ஏரியில் மீன் பிடிக்கும் மீனவர் ஒருவருக்கு பெண்ணின் மண்டை ஓடு ஒன்று கிடைக்கிறது. அது யாருடையது என்று விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக ACP சத்யஜித் (ப்ரித்விராஜ்). இன்னொரு பக்கம் கணவரைப் பிரிந்து தனது மகளுடன் வாழ்ந்து வரும் மேதா (அதிதி பாலன்), புதிதாக ஒரு வீட்டிற்கு குடிபோகிறார். அங்கு சில அமானுஷ்யங்கள் அரங்கேறுகிறது. அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் களத்தில் இறங்குகிறார் பத்திரிக்கையாளர் மேதா. இரு ட்ராக்கில் பயணிக்கும் இந்தக் கதை சில பல டிவிஸ்ட்டுகளோடு க்ளைமாக்ஸில் ஒன்று சேர்கிறது. அது என்ன என்பதுதான் `Cold Case’.
WoW Moments 🤩
சில படங்களின் டைட்டிலே அதன் கதையை சொல்லிவிடும். அப்படியான ஒரு டைட்டிலை கச்சிதமாக இந்தப் படத்திற்கு பொருத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தனு பாலக். குளிர்ச்சியும், கதைக்கருவும் ஒன்றிணைவது போல பல காட்சிகளை குறியீடுகளாக வைத்திருக்கிறார். திரைக்கதை எழுதுவதில் தீயாய் உழைத்திருக்கிறார் ஶ்ரீநாத் வி. நாத். அதிதி, ப்ரித்விராஜ் இருவரும் விசாரணை செய்வது ஒரே கேஸை பற்றித்தான். அதைப் பார்வையாளர்களுக்கு எந்தவித குழப்பமும் இன்றி திரைக்கதையை அமைத்திருக்கிறார் அவர். அதுவும் இன்டர்வல் காட்சியின் போது ஒரே பெயர் இரு இடத்திலும் இடம்பெற்றிருக்கும். அதற்காகவே இயக்குநருக்கும் திரைக்கதை ஆசிரியருக்கும் அப்லாஸ்.
ப்ரித்விராஜின் நடிப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம். 2005-ல் வெளியான `போலீஸ்’ படத்தில் ஆரம்பித்து `7th Day’, `மும்பை போலீஸ்’, `மெமரீஸ்’ என சில சூப்பர் ஹிட் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் இந்தப் இந்தப் படத்திலும் தன்னுடைய பெஸ்ட்டை கொடுத்திருக்கிறார். `அருவி’ அதிதி பாலனுக்கு மலையாளத்தில் இது முதல் படம். அப்படி ஒரு ஃபீலை கொஞ்சமும் கொடுக்காமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். Single mother கேரக்டரிலும் மர்மங்களை அவிழ்க்க முற்படும் பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்திலும் சரியான மீட்டரில் நடித்திருக்கிறார். வெல்கம் அதிதி சேச்சி!
மலையாளத்தில் அடிக்கடி த்ரில்லர் சினிமாக்கள் வருவதுண்டு. `ஜோசஃப்’, த்ரிஷியம், `ஃபாரன்ஸிக்’, `அஞ்சாம் பதிரா’, `களா’ என சமீபத்திய பல படங்களை உதாரணமாக சொல்லலாம். ஆனால், ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒன்றை வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொண்டே வருவார்கள் மலையாள சினிமா கிரியேட்டர்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் ப்ராஸ்த்தட்டிக் டென்டல் பற்றியும், பேய்களுக்கு டிஜிட்டல் மீடியும் ஒன்று தேவை என்பதையும் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள்.
`ஜல்லிக்கட்டு’ படத்தைத் தொடர்ந்து கிரிஷ் கங்காதரின் கேமரா தாறுமாறாய் விளையாடியிருக்கிறது. ஏற்கனவே கேரளா அழகாக இருந்தாலும் அதை இன்னும் அழகு நிறைந்து காட்டியிருக்கிறது கிரிஷின் கேமரா. ப்ரகாஷ் அலெக்ஸின் சவுண்ட் எஃபெக்ஸ் சில இடங்களில் தூக்கிவாரிப் போடுகிறது. அமானுஷ்யமான இடங்களுக்கு திகில் சவுண்ட் மிக்ஸிங் செய்திருக்கிறார். மற்ற இடங்களில் ஓகே ரகத்தில்தான் இவரது மியூஸிக் அமைந்திருந்தது.
AWW Moments 😫
திரைக்கதை படத்தில் தரம் என்றாலும் அந்த பேய் போர்ஷனை மாற்றி அமைத்து ஒரு பக்காவான த்ரில்லர் கதையை மட்டும் எழுதியிருக்கலாம். ஏனென்றால் அப்படியான ஒரு எலமென்ட்டே படத்தின் கதைக்கு தேவையில்லாமல் இருந்தது. பேய் கான்செப்ட் என்று வந்ததும் படத்தின் நம்பகத்தன்மை குறைந்துவிடுகிறது. முழுக்க பேய் கதையை மையப்படுத்தி எடுத்திருக்க வேண்டும், இல்லையெனில் இன்வெஸ்டிகேஷன் ஸ்டைலிலே கதையை அணுகியிருக்க வேண்டும்.
`ஈவா மரியா’ என்கிற இந்த பெயர் படத்தின் முக்கால்வாசி இடத்தில் வந்துகொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் `யாருதான் மா நீய்யி’ என்கிற சலிப்பைத் தந்துவிடுகிறது. அதற்கு முக்கிய காரணம் படத்தின் நீளம். எடிட்டர் அதை கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தாலும் படம் ஷார்ப்பாக இருந்திருக்கும். தேவையில்லாத சில இடங்களும் காட்சிகளும் பார்க்கும்போதே தெரிந்துவிடுகிறது.
2-வது பாகத்துக்கான லீடோடுதான் படம் முடிகிறது. படத்தில் சொல்லப்படாத சில விஷயங்களை அதில் சொன்னால் நன்றாக இருக்கும். ஏனென்றால் ப்ரித்விராஜ் மற்றும் அதிதி பாலனைத் தவிர படத்தில் பெரிதாக எந்த கதாபாத்திரங்களும் இடம்பெறவில்லை. அதிதியின் கணவர் யார், எதற்காக இருவருக்கும் விவாகரத்து ஆனது என்பதோடு அவரது தங்கை தற்கொலை செய்துகொண்டதாக ஒரு ஃப்ளோவில் சொல்வார்கள். அதை லீடாக வைத்து இரண்டாம் பாகத்தை இயக்கினால் பார்க்க நாங்க ரெடி!
Verdict
ஹாரர், த்ரில்லர் பட பிரியர்களுக்கு இந்தப் படம் ஒரு சிறப்பான விருந்து. இல்லை இது இரண்டில் நான் ஒரு ஜானரின் ஃபேன்தான் என்போர்களுக்கும் படத்தில் விஷயம் உள்ளது. ஒன்றை சகித்துக்கொண்டு மற்றொன்றை பார்த்து உய்யவும்!
0 Comments