• குருதி படர்ந்த கதை; ஆனால் அரசியல்?! ‘குருதி’ பார்க்கலாமா வேண்டாமா?

  One Line

  நிலச்சரிவில் தனது மனைவியையும் மகளையும் பறிகொடுத்த இப்ராஹமின் வாழ்க்கையில் அடுத்ததாக மதத்தை வைத்து ஓர் இரவில் திடுக்கிடும் பல சம்பவங்கள் அரங்கேறுகிறது. இவரைத் துரத்தும் அந்த மத அரசியலில் இவரோடு சேர்த்து சிலரின் கதி என்னவானது என்பதே ‘குருதி’யின் மீதிக் கதை.

  Streaming Link

  https://www.primevideo.com/detail/Kuruthi/0G4Q0K4P37VVU8Y0FA4GZNCP7E

  Story Line

  மலைப்பிரதேசத்தில் ரப்பர் எடுக்கும் தொழில் செய்து வருபவர் இப்ராஹிம் (ரோஷன் மேத்யூ). அவர் பகுதியில் நடந்த நிலச்சரிவில் தனது மனைவியையும், பெண் குழந்தையையும் பறிகொடுத்து தனது அப்பா மூஸா (மமுக்கோயா) மற்றும் தம்பி ரசூலுடன் (நஸ்லென்) வாழ்ந்து வருகிறார். அதே போல் அந்த நிலச்சரிவில் தப்பித்த இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த சுமதியும் (ஸ்ரிண்டா) அவரது அண்ணன் மணிகண்டன் ஆச்சாரியும் (ப்ரேமன்) அதே பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். சுமதிக்கு இப்ராஹிமின் மீது காதல் மலர்ந்து இதை அவரிடமும் சொல்லியும் விடுகிறார். குடும்பத்தின் இழப்பில் இருந்து இன்னும் மீளாத இப்ராஹிம், அதை மறுத்துவிடுகிறார். சோகம், தயக்கம் என்று சென்றுகொண்டிருக்கும் இப்ரூவின் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக அடைக்கலம் தேடி சப் இன்ஸ்பெக்டர் சத்யா (முரளி கோபி) அவர் கைதி செய்த விஷ்ணுவோடு அரக்கப்பறக்க அவரது வீட்டில் ஒரு இரவு நேரத்தில் தஞ்சம் புகுந்துவிடுகிறார்கள். இவர்களை லயக்கோடு சேர்த்து உள்ளூரில் இருவரும் கொல்வதற்கு துரத்துகிறார்கள். இதற்கெல்லாம் பின்னால் இந்து – முஸ்லிம் என்கிற மத ரீதியான ஒரு சம்பவம்தான் இருக்கிறது. அது என்னவென்பதை குருதி படர்ந்து சொல்லியிருக்கிறது படம்.

  WoW Moments 🤩

  படம் ஆரம்பித்த 40 நிமிடங்கள் கழித்துதான் ப்ரித்விராஜ் வருகிறார். அதுவரை சாதாரணமாக நகரும் கதை, இவர் வந்ததும் பரபரக்கிறது. வெரைட்டியான பல ரோல்களில் நடித்து வரும் ப்ரித்விக்கு இந்த ரோல் மற்றொரு மைல்ஸ்டோன். தான் அனுபவித்த குரோதத்தை கண்களாலே வெளிப்படுத்துகிறார். தவிர, மதத்தை போற்றிப் பாடும் பல காட்சிகளில் க்ளாஸ் கலந்த மாஸோடு மிரட்டியிருக்கிறார். படத்திற்கு மிகப் பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது ப்ரித்வியின் நடிப்பு. போக, படத்தில் குறிப்பிட்ட சில வசனங்களை எழுதும்போது பேனா முனை கத்தி முனையாக மாறி ஷார்ப்பாக வெட்டியிருக்கிறது.

  படத்தின் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமனுஜமும் விஷுவலில் மிரட்டியிருக்கிறார். கேரளாவின் லேண்ட்ஸ்கேப்பை வைத்து இளைப்பாற்றுவதோடு படத்தின் பல ஆக்‌ஷன் காட்சிகளில் நம்மை பிரமிக்க வைக்கிறார். ரோஷன் மேத்யூவின் வீட்டில் ப்ரித்விராஜ் ஒரு ஸ்பீச் கொடுப்பார். அதில் ப்ரித்விராஜின் காதோரத்தில் ஆங்கிள் வைத்ததில் ஆரம்பித்து இடம்பெற்ற ஒவ்வொரு சண்டைக்காட்சிகளில் நடிப்பவர்களோடு இவரும் ஸ்டன்ட் செய்து தத்ரூபமாக படமாக்கியுள்ளார். முக்கால்வாசி கதை இரவில் நடப்பதால் அதை படம் பிடித்ததில் இவரும் இவரது கேமராவும் மிகுந்த அளவு உழைப்பை கொட்டியிருக்கிறது.

  ப்ரித்விராஜுக்குப் பிறகு ரோஷன் மேத்யூவிற்கு இந்தப் படத்தில் வெயிட்டான ரோல். ரொமான்டிக் டிராமா, த்ரில்லர் என கலந்துகட்டி நடித்து வருகிறார். இவரைத் தவிர இவரது தம்பியாக நடித்த நஸ்லென், ஸ்ரிண்டா, முரளி கோபி, சாக்கோ, சாகர் சூர்யா என அனைவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் சர்ப்ரைஸ் விஷயமாக அமைந்தது ரோஷன் மேத்யூவின் அப்பாவாக நடித்த மமுக்கோயாவின் சர்காஸ்டிக் நடிப்பு. சீரியஸான பல சீன்களை தனது ஒன்லைன் கவுன்டர்களால் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதுவும் தவிர க்ளைமாக்ஸின் இவருக்கான ஒரு மாஸ் சீனை நறுக்கென்று வைத்திருக்கிறார்கள்.

  AWW Moments 😫

  படத்தின் கதை ஆரம்பிக்க சற்றே தளர்ந்தது போல் இருந்தது. முழுக்க ப்ரித்விராஜின் பர்ஃபாமன்ஸை மட்டுமே நம்பி கதை எழுதி, அவர் வந்ததும் கதையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்ததைப் போல் தெரிந்தது. போக, படத்திற்கும் காட்சியோட்டத்திற்கு ஏற்ற மியூசிக் ஏதோ மிஸ்ஸிங் என்ற உணர்வை ஏற்படுத்தியது. அதே போல் சிறப்பாக முடிவுபெற இருந்த படத்தை மோடிவேஷனல் பாடல் ஒன்றை போட்டுவிட்டு சற்று ஸ்லோ செய்துவிட்டார்கள்.

  படத்தில் மத அரசியல் பேசியிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையும் இருக்கிறது. ப்ரித்விராஜுக்கு ஒரு பார்வை, ரோஷன் மேத்யூவிற்கு நடுநிலையான ஒரு பார்வை, திடீரென ட்விஸ்ட் கொடுக்கும் சுமதிக்கும் ஒரு பார்வை இருக்கிறது. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து அழுத்தமான ஒரு கருத்தை நறுக்கென்று பதிவிடவில்லையோ என்ற குழப்பம் ஏற்படுகிறது. சுமதிக்கு ஒரு கட்டத்தில் ப்ரித்விராஜை கொல்ல வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதை ஏன் இவர் செய்யவில்லை என்ற குழப்பமும் படம் முடிந்தவுடன் இல்லாமல் இல்லை.

  Verdict

  அரசியல் ரீதியாக பல குழப்பங்களை படம் ஏற்படுத்தினாலும் படத்தின் திரைக்கதை ஒரு பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. இதற்காகவே ‘குருதி’க்கு சியர்ஸ் சொல்லலாம்!

  Similar Movies to Watch

  • Jallikattu (Malayalam movie)
  • Kala (Malayalam movie)

  Rating

  Direction

  3/5

  Casting

  3.5/5

  Music

  2.5/5

  Screenplay

  3/5

  Editing

  3/5

  Overall Rating

  3/5