சூப்பர் ஸ்டாரின் ரசிகையான மீனாட்சியும், படம் பார்த்தாலே தூங்கிவிடும் சுந்தரேஷ்வருக்கும் நடக்கும் காதல் கலாட்டாதான் `மீனாட்சி சுந்தரேஷ்வர்’ படத்தின் கதையம்சம்.
கதை மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்பு தொடங்குகிறது. மொழி பிரச்னை மாநிலங்கள் கடந்து படங்கள் வாயிலாகவும் நம்மை டார்ச்சர் செய்வதை சமீபகாலமாக பார்க்க முடிகிறது. சரி கதைக்கு வருவோம். `பெல்லி சூப்புலு’ பட ஸ்டைலில் வீடு மாறி பெண் பார்க்க வந்திருக்கும் சுந்தரேஷ்வரை ஏதோவொரு ஈர்ப்பின் காரணமாக கல்யாணம் செய்துகொள்கிறார் மீனாட்சி. கல்யாணம் ஆன அடுத்த நாளே சுந்தர் தன்னுடைய வேலையின்மையைப் போக்க பெங்களூர் சென்றுவிடுகிறார். இந்தப் பக்கம், தான் புகுந்த வீட்டில் கூட்டுக் குடும்பத்தால் ஏற்படும் இன்னல்களுக்கு ஆளாகிறார் மீனாட்சி. மீனாட்சியும் சுந்தரும் ஒருவருக்கொருவர் நேரெதிர் கேரக்டர். மீனாட்சிக்கு சூப்பர் ஸ்டார் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டுமானால், சுந்தருக்கு படம் பார்த்தாலே தூக்கம் வந்துவிடும். மீனாட்சி புத்தகப்பிரியர் என்றால், சுந்தர் புத்தகத்தை புக் கிரிக்கெட் விளையாடப் பயன்படுத்துவார். இவர்கள் இருவரும் Long distance ரிலேஷன்ஷிப்பை எப்படி கையாண்டு வாழ்க்கையில் கரம்பிடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
WoW Moments 🤩
புரொடக்ஷன் வேல்யூவாக படம் பெரியது என்பதால் படத்தின் விஷுவல் வேறு தளத்தில் உள்ளது. பொதுவாக மதுரை என்றாலே தமிழ் சினிமாவில் அதன் மண்ணின் தன்மையை வைத்து எடுத்திருப்பார்கள். ஆனால் இதில் அப்படியில்லாமல் மதுரையை அழகயிலோடு காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டிபோஜீத் ரே. ஆர்டிஸ்ட்கள் அணிந்திருக்கும் காஸ்டியூமோடு விஷுவலைப் பார்க்கும்போது வாவ் சொல்ல வைக்கிறது (ஃபேன்டசி மனநிலையில் பார்ப்பவர்களுக்கு மட்டுமே).
ஜஸ்டின் பிரபாகரனின் மியூசிக் படத்திற்கு மிகப் பெரிய பலம் சேர்த்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு பாடலுமே வருடிக்கொடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது. தவிர காட்சியின் தன்மைக்கேற்ப பின்னணி இசையிலும் மிளிர்கிறார் ஜஸ்டின்.
லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் வரும் பிரச்னைகளுக்கு ஓரளவு நியாயம் சேர்த்திருக்கிறது சன்யா மல்ஹோத்ரா – அபிமன்யு தஸ்ஸானி காம்போவின் நடிப்பு.
AWW Moments 😫
பாலிவுட் படைப்பாளிகள் எந்த மனநிலையில் மதுரையில் இப்படி ஒரு கதையை யோசித்தார்கள் என்பது புரியவில்லை. சொன்னது போல் தமிழ் இந்தி கலந்து படத்தை எழுதியிருக்கிறார்கள்.10 இந்தி வார்த்தைகளுக்கு மத்தியில் வலுக்கட்டாயமாக பேசப்படும் ஒரு தமிழ் வார்த்தை படத்தின் தன்மையை மதுரை மண்ணில் ஒட்டவைத்துவிடுமா?
சரி இது ஒரு செமி ஃபேன்டசி படம் என்று மனதை கல்லாக்கிக் கொண்டு கதையின் முக்கிய சாராம்சத்தை அணுகினாலும், செவ்வாழையில் பஜ்ஜி, கறி தோசைக்கு ஜிகர்தண்டா, தமிழ்நாடு என்றாலே ரஜினிதான் போன்ற மதுரை மண் சார்ந்த விஷயங்களைப் பார்க்கும்போது, `என்னடா இது மதுரக்காரய்ங்களுக்கு வந்த சோதனை’ என்றுதான் தோன்றுகிறது.
மதுரை, கல்யாணம், அங்கிருக்கும் சாப்பாடு என்று படத்தில் காட்ட முற்படும்போது தமிழர்களின் கலாசாரம் சார்ந்த விஷயங்களும் கேள்வியாக எழுகிறது. இதை வடக்குப் பக்கம் அவர்களது மண்ணிலேயே அவர்களின் கலாசாரத்தோடு எடுத்திருந்தால் நல்ல ஒரு காதல் படமாக வந்திருக்கக்கூடும். ஆனால், மதுரையில் இப்படியான புரிதலின்மையோடு படம் எடுத்திருப்பது இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று வேடிக்கையாக உள்ளது.
வெறும் ஜோடனைக்காக 10 தமிழ் வார்த்தைகளை வைத்துக்கொண்டு இதை தமிழ் ரசிகர்களுக்கு புகுத்த நினைத்திருப்பது என்னவென்றே புரியவில்லை. அரைகுறையாக இருந்தால் ஆஃப் பாயில் என்று சொல்லலாம். பச்சை முட்டையை கொடுத்து சூப்பராக வெந்த ஆம்லெட் என்று சொன்னால் நியாயமா டைரக்டர் பையா.
Verdict
மதுரைப் பக்கம் வராமல் அங்கே எங்காவது எடுத்திருந்தால், தமிழ் ரசிகர்களாகிய நாங்கள் படத்தோடு பயணித்திருப்போம்.
0 Comments