இந்த வாரம் மலையாளத்தில் வெளியாகி இருக்கும் இரண்டு படங்கள்தான் டாக் ஆஃப் தி டவுன். ஒன்று நிமிஷா & சுராஜ் நடிப்பில் நீஸ்ட்ரீம் என்ற தளத்தில் வெளியாகி இருக்கிறது ‘The Great Indian Kitchen’ படம். இன்னொன்று அனுபமா & ஹக்கீம் நடிப்பில் யூடியூபில் வெளியாகி இருக்கிறது ‘Freedom @ Midnight’ குறும்படம். இரண்டு படங்களின் கதை, களம் வேவ்வேறாக இருந்தாலும் இரண்டு படத்தின் கதாபாத்திரங்களுக்கும் சூழலுக்கும் எக்கச்சக்க ஒற்றுமை.
-
1 அழைத்துக்கொண்டே இருக்கும் அடுப்படி.
இரண்டு படத்தின் நாயகிகளையும் ஒரு நிமிடம்கூட நின்று நிதானிக்க விடாமல், குக்கர் விசிலோ, கருகல் வாடையோ சமையலறைக்கு அழைத்துக்கொண்டே இருக்கிறது. படம் முழுக்கவே இந்த இரு இல்லத்தரசிகளுக்கும் எந்நேரமும் செய்வதற்கு ஏதோ ஒரு வேலை இருந்துகொண்டே இருக்கிறது. கிரேட் இந்தியன் கிச்சனில் கதாநாயகி நடந்து போகும் காட்சியில்கூட, பின்னால் ஒரு வீட்டில் கணவர் பேப்பர் படித்துக்கொண்டிருப்பார், பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்கும், மனைவி மட்டும் துணி துவைத்துக்கொண்டிருப்பார்.
-
2 வீட்டிலிருக்கும் பெண்களுக்கு என்ன வேலை?
இப்படி பெண்களுக்கு எந்நேரமும் வேலை இருந்தாலும் இரண்டு படங்களிலும் வரும் ஆண் கதாபாத்திரங்களைப் பொறுத்தவரை பெண்களுக்கு வீட்டில் வேலையே இல்லை அல்லது இவர்கள் பார்ப்பது ஒரு வேலையே இல்லை.
கிரேட் இந்தியன் கிச்சனில் ஒரு காட்சி. ஆண்கள் சமைக்கிறோம் என்ற பெயரில், கிச்சனையே களேபரமாக்கி வைத்திருப்பார்கள். அதை சுத்தப்படுத்த வேண்டிய பொறுப்பும் மனைவிக்கே. "கிச்சன்ல கொஞ்சம் வேலை இருக்கு" என்று சொன்ன மனைவியிடம்,"அதான் நாங்களே சமைச்சிட்டோமே உனக்கு வேற என்ன வேலை?" என்று நக்கலடிப்பார் கணவனின் நண்பர். அப்படியே இந்த பக்கம் அனுபமா கணவரிடம் "நானும்தான் வேலை பாக்குறேன்" என்று சொல்ல, "எது... சமையல் பண்றதுலாம் ஒரு வேலையா?" என்று கேட்பார். -
3 ஆண்களுக்கு வீடு எப்போதும் இரண்டாம்பட்சம்தான்
இரண்டு படத்திலுமே பிளம்பர் பிரச்னை வருகிறது. பிளம்பரை அழைக்கச் சொல்லி கணவர்களிடம் சொல்லுவார்கள் மனைவிமார்கள். ஆனால் இதோ பண்றேன், நாளைக்கு பண்றேன், கால் பண்ணேன் எடுக்கல என்று சாக்கு போக்கு சொல்லி நாட்களை நகர்த்துவார்கள். அதே சமயம் தன் வேலையில் ஒரு பிரச்னையென்றால் போன் கால் பறக்கும்.
-
4 வெளித்தோற்றத்தில் மட்டும்தான் காதல்
Freedom @ Midnight-ல் 'நீ எனக்கு விஷ்கி' என்று மனைவியிடம் கொஞ்சிப் பேசும் கணவர் இன்னொரு பெண்ணுடன் விர்ச்சுவல் ரிலேஷன்ஷிப்பில் இருப்பார். The Great Indian Kitchen -ல் காலையில் சிரித்துக் கொஞ்சும் கணவர், இரவு மனைவியிடம் 'உன்னை பார்த்தா எனக்கு எதுவும் தோணல' என்பார். இப்படி இரண்டு ஆண்களுமே வெளித்தோற்றத்தில் மட்டும் காதலாகக் காட்டும் கணவர்கள்.
-
5 இதெல்லாம் பெண் பேசலாமா?
Freedom @ Midnight-ல் 'Sex with Strangers' என்று சொல்லும் மனைவியிடம் "இதெல்லாம் எவ்ளோ தப்பு தெரியுமா? என்னை பத்தி நினைச்சியா? குழந்தையைப் பத்தி நினைச்சியா?" என்று லெக்சர் எடுக்கும் கணவர் அதையே தான் தானும் செய்துகொண்டிருப்பார். இன்னொரு பக்கம் The Great Indian Kitchen-ல் 'Foreplay வேணும்' என்று கேட்கும் மனைவியிடம் "ஓஹோ உனக்கு இதெல்லாம் தெரிஞ்சுருக்கு" என்று குத்திக் காட்டுவார்.
-
6
இப்படி இந்த இரு படங்களின் கதாபாத்திரங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தாலும் ஒரே ஒரு வித்தியாசம் இருக்கிறது. Great Indian Kitchen மனைவி தனது உள்ளக் குமுறல்களைச் செய்கையால் காட்டிவிட்டு வெளியேறுகிற சிங்கப்பெண். Freedom @ Might மனைவி தனது கற்பனையில் எல்லாவற்றையும் கொட்டிவிட்டு நிஜத்தில் எதுவும் சொல்ல முடியாமல் இயலாமையில் தவிக்கும் சராசரிப் பெண்.
0 Comments