாமிய மத நம்பிக்கைகள் தொடர்பாக அவதூறு கிளப்புவதாகக் கூறி தடை செய்யப்பட்டது.
The Ramayana as told by Aubrey Menen

இந்திய வம்சாவளி ஆங்கில எழுத்தாளரான ஆப்ரே மேனன் எழுதிய தி ராமாயணா புத்தகம் 1956-ல் தடை செய்யப்பட்டது. இந்துக்களின் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்துவதாகக் கூறி இந்தப் புத்தகத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது.
The Hindus: An Alternative History – Wendy Doniger

அமெரிக்க வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான வெண்டி டோனிஞ்சர் எழுதிய தி ஹிந்தூஸ் – அல்டர்நேட்டிவ் ஹிஸ்டரி புத்தகம் 2009ம் ஆண்டு வெளியானது. இந்துக்களின் வரலாறு குறித்து புதிய கோணத்தில் பேசிய இந்தப் புத்தகம் குறித்து 2014 பிப்ரவரியில் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, அந்தப் புத்தகத்தை மார்க்கெட்டில் இருந்து திரும்பப் பெற்றது பென்குவின் பதிப்பகம். இதனால், இந்தியாவில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா என்ற விமர்சனம் அப்போது எழுந்தது.
The Satanic Verses – Salman Rushdie

இஸ்லாமிய மத நம்பிக்கைகளில் முக்கியமான ஒரு நடைமுறையை மேஜிக்கல் ரியலிசம் மூலமாக விவரிக்கும் வகையில் சல்மான் ருஷ்டி எழுதிய புத்தகம் தி சாத்தானிக் வெர்சஸ். இந்தப் புத்தகம் வெளியானபோது, அதற்கு எதிராக உலக அளவில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அந்தப் புத்தகத்துக்கு 1988-ல் தடை விதிக்கப்பட்டது. இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசுவதாக அந்தப் புத்தகம் கடுமையான கண்டனத்தை எதிர்க்கொண்டது.
Also Read – ஓவியர் கோபுலு: போகோ சேனல் முதல் 1950-களின் மீம் கிரியேட்டர் வரை… 7 சுவாரஸ்யங்கள்!