விநாயகர் சதுர்த்தி விழா பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியிருக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 10-ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பிள்ளையார் பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் கோயில் பற்றிய 7 சுவாரஸ்ய தகவல்கள்…
- சுமார் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இந்தக் கோயில், வடக்கு பார்த்த சந்நிதியில் குடைவரைக் கோயிலாக விளங்குகிறது.
- உற்சவரான ஆறு அடி உயர கற்பக விநாயகர் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று சிலை இருக்கிறது.
- விநாயகரின் துதிக்கை வலதுபுறம் திரும்பி, `வலம்புரி விநாயகராக’ பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
- பிள்ளையார்பட்டிக்கு முற்காலத்தில் எக்காட்டூர், மருதங்குடி, இரசாநாராயணபுரம், திருவீங்கைக் குடி, திருவீங்கைச்சரம் என ஐந்து வகையான பெயர்கள் இருந்ததாக கோயில் கல்வெட்டுகள் சொல்கின்றன.
- பல்லவ மன்னர்களான முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி 615-630) அல்லது முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி 630-668) இவர்களுள் ஒருவர் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். `கல், மரம், சுதை, உலோகம் இல்லாமலே பல்லவன் கோயில் அமைத்தான்’ என்கிற கோயில் கல்வெட்டு இந்த செய்தியை நமக்குச் சொல்கிறது.
- விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 10 நாட்கள் உற்சவம் நடைபெறும். அன்றைய தினம், `விக்னேச கல்ப்ப’ நூலில் கூறப்பட்டுள்ளதுபடி, உஷத் காலத்தில் (சூரியோதயத்துக்கு முன்னர்) மோதகம், அவல், நெல்பொரி, சத்துமாவு, கரும்புத் துண்டு, தேங்காய், வெள்ளை எள், பூவன் பழம் என்ற அஷ்ட திரவியங்கள் கொண்டு கணபதி ஹோமத்தைக் குறைந்தது நான்கு ஆவர்த்திகள் செய்தால் விநாயகர் அருள் கிட்டும்.
- கோயிலில் இருக்கும் கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள். இரண்டு பகுதிகளாக இருக்கும் இந்தக் கோயிலின் ஒரு பகுதி குடைவரையாகவும் மற்றொரு பகுதி கற்றளியாகவும் அமைந்திருக்கிறது.
Also Read – வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரதம்… நேரம், பூஜை செய்யும் முறை!