1972-ல் வெளியான `தி காட் ஃபாதர்’, 1987-ல் மணிரத்னம் இயக்கிய `நாயகன்’ படத்தின் சாயலைக் கொண்ட ஒரு படம்தான் `மாலிக்’. கேரளாவில் 2009-ல் நடந்த பீமாப்பள்ளி கலவரத்தை மையமாக வைத்துதான் இதன் கதை எழுதப்பட்டிருக்கிறது. 1960-ல் இருந்து இதன் கதை பயணிக்கிறது. பீமாப்பள்ளியில் மதத்தை வைத்து போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர், 27-க்கும் மேல் படுகாயம் அடைந்தனர். இதை கருவாகக் கொண்டுதான் படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் மகேஷ் நாராயணன். திருவனந்தபுரம் அருகே ராமதாபள்ளி எனும் கடலோரப் பகுதிக்கு குடியேறி மீனவராக தனது தொழிலை தொடங்குகிறார் சுலைமான் (ஃபகத் ஃபாசில்). மீன் பிடிப்பதில் ஆரம்பித்து அங்கு வரும் டூரிஸ்ட்களுக்கு கஞ்சா விற்பது, சின்ன சின்னதாக ஸ்மக்லிங் செய்வது என அவரின் நண்பர்கள் டேவிட் (வினய் ஃபோர்ட்), பீட்டர் (தீலீஷ் போத்தன்), அபுபக்கர் (தினேஷ் பிரபாகர்) ஆகியோரின் உதவியுடன் வளர்ந்து கொண்டே போகிறார் சுலைமான். அதோடு சேர்த்து புதிதாக மசூதி கட்டுவது, அருகே பள்ளிக்கூடம் கட்டுவது என அந்த ஊர் மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்காகவும் போராடுகிறார். தான் ஒரு உயர்ந்த இடத்தில் இருந்தால்தான் நம்முடைய குரல் ஓங்கி ஒலிக்கும் என்பதை உணர்ந்து ஒரு மிகப் பெரிய ஆளுமையாக மாறுகிறார். அவரை கொல்வதற்காக பல பேர் சதித் திட்டம் தீட்டுகின்றனர். தவிர, அவருக்கே சில இழப்புகளும் ஏற்படுகிறது. அது என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து அவிழ்கிறது `மாலிக்’.
0 Comments