ஜெயில்ன்னா ஜெயில்லேதான் இருக்கணுமா?! – ஜெயில் பார்க்கலாமா வேண்டாமா?

One Line

காவேரி நகரில் நகமும் சதையுமாக ஏரியாவில் சுற்றித் திரியும் மூன்று நண்பர்களின் வாழ்க்கைதான் ஜெயில்.

Streaming Link

Theater

Story Line

கர்ணா (ஜி.வி.பிரகாஷ்) சின்னச் சின்ன திருட்டுகளை செய்பவர். அவரது உயிர் நண்பன் ராக்கி (நந்தன் ராம்) ஏரியாவில் கஞ்சா விற்பவர். இன்னொருவர் கலை (பாண்டி). சாக்லெட் திருடிய குற்றத்திற்காக ஜெயில் சென்று வந்திருப்பவர். காவேரி நகரின் இளைஞர்கள் மீது பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளும் ஆய்வாளர் ரவி மரியா. இருப்பினும் கஞ்சா விற்று வரும் பணத்தில் பாதி பங்கு வாங்கி ஏரியா இளைஞர்களோடு சமரசமாய் போகக்கூடியவர். நன்றாக போய்க்கொண்டிருக்கும் அந்த மூவரது வாழ்க்கையில் திடீரென ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது. விளைவாக ஒருவர் கொல்லப்படுகிறார், ஒருவர் ஜெயிலுக்குள் செல்கிறார், ஒருவர் விடை தேடி வெளியே அலைகிறார். இதுதான் படத்தின் கதை.

கண்ணகி நகரை காவேரி நகர் என்று பெயர் மாற்றம் செய்து அந்த பகுதி மக்களின் வாழ்வியலை சொல்ல முயற்சி செய்திருக்கும் படமே ஜெயில்.

WoW Moments 🤩

  • ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பேச்சிலர் படம் முடித்த கையோடு ஜெயில் ரிலீஸானது. இரண்டு படத்திற்கும் நடிப்பு எப்படி தேவைப்பட்டதோ அப்படி நடித்திருக்கிறார் ஜிவி. பேச்சிலர் படத்தின் வசனங்கள் அரை பக்கத்தில் முடிந்திருந்தால் இந்தப் படத்தில் கேரக்டருக்கு ஏற்ப பக்கம் பக்கமாய் பேசியிருக்கிறார். நடிகராகவும் அப்க்ரேடு ஆகிக்கொண்டே வருகிறார் ஜி.வி.பி.
  • அபர்ணதி, நந்தன் ராம், பசங்க பாண்டி, ரவி மரியா போன்ற மற்ற கதாபாத்திரங்களும் சரியான தேர்வு. வாயைத் திறந்தால் மூடுவேனா என்றிருக்கும் அபர்ணதி, ‘எங்க புள்ளீங்க எல்லாம் பயங்கரம்’ என்று தவுலத்தாக சுற்றும் நந்தன் ராம், ஏரியா பெயரை சொன்னால் வேலை தர மறுக்கிறார்கள் என்பதால் பொய் சொல்லி வேலை பார்க்கும் அப்பாவி கலை, தனக்கு தேவையானது கிடைக்க என்ன வேணாலும் செய்யும் போலீஸ் ரவி மரியா என அனைவருமே ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

AWW Moments 😫

  • நடிப்பாகத்தான் படம் கவர்கிறதே தவிர படம் பேசும் அரசியல் அபத்தமாகவே தெரிந்தது. இன்ட்ரோ காட்சியில் ஒரு பெண்ணின் கழுத்தில் கத்தி வைக்கும் கர்ணாவை ‘சின்ன திருடன்’ என்று லேபில் செய்வது, எதற்கெடுத்தாலும் போலீஸ், ‘காவேரி நகர் பசங்களை தூக்கி உள்ள போடுங்கடா’ என்பது போல் சித்தரிப்பது, பொய் சொல்லி வேலைக்கு சேர்ந்த கலையை பத்தி பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம், ‘திடீர்னு எவன் கழுத்தையாவது இவன் அறுத்துப்போட்டா என்ன சார் பண்ணுவீங்க, விசாரிக்க மாட்டீங்களா’ என்று சொல்வது போன்ற பல காட்சிகள் படம் நெடுகவே இருந்தது. இப்படி பயப்படும்படியாக அவரது வாழ்க்கையை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்.
  • சென்னையின் பூர்வகுடிகள் ஒரு இடத்தில் தஞ்சம் புகுந்தத்தால் அவர்கள் அனுபவிக்கும் சிரமங்களைப் பற்றிதான் இயக்குநர் வசந்தபாலன் படத்தின் ஆரம்ப வாய்ஸ் ஓவரில் சொல்கிறார். அப்படி அவர்களின் பிரச்னைகளை பிரதானமானதாக எடுத்துக்கொண்டு கதை அப்படி நகரும் என்று எதிர்பார்த்தால் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் வேறு எங்கோ நகர்கிறது படத்தின் திரைக்கதை. வெவ்வேறு குப்பத்தை சேர்ந்த மக்கள் ஒன்றாக வசிக்கும் இடம்தான் கண்ணகி நகர். இதைப் பற்றி பல விவாதங்களும் கிளம்பியிருக்கிறது. இதற்கான தீர்வாக படம் எடுக்கப்பட்டிருந்தால், வசந்தபாலன் சொன்னதற்கு ஏற்ப படத்தின் இறுதியில் விடை சொல்லியிருந்தால் ஒரு நல்ல படமாக ஜெயில் இருந்திருக்கும்.
  • சரி அரசியல் தவிர்த்து ஒரு படமாக ஜெயில் இருந்ததா என்றாலும் இல்லை. கர்ணாவின் அம்மா இறக்கிறார். அப்போது போதையில் மட்டையாகி இரண்டு நாள் கழித்து எழுந்த கர்ணாவிடம் அதை சொல்லும்போது அதன் தாக்கத்தை நம்மால் உணரவே முடியவில்லை. ஜி.வி – அபர்ணதி காதல் காட்சிகளும் ஓவர் டோஸாகவே இருந்தது. ஆரம்பத்தில் செய்யும் சில சேட்டைகள், ரொமான்ஸ்கள் ரசிக்கும்படியாக இருந்தாலும் நண்பன் இறந்த பிறகும்  அது நீண்டு கொண்டே வருவது சோர்வு.

Verdict

அந்தப் பகுதி மக்களின் வாழ்வியலை எடுத்துச் சொல்லி சென்டிமென்ட்டில் சிக்ஸர் அடித்திருந்தால் ஜெயில் தவிர்க்க முடியாத படைப்பாகியிருக்கும்.

Similar Movies to Watch

  • வடசென்னை
  • மெட்ராஸ்
  • கோடியில் ஒருவன்

Rating

Direction

2.5/5

Casting

3/5

Music

3/5

Screenplay

2/5

Editing

2/5

Overall Rating

2.5/5