கடந்த ஆண்டு தீபாவளிக்கு பாரதியார் கூறிய `சூரரைப் போற்று’ என வந்தவர், இம்முறை அம்பேத்கரை பின்பற்றி `ஜெய் பீம்’ என்று முழங்கி இருக்கிறார் சூர்யா. இப்படி நிஜ வாழ்க்கையின் நாயகர்களின் பிரதிநிதியாக வந்திருக்கும் திரையுலக நாயகன் சூர்யாவுக்கு வாழ்த்துகள். கோபிநாத், சந்துரு என மக்கள் நலனுக்காக போராடிய இரு நபர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படம் இவ்விரண்டும். அதற்கான நியாத்தை சிறப்பாக செய்திருக்கிறார் சூர்யா. கிட்டார் கம்பி மேலநின்று என்று வந்து நிற்காமல் அவரது மெச்சூரிட்டிக்கு ஏற்ற கதாபாத்திரத்தைக் கொண்டு மொத்தப் படத்தையும் தாங்கி நின்றுள்ளார். நீதிமன்றத்தில் மிடுக்காக வாதாடும் போதும் சரி, இருளர் சமூகத்தினருக்கு ஏற்பட்ட அவலத்தைக் கண்டு கண்களில் வலிகளைக் கடத்தும் இடத்திலும் சரி… இரு வேறு எக்ஸ்ட்ரீம் சென்று நடித்திருக்கிறார் சந்துரு, ஸாரி சூர்யா. வாழ்த்துகள் சாரே.
படம் முடிந்த பிறகு எண்டு கிரெடிட்ஸில் சுற்றுப்புற இருளர் மக்கள் என அந்த சமூகத்தினரை சேர்ந்த பலரின் பெயர்கள் வருகிறது. அந்த அத்தனை பேரும் பாராட்டுக்கு உரியவர்கள். படம் வெளிக்கொண்டு வர நினைத்த நிஜமான வலி, வேதனையைக் கடத்துபவர்கள் அவர்கள்தான். ஒவ்வொருவரும் அதிகார வர்க்கத்தாலும், மேல்மட்டத்தில் இருக்கும் ஆதிக்க வர்க்கத்தாலும் அனுபவித்த கொடுமைகளை ஒரு காட்சியில் சொல்வார்கள். அந்த இடத்தில் கண்கள் தன்னால் வியர்க்கிறது.
காவல்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அப்படி கெட்டவர்களாக காட்டப்பட்ட ரோலில் எஸ்.ஐ குருமூர்த்தி (தமிழ்), வீராசாமி (சூப்பர்குட் சுப்பிரமணி), கிருபாகரண் (பாலஹாசன்) ஆகிய மூவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த எரிச்சல் மூட்டும் கதாபாத்திரத்தை அடித்து நொறுக்கி உள்ளார்கள். அதேபோல் `எல்லா போலீஸும் கெட்டவங்க இல்ல’ என்ற கோட்பாடுக்கு ஏற்ப பிரகாஷ்ராஜ், தனது சென்சிட்டிவ் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
`சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் அறிமுகமான லிஜோமோலுக்கு இது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். அதற்கான நியாயத்தை செய்ய முயற்சித்திருந்தாலும், சில இடங்களில் இவரது அழுகையும் ஆர்ப்பாட்டமும் இது சினிமாதான் என்ற நிதர்சனத்துக்கு கொண்டு வந்துவிடுகிறது. இருப்பினும் பர்ஃபாமன்ஸாக அவருக்குக் கொடுக்கப்பட்ட லைனுக்கும் மேலேதான் செய்திருக்கிறார். இன்னொரு பக்கம் இந்த மொத்த படத்தின் கருவுக்கும் உயிர் சேர்க்கும் ராசாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன். மனைவி, மகள், வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பாசம் வெளிப்படுத்தும்போதும், போலீஸாரின் வன்முறைக்கு சிக்கும் அப்பாவியாகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சூர்யாவுக்குப் பிறகு படத்தின் நாயகர்கள் கலை இயக்குநர்கள்தான். அருள்குமார், சண்முகம், தேவராஜ், வீரமணி கணேசன், பாலாஜி, நித்யானந்தம் என பெரும்படையே படத்தின் கலைக்காக வேலை செய்திருக்கிறது. இந்த அபார உழைப்பு படத்தில் தெள்ளத் தெளிவாய் தெரிகிறது. நீதிமன்றம், இருளர் சமூக மக்கள் வாழும் பகுதி, காவல்துறை என படத்தை நம்பகத்தன்மையின் உச்சிக்கே அழைத்து செல்கிறது ஆர்ட் டிப்பார்ட்மென்ட் வொர்க். கோலி சோடா, டைப்ரைட்டர், சூர்யா வீடு, பேக்குகள் என சின்ன சின்ன டிடெயிலிங் கூட படத்திற்கு அழகும், ஆழமும் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரின் வொர்க்கும் கவனிக்கத்தக்கது. லாக்கப் காட்சிகளில் தொடங்கி நீதிமன்றக் காட்சிகள் வரை சுற்றிச் சுழன்று வேலை செய்திருக்கிறார். பொதுவாக இதுபோன்ற கதைக்களம் கொண்ட படத்தில் புகுந்து விளையாடக்கூடியவர் என்பது நன்றாகவே தெரிந்த ஒன்று. அதை இந்தப் படத்திலும் கொஞ்சமும் பிசிறு இல்லாமல் செதுக்கியிருக்கிறது கதிரின் கேமரா.
0 Comments