இன்னைக்கு நாம திரை விமர்சனத்துல பாக்கப்போற படம் ‘ஆன்டி இண்டியன்’! – பார்க்கலாமா வேண்டாமா?

One Line

பல படங்களை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படமே ஆன்டி இண்டியன்.

Streaming Link

Theater

Story Line

அரசியல் கட்சிகளுக்கு ஓவியம் வரையும் பாட்ஷா (ப்ளூ சட்டை மாறன்) மர்ம நபரால் கொல்லப்படுகிறார். அவரது சடலத்தை அவர்களது சொந்தக்காரர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று இஸ்லாமிய முறைப்படி இறுதி சடங்கு செய்கிறார்கள். எல்லாம் முடிந்து மசூதியில் புதைக்கப்போனால் பாட்ஷா நேர்த்தியான ஒரு இஸ்லாமிய வாழ்க்கை வாழவில்லை, போக அவரது அம்மா சரோஜா இந்து மதத்தை சேர்ந்தவர் எனக் கூறி பிணத்தை மசூதிக்குள் புதைக்க மறுக்கிறார்கள். அதன் பின்னர் மறுபடியும் பிணத்தை அவரது வீட்டிற்கு கொண்டு வந்து இந்து முறைப்படி சாங்கியம் செய்யப்பட்டு சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர். அங்கேயும் மத காரணங்களை சொல்லி தகனம் செய்ய மறுக்கிறார்கள். மயிலாப்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால் பிணத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது சில கட்சிகள். இன்னொரு பக்கம் பாட்ஷாவின் அம்மா மதம் மாறிய ஒரு கிறித்துவப் பெண் என்று கூறி அவர்களது முறைப்படி இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்கிறார் சர்ச் ஃபாதர். கடைசியில் அவருக்கு இறுதி சடங்கு எந்த முறைப்படி நடந்தது என்பதுதான் ஆன்டி இண்டியன் படத்தின் கதை.

WoW Moments 🤩

  • எந்த ஒரு பிரபலான முகங்களும் இல்லாமல் வெறும் கதையை மட்டும் நம்பி களமிறங்கியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அதுவும் தன்னுடைய முதல் படத்திலேயே மிகுந்த தெளிவோடு படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே தென்கச்சி சுவாமிநாதனின் புறா கதையை சொல்லி படம் சொல்லப்போகும் விஷயத்தை நமக்கு கடத்திவிட்டார். அதன் பிறகு திரைக்கதைதான் படத்தின் நாயகன்.
  • பாட்ஷா என்ற தனி நபரின் இறப்பு, அவரது பிணத்தை வைத்து விளையாடும் அரசியல் மற்றும் மத விளையாட்டு. இதை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் யாருடைய உணர்வுகளையும் சீண்டாமல் கண்ணியத்தோடு சொல்லியிருக்கிறார் இவர். ‘கொட்டக்கட்ட குணியிறவன், குணிய குணிய கொட்டுறவன் ரெண்டு பேரும் முட்டாள்தான்’, ‘ செத்தவன் ஓட்டு போட்டு கூட பார்த்துருக்கேன், ஆனா செத்தவனை கட்சியில சேர்த்து இப்பதான் டா பாக்குறேன்’, ‘உங்க கட்சியில தலைவன் எல்லாரும் வெள்ளையா இருக்காங்க, தொண்டர்கள் நீங்க மட்டும் ஏன் கருப்பா இருக்கீங்க’ போன்ற வசனங்கள் எல்லாம் ஷார்ப்.
  • முதலமைச்சராக ராதா ரவி, பந்தல் போடும் பாலா, சமீபத்தில் மறைந்த கில்லி மாறன், ஆடுகளம் நரேன், முத்துராமன், ஜெயராஜ், விஜயா என படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். அனைவரும் சமமான அளவில் அவர்களது நடிப்பு ஏற்ப கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. நடிகர்களை தவிர பட்டினப்பாக்கம் மக்கள்தான் நம்மை அதிக அளவில் கவர்கிறார்கள். குறிப்பாக முறைப்படி செய்யப்படும் சாங்கியம், அப்போது இவர்கள் ஆடும் ஆட்டம் கானா என அவர்களது வாழ்வியலை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாய் இருந்தது. சின்னச் சின்ன விஷயங்களில் கூட அதிக உழைப்பை போட்டிருக்கிறார்.
  • மதத்தையும், அந்தந்த மதத்தின் கடவுள்களையும் வழிபடுவது தவறல்ல. அதை வைத்து நிகழ்த்தப்படும் வன்முறையும், அரங்கேறும் அரசியலும்தான் படத்தில் பிரதான கருத்தாக பார்க்கப்படுகிறது. அமைதி பேச்சு வார்த்தை, நடிகரின் ஆதரவுக்கு காத்திருக்கும் அரசியல் கட்சி என இதுவரை தமிழ் சினிமா பார்க்காத சில விஷயங்கள் படத்தில் பேசப்பட்டிருக்கிறது.

AWW Moments 😫

  • முதல் பாதியில் ஸ்பீடு எடுக்கும் திரைக்கதை இன்டர்வல் தாண்டியதும் ஸ்லோவாகிப்போகிறது. முதல் பாதியிலே மொத்த வித்தையையும் இறக்கிவிட்டதால் இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் தடுமாறி கிளைமாக்ஸுக்கு வந்தது போல் இருந்தது. படத்தின் பின்னணி இசை ஆங்காங்கே கவர்ந்தாலும் மனதில் நிற்கும் விதமாக எதுவும் அமையவில்லை. இயக்குநர் பொறுப்பை முழுக்க எடுத்துக்கொண்டு இசையமைப்பாளர் பொறுப்பை வேறு யாரிடமாவது கொடுத்திருக்கலாம் மாறன்.
  • வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட சில காட்சிகளும் படத்தில் இருக்கதான் செய்தது. நடிகர்களின் சிபாரிசு அரசியல் கட்சிகளுக்கு தேவைப்படுகிறது என்று சொன்னது சரியென்றாலும் அவருக்கு நடிகர் கபாலி என்று பெயர் வைத்ததும், மறைமுகமாக சில கேளிக்கைகள் செய்ததும் ஒரு கட்டத்தில் வேண்டாத ஆணியாக தெரிந்தது. இது கூட ஓகே என்றாலும் அவர் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்ற முடிவை வைத்துதான் சில முக்கியமான முடிவுகள் இறுதியில் கலவரம் என்ற ரீதியில் போகிறது. இது வேண்டுமென்றே குறிப்பிட்ட நடிகரை வம்பு இழுத்ததுபோல இருந்தது.
  • படத்தின் மேக்கிங் இன்னுமே கொஞ்சம் நன்றாக அமைந்திருக்கலாம். முதலமைச்சர் அலுவலகத்தில் ராதா ரவி போலீஸாரோடு சந்திக்கும் காட்சியில் ஆரம்பித்து ஒயின் ஷாப் காட்சி என ஆங்காங்கே மேக்கிங் சில பிரச்னைகள் இருந்தது.

Verdict

படத்தின் சில போர்ஷன்களை கடந்துவிட்டால் ஆன்டி இண்டியன் யோசிக்க வைக்கும் ஒரு பக்கா என்டர்டெயினர்.

Similar Movies to Watch

* Indian
* Hey ram

Rating

Direction

3/5

Casting

3/5

Music

2/5

Screenplay

3/5

Editing

2/5

Overall Rating

2.5/5