`A Film By AR Rahman’ – ‘Atrangi Re’ பார்க்கலாமா வேண்டாமா?!

One Line

விஷு, ரிங்கு, சஜத் ஆகிய மூவருக்கும் இடையே நடக்கும் முக்கோண காதல் கதைதான் ‘Atrangi Re’ படத்தின் ஒரு வரிக் கதை.

Streaming Link

Story Line

பீகார் மாநிலத்தை சேர்ந்த ரிங்கு (சாரா அலிகான்) வீட்டை எதிர்த்து அவர் காதலிக்கும் சஜத்தை (அக்‌ஷய் குமார்) கரம்பிடிக்க ஆசைப்படுகிறார். ஆனால், ரிங்குவின் பாட்டி தல்ஹயன் (சீமா பிஸ்வாஸ்) ஒரு லேடி ஹிட்லர் என்பதால் இவரை எப்போது பார்த்தாலும் அடித்து நொறுக்குகிறார். `ரெண்டு நாள்ல இவளுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சே ஆகணும்’ என்று சொல்லி ‘யாரையாவது தூக்கிட்டு வாங்க’ என்று குடும்பத்தாருக்குக் கட்டளை விதிக்கிறார். அந்த சமயம் இவர்களது வலையில் சிக்குறார் அந்த ஊருக்கு மெடிக்கல் கேம் வந்த விஷு (தனுஷ்). ரிங்குவையும், விஷுவையும் மயக்கம் அடையச் செய்து இருவருக்கும் திருமணம் நடத்தி டிரெயின் ஏற்றி விடுகிறார்கள். ஏற்கனவே, நிச்சயதார்த்தம் ஆன விஷு, `நான் என் ஆளைக் கல்யாணம் பண்ணிக்குறேன், நீ உன் ஆளைக் கல்யாணம் பண்ணிக்க’ என்று சொன்னதும் ரிங்குவும் ஜாலியாக அவரது காதலன் சஜத் வரும் வரை விஷுவின் பாய்ஸ் ஹாஸ்டலில் தங்கிவிடுகிறார். ஆனால், விஷுவுக்கு ரிங்குவைப் பிடிக்க, ரிங்குவுக்கு சஜத்தைப் பிடிக்க பின் ரிங்குவுக்கு விஷுவைப் பிடிக்க என்று முக்கோண காதல் கதையாக மாறுகிறது. இறுதியில் யாருக்கு யாரைப் பிடித்தது என்பதை டிவிஸ்ட் கலந்து சொல்லியிருக்கிறது படம்.

WoW Moments 🤩

  • பாலிவுட்டில் தனுஷுக்கு இது மூன்றாவது படம். வழக்கம் போல் நடிப்பில் ஏதாவது ஒரு மேஜிக்கை நிகழ்த்தி முழு கவனத்தையும் தன் மீது விழச் செய்துவிடுகிறார். காதல், காமெடி என அனைத்திலும் கலந்துகட்டி அசத்தியிருக்கிறார். டெல்லியில் படிக்கும் தமிழ் ஆளாக பக்காவாக பொருந்தியிருக்கிறார்.
  • எவ்வளவு பிரச்னை இருந்தாலும் டேக் இட் ஈஸி பாலிசியைக் கொண்டிருக்கும் இளம்பெண்ணாக சாரா அலிகான். படத்தின் என்டர்டெயின்மென்ட் போர்ஷனை அப்படியே தன் பக்கம் இழுத்து தனுஷுக்கு இணையான ரகளையைக் கொடுத்திருக்கிறார் அவர். அதே சமயம் கிளைமாக்ஸில் வரும் முக்கியமான சென்டிமென்ட் காட்சியிலும் மிரட்டியிருக்கிறார். படத்தின் சர்ப்ரைஸ் எலிமென்ட் தனுஷின் நண்பராக நடித்த எம்.எஸ் (ஆஷிஷ் வர்மா). பொறுமையே பெருமை என்று அவர் அடிக்கும் ஒன்லைனர் காமெடிகள் சிரிப்பு மத்தாப்பு.
  • படத்துக்குக் கதையும், திரைக்கதையும் பெரியளவில் ஒத்துழைத்திருக்கிறது. ஒரு காட்சியில் சிரிக்க வைத்தால், அடுத்த காட்சி எமோஷனலாக இருக்கும். ஒரு காட்சியை எமோஷனலாக டீல் செய்திருந்தால், அது முடிந்த அடுத்த நொடியே காமெடி இருக்கும். இப்படி எமோஷனல் ரோலர் கோஸ்டராக திரைக்கதையை அணுகியிருக்கிறார் ஆனந்த் எல் ராய். வசனமும் அதற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்தான் படத்தின் முதல் நாயகன். பாடல்களோடு சேர்த்து தனுஷ் – சாரா ரொமான்ஸ் காட்சிகளின் போது இடம்பெற்ற பேக்ரவுண்ட் ஸ்கோர் Bliss. இதனால்தான் படம் முடிந்தவுடன் ‘A Film by AR.Rahman’ என்றுதான் முதலில் வருகிறது.

AWW Moments 😫

  • அக்‌ஷய் குமாரின் கதாபாத்திரம் சற்று குழப்பமானது என்றாலும், அவருடைய ஸ்டைலுக்கு ஏற்ற ஸ்பேஸ் படத்தில் நிறையவே இருந்தது. ஆனால், தன்னைத் தானே சுருக்கிக் கொண்டு ஒரு வித இறுக்கத்துடன் நடித்திருப்பது நன்றாகத் தெரிந்தது. இவருடைய சிக்னேச்சர் நடிப்பு படத்தில் மிஸ்ஸிங்.
  • பாலிவுட் படங்களில் தமிழ்நாட்டை காட்டும்போது ஒருவித ஓவர்டோஸ் உணர்வு தெரிகிறது. தனுஷுக்கு தமிழ்நாட்டில்தான் கல்யாணம் நடக்க இருக்கும். காஸ்டியூமில் ஆரம்பித்து மொத்த இடமும் ‘மதுரையா இது… சொல்லவே இல்ல..’ என்பது போலத்தான் இருந்தது. ‘மதுரை மல்லி மதுரை மல்லினு மதுரைக்கானவே ஏமாத்தப்பாக்குறீங்களா!’
  • மனதை உறுத்தும் சில லாஜிக் குழறுபடிகள் படத்தில் எக்கச்சக்கம் இருந்தது. சாரா அலி கானுக்கு இருந்த பிரச்னை நம்மிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. `ஓ அப்படியா சரி’ என்று கடந்து போகும் அளவுக்குதான் இருந்தது. தனுஷுக்குக் கல்யாணம் ஆகும் காட்சியில் இவர் திருமணம் செய்யப்போகும் பெண்ணின் அப்பாவிடம் பேசும் காட்சி மாஸாக இருந்தாலும், ‘இதை நீங்க முன்னாடியே சொல்லிருக்கலாமே பாஸ்’ என்ற கேள்வியையும் எழுப்பதான் செய்தது.

Verdict

ஏர்.ஆர்.ரஹ்மான் – தனுஷ் – சாரா அலி கான்… இவங்களுக்காகவே படத்தை மிஸ் பண்ணாமப் பார்க்கலாம்!

Similar Movies to Watch

  • Love Aaj Kal
  • Ae Dil Hai Mushkil

Rating

Direction

3/5

Casting

3/5

Music

4/5

Screenplay

2.5/5

Editing

2.5/5

Overall Rating

2.5/5