90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் லிஸ்ட்டில் பல படங்கள் இருக்கும். அதில் ஒரு படம்தான் `நீ வருவாய் என’. பார்த்திபன், தேவயானி, அஜித், ரமேஷ் கண்ணா என பலர் நடித்த இந்தப் படம், ஏன் 90’ஸ் கிட்ஸால் கொண்டாடப்படுகிறது என்பதைப் பார்க்கலாமா…
-
1 விக்ரமன் ஸ்டைல்
பொதுவாகவே 90’ஸ் கிட்ஸுக்கு விக்ரமன் படங்கள் ரொம்ப பிடிக்கும்; பல படங்களை கொண்டாடி இருக்கிறார்கள். ‘நீ வருவாய் என’ படத்தையும் விக்ரமனின் பட சாயலிலேயே எடுத்திருப்பார், விக்ரமனிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜகுமாரன். படத்தின் பெயரில் இருந்தே விக்ரமனின் ஸ்டைலை ஃபாலோ பண்ணிய ராஜகுமாரன், படத்தின் இசை, க்ளைமேக்ஸ், ஒரே பாடல் இரண்டு, மூன்று இடங்களில் வெவ்வேறு எமோஷன்களில் வருவது என விக்ரமனின் ஐகானிக் விஷயங்களை இந்தப் படத்திலும் சேர்த்திருப்பார். அது நன்றாக வொர்க் அவுட் ஆகியிருந்ததால்தான், இன்றுவரை ‘நீ வருவாய் என’ படத்தை 90’ஸ் கிட்ஸ் கொண்டாடுகிறார்கள்.
-
2 படத்தின் பெயர்
‘நீ வருவாய் என’, இந்த தலைப்புக்கு பின்னால் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கிறது. ‘பூவே உனக்காக’ படத்திற்கு முதலில் என்ன பெயர் வைக்கலாம் என தனது உதவியாளர்களோடு பேசிய விக்ரமனின், பல தலைப்புகளை ஒரு பேப்பரில் எழுதியிருக்கிறார். அந்த டிஸ்கஷனில் ‘நீ வருவாய் என’ என்கிற தலைப்பை அப்போதே ராஜகுமாரன் சொல்லியிருக்கிறார். அதையும் சேர்த்து எழுதி தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் கொடுத்தப்போது, அவர் தேர்வு செய்த பெயர்தான் ‘பூவே உனக்காக’. ஆனால், இந்த பெயரும் ஆர்.பி.செளத்ரிக்கு பிடித்திருந்ததால் தனது தயாரிப்பிலேயே அதே பெயரின் ராஜகுமாரனுக்கு முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்.
-
3 இசை
விக்ரமன் படங்களில் பாடல்கள் எல்லாமே பெரியளவில் ஹிட்டாகும். விக்ரமன் - எஸ்.ஏ.ராஜ்குமார் என்கிற காம்போ தமிழ் சினிமாவின் மிக முக்கிய கூட்டணியில் ஒன்று என்றும் சொல்லலாம். ராஜகுமாரனும் தனது முதல் படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமாரை இசையமைப்பாளராக கமிட் செய்து, விக்ரமன் படங்களைப் போன்றே அனைத்து பாடல்களையும் வாங்கினார். பாடல்கள் அனைத்தும் பயங்கர ஹிட். ‘பார்த்து பார்த்து கண்கள்...’, ‘ஒரு தேவதை வந்துவிட்டாள்...’, ‘அதிகாலையில் சேவலை எழுப்பி...’ என இந்தப் படத்தின் பல பாடல்கள் இன்றுவரை பல 90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ப்ளேலிஸ்ட்டில் இருக்கிறது.
-
4 அஜித்
தேவயானியின் காதலனாக அஜித் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். அஜித் தனது கரியரின் ஆரம்பத்தில் சில படங்களில் சிறிய ரோலில் நடித்ததைப் போல், இந்தப் படத்தில் நடித்ததை எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், 25 படங்கள் நடித்து முடித்தப்பின்னர்; ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘முகவரி’ என ஹிட் படங்களை கொடுத்தப்பின்னர் ஒரு ஹீரோ சிறிய ரோலில் நடிப்பது ரொம்பவே பெரிய விஷயம். ‘நீ வருவாய் என’ படத்தை அஜித்திற்காக மட்டுமே பார்த்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்தப் படம் கொண்டாடப்படுவதற்கு இன்னொரு முக்கிய காரணமாக அஜித் இருக்கிறார்.
-
5 க்ளைமேக்ஸ்
தமிழ் சினிமாவின் பல படங்களுடைய க்ளைமேக்ஸை படத்தின் பாதியிலேயே மக்கள் கணித்துவிடுவார்கள். ஆனால், ‘நீ வருவாய் என’ படத்தின் க்ளைமேக்ஸ் இதுதான் என கடைசி ஐந்து நிமிடம் வரை நம்மை மாறி, மாறி கணிக்க வைக்கும். ஆனால், படத்தின் க்ளைமேக்ஸைப் பார்க்கும் போதுதான், அது அனைத்தும் தவறு என நமக்கு புரியும். அந்தளவுக்கு என்ன நடக்கும் என்கிற பரபரப்பு இருக்கும். ‘சரி, அந்த பரபரப்பு முதல்முறை பார்க்கும் போது மட்டும்தானே இருக்கும். அடுத்த முறை இருக்காதே’ என நீங்கள் நினைத்தால், இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் ஏன் சிறந்தது என்பதை சொல்கிறேன். தனது காதலனின் கண்கள் இன்னொருவருக்கு மாற்றப்பட்டதால் அவன் மேல் காட்டும் அன்பு, காதல் இல்லை என நினைக்கும் பெண், அந்தப் பெண் காட்டிய அன்பால் காதல் வயப்பட்டவன் வேறு யாரையும் திருமணம் செய்யாமல், அவள் தனது இறந்த காதலனை நினைத்து வாழ்வதைப் போலவே; தானும் அவளை நினைத்துக்கொண்டே வாழ்கிறேன் என ஒரு முடிவு எடுக்கிறான். அதை அவளும் சம்மதித்து நண்பர்களாகவே இருக்கலாம் என முடிவு செய்கிறார்கள் என்பது வித்தியாசமான க்ளைமேக்ஸ் மட்டுமல்லாது, 90’ஸ் கிட்ஸ் பலரின் ஒரு தலை காதல் வாழ்க்கையை பிரதிபலிப்பது போல் இருந்ததால்தான், ‘நீ வருவாய் என’ 90’ஸ் கிட்ஸால் மறக்க முடியாத படமாக இருக்கிறது.
0 Comments