சீரியல் பார்ப்பவர்களைக் கடுப்பாக்குவது மூன்றே விஷயங்கள்தான். முதலாவது இடைவேளை, இரண்டாவது தொடரும், மூன்றாவது வில்லிகள். சீரியல்களைப் பெண்கள்தான் அதிகம் பார்க்கிறார்கள் என்பதால் பல சீரியல்களில் பெரும்பாலும் வில்லிகளே இருக்கிறார்கள் போல. அப்படி தமிழ் சீரியல்களை கலக்கும் வில்லிகள் யார் என பார்க்கலாமா…
-
1 ஷமிதா - திருமகள் (சன் டிவி)
திருமகள் சீரியலின் ஹீரோயினான அஞ்சலிதான் ஷமிதா நடிக்கும் ஐஸ்வர்யா கேரக்டரின் மகள். ஆனால், ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்தப்போது அவருக்கு தெரியாமல் பெண் குழந்தைக்கு பதிலாக ஆண் குழந்தையை வைத்து விட்டார்கள். அதனால், அஞ்சலிதான் தன் மகள் என்று தெரியாமலும் தன்னுடைய மகனாக நினைத்து வளர்க்கும் ராஜா அவரது குழந்தை இல்லை என்பது தெரியாமலும் இருக்கிறார் ஐஸ்வர்யா. தன்னுடைய சம்மதம் இல்லாமல் ராஜா அஞ்சலியை திருமணம் செய்துகொண்டதால், தன் உண்மை மகளான அஞ்சலிக்கு வில்லியாகி இருக்கிறார் அம்மா ஐஸ்வர்யா. ‘பாண்டவர் பூமி’ படத்தில் நடித்து ஃபேமஸான ஷமிதா, இதற்கு முன் விஜய் டிவியில் வெளியான மெளனராகம் சீரியலில் வில்லியாக கலக்கியதைத் தொடர்ந்து, தற்போது திருமகள் சீரியலிலும் கலக்கி வருகிறார்.
-
2 ஷர்மிலி - ரோஜா (சன் டிவி)
அன்னபூரணியின் மகளான செண்பகம் இறந்துவிட்டார் என நினைத்து செண்பகத்தின் மகள் நான்தான் என்று அன்னபூரணியை நம்பவைத்து சொத்துகளை எல்லாம் அபகரிக்க நினைக்கிறார் பிரியா. பிரியாவாக இருந்தவர் அனுவாக மாறி அன்னபூரணி வீட்டிற்குள் நுழைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கிறார். அன்னபூரணியும் அனுதான் தனது பேத்தி என நம்பிய சொத்துகளை அனு பெயருக்கு மாற்றும் வேளையில், செண்பகத்தின் உண்மையான மகளான ரோஜா அதை தடுக்க நினைக்கிறார். ரோஜாவுக்கும் அனுவுக்கும் நடக்கும் மோதல்கள்தான் ரோஜா சீரியலின் மெயின் மேட்டர். தனது வில்லத்தனத்தால் ரோஜாவை கதிகலங்க வைப்பதிலும் தனது திட்டங்களால் அதிரடி காட்டுவதிலும் ஷர்மிலி ஓர் அழகான ராட்சசி.
-
3 கன்யா பாரதி, ரேஷ்மா, சங்கீதா - அன்பே வா (சன் டிவி)
ஒரு சீரியலில் ஒரு வில்லி இருந்தாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அன்பே வா சீரியலில் மொத்தம் மூன்று வில்லிகள் இருக்கிறார்கள். வருணை காதலித்து திருமணம் செய்த பூமிகாவை இந்த மூன்று வில்லிகளும் எதிர்கிறார்கள்.
தனது சம்மதம் இல்லாமல் மகன் திருமணம் செய்து கொண்டதால் வருணின் தாயான பார்வதியும் (கன்யா பாரதி), தனது தங்கை அஞ்சலியை வருணுக்கு திருமணம் செய்து வைத்து சொத்துகளை அடைந்துவிடலாம் என்று எண்ணிய வந்தனாவும் (ரேஷ்மா), பணக்காரர் ஒருவரை ஏமாற்ற, தான் போட்ட திட்டங்களை பூமிகா கெடுத்துவிட்டாள் என்ற முன்பகையுடனும் வருணை திருமணம் செய்து கொண்டாள் என்ற கோபத்துடனும் இருக்கும் அஞ்சலியும் (சங்கீதா) பூமிகாவுக்கு அடி மேல் அடி கொடுக்கும் அதிரடி வில்லிகளாக மிரட்டுகிறார்கள்.
-
4 தர்ஷ்னா - சித்தி 2 (சன் டிவி)
கவினுடன் யாழினிக்கு நிச்சயதார்த்தம் நடந்திருந்த நிலையில், வெண்பாவும் கவினும் காதலித்து திருமணமும் செய்து கொண்டார்கள். இவர்களை எப்படியாவது பிரித்துவிட்டு கவினுடன் சேரவேண்டும் என நினைக்கும் தர்ஷ்னா, வெண்பாவுக்கு சவால் மேல் சவாலாக விடுகிறார். வெண்பாவுக்கும் தர்ஷ்னாவுக்கும் இடையே நடக்கும் சண்டைதான், தற்போதை சித்தி - 2 சீரியலின் சுவாரஸ்ய போர்ஷன். தர்ஷ்னாவும் வில்லத்தனத்தோட தனது க்யூட்டான நடிப்பையும் வெளிப்படுத்திவருகிறார்.
-
5 ப்ரீத்தி சஞ்சீவ் - கண்ணான கண்ணே (சன் டிவி)
தனது அக்கா கெளசல்யாவின் மறைவுக்கு பிறகு மாமா கெளதம் தன்னைத்தான் திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்த்த வாசுகிக்கு, கெளதம் ஏமாற்றத்தைத் தருகிறார். அந்தப் பழியைத் தீர்க்க பல வருடங்கள் கழித்து மீண்டும் கெளதம் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார், வாசுகி. ப்ரீத்தியின் அனுபவம் அவரது நடிப்பில் நன்றாகவே தெரிகிறது.
-
6 ஊர்வம்பு லட்சுமி - செம்பருத்தி (ஜீ தமிழ்)
தனது அக்கா அகிலாண்டேஸ்வரி மீதான முன்பகையால் அவரது குடும்பத்தையே பழிவாங்க நினைக்கிறார், வனஜா. அகிலாண்டேஸ்வரி, ஆதி, பார்வதி என ஒருத்தரையும் விடாமல், அவர்களை பழிவாங்க வேண்டும் என பல திட்டங்களை போட்டுக்கொண்டே இருக்கிறார். வெகுளித்தனமான வில்லி வனஜாவாக ஊர்வம்பு லட்சுமி கலக்கி வருகிறார். லட்சுமிக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருப்பதால் பயங்கரமாக ஸ்கோர் செய்கிறார்.
-
7 மெட்டி ஒலி சாந்தி - ஈரமான ரோஜாவே (விஜய் டிவி)
நாட்டசரனின் குடும்பத்தை பழிவாங்குவதற்காக தனது அக்கா தங்கத்தைக் கொலை செய்த மரகதம், நாட்டசரனின் குடும்பத்தில் ஒருத்தர் விடாமல் எல்லாருக்கும் குடைச்சல் கொடுத்து வருகிறார். சன் டிவியில் ஹிட்டான மெட்டி ஒலி சீரியலின் டைட்டில் பாடலில் நடனமாடிய டான்ஸர் சாந்திதான், தற்போது வில்லத்தனமான நடிப்பில் மிரட்டி வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு தங்கம், மரகதம் என இரட்டை வேடம்.
-
8 உஷா எலிசபெத் - தேன்மொழி பி.ஏ (விஜய் டிவி)
கவுன்சிலராக இருந்த தனது கணவரைத் தோற்கடித்து தேன்மொழி கவுன்சிலரானது பிடிக்காததாலும், தனது கணவரே தேன்மொழிக்கு தன் மகனை திருமணம் செய்து வைத்ததாலும் கடுப்பான பரமேஸ்வரி, தேன்மொழியை விடாது டார்ச்சர் செய்து வருகிறார். இவர் தேன்மொழிக்கு கொடுக்கும் டார்ச்சர்களைப் பார்க்கும் போது பலருக்கும் கோவம் வருகிற அளவுக்கு தனது வில்லத்தனத்தால் முத்திரை பதிக்கிறார், உஷா எலிசபெத்.
-
9 தர்ஷா குப்தா - செந்தூரப்பூவே (விஜய் டிவி)
குக்கூ வித் கோமாளி மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான தர்ஷா குப்தா, அதற்கு முன்பாகவே செந்தூரப்பூவே சீரியல் மூலம் இல்லத்தரசிகளிடம் பிரபலமாகிவிட்டார். துரையின் சொத்துகளை அபகரிக்க வேண்டும் என்று நினைத்த ஐஸ்வர்யா, துரையை திருமணம் செய்ய திட்டம் தீட்டினார். ஆனால் அது நடக்காமல் போக, ரோஜாவை துரை திருமணம் செய்து கொண்டார். இவர்களை பிரிக்க வேண்டும் என பல தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறார், ஐஸ்வர்யா.
-
10 ஃபரீனா - பாரதி கண்ணம்மா (விஜய் டிவி)
பாரதியை ஒருதலையாக காதலித்து வந்த வெண்பாவை, பாரதி - கண்ணம்மாவின் திடீர் திருமணம் வில்லியாக மாற்றிவிட்டது. இதனால் கடுப்பான வெண்பா பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே பல பிரச்னைகளை கிளப்பிவிட்டு வருகிறார். வெண்பாவின் பகை கண்ணாமாவை எட்டு வருடங்களாக துரத்திக்கொண்டே இருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்திருக்கும் இந்த சமயத்தில் எப்படியாவது பாரதியை திருமணம் செய்து விடவேண்டும் என்று போராடி வருகிறார். வெண்பாவாக ஃபரீனா மிரட்டலான நடிப்பைக் கொடுத்து வருகிறார். அதற்கு சான்றாக சமீபத்தில் நடந்த விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஃபரீனாவுக்கு சிறந்த வில்லிக்கான விருதும் கிடைத்தது.
0 Comments