• `எலிமினேட் ஆனா Death தான்!’ – நெட்ஃபிளிக்ஸின் `Squid Game’ எப்படியிருக்கிறது?

  One Line

  6 ரவுண்டு… 456 விளையாட்டு வீரர்கள்… கொரியா மதிப்புப்படி தலைக்கு 100 மில்லியன் என வெற்றி பெறுபவர்களுக்கு 45.6 பில்லியன் பரிசு பொருள்… இந்திய மதிப்பு, அமெரிக்க மதிப்புப்படி நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பணம் இது. பரிசுப்பணம் எவ்வளவு அதிகமோ அதைக்காட்டிலும் அதை விளையாடும் முறையும், தோற்றுவிட்டால் பெறும் தண்டையும் அதிகமோ அதிகம். சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ஸ்க்விட் கேம் சீரிஸின் ஒரு வரிக் கதை இது!

  Streaming Link

  Story Line

  முன் குறிப்பு : வன்முறையும், கோரக் காட்சிகளும் படர்ந்து இருப்பதால் இது முழுக்க முழுக்க 18+ பார்க்க வேண்டிய சீரிஸ்.
  கதை நாயகன் Seon Gi-hun. ஊரெங்கும் கடன், சூதாட்டம், போததற்கு மனைவியை விவாகரத்து செய்து, தனது அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால், மனதளவில் மனிதநேயம் உள்ள மனிதர். ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் வெறுப்பு நிலைக்கு செல்லும் இவரைத் தேடி ஒருவர் வருகிறார். சாதாரண ஒரு விளையாட்டை விளையாடும்படி கேட்கிறார். ஹீரோ ஜெயித்தால் ஓரளவுக்கு போதுமான பணம் கொடுப்பதாகச் சொல்கிறார் அந்த விளையாட்டை விளையாடக் கேட்டவர். இதுவே அவர் ஜெயித்தால் ஹீரோவை பளாரென ஒரு அரை விட்டுக்கொள்கிறேன் என்று மட்டும் கேட்கிறார். பல முறை முயன்றும் ஹீரோவால் ஒரு ரவுண்டில் கூட ஜெயிக்க முடியவில்லை. கடைசியாக ஒரே ஒரு ரவுண்ட் ஜெயித்து பணத்தைப் பெறுகிறார். `இதே மாதிரி விளையாடி பல மில்லியன் ஜெயிக்கணும்னு ஆசை இருந்தா இந்த நம்பர்க்கு போன் பண்ணு’ என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார் அந்த விளையாட வந்தவர். பல பிரச்னைகளுக்கு பணம்தான் தீர்வென்று அந்த விளையாட்டை விளையாடும் தீவுக்கு மயக்க மருந்து கொடுத்து அழைத்து செல்கிறார்கள்.
  அங்கு சென்று பார்த்தால் 455 பேர் இவரைப்போலவே இருக்கிறார்கள். தலையும் புரியாமல் வாலும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் போது ஒருவித பரபரப்பு ஏற்படுகிறது. அதன் பின்னர் அனைவரும் செட்டில் ஆகும் சமயத்தில் முதல் விளையாட்டு ஆரம்பிக்கிறது. நாம் சிறு வயதில் திரும்பி நின்று, `அண்டர் ஓவர் நவம்பர், டிசம்பர்’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்கும்போது யாரும் அசையக்கூடாது. அந்த கேம் ஞாபகம் இருக்கிறதா. அதுதான் அந்த விளையாட்டு. என்ன ஒன்று வேறொரு ஆளுக்குப் பதிலாக ஒரு ராட்சத மிஷின் நிற்கிறது. முதலில் சொல்லிவிட்டு அந்த பொம்மை திரும்பிப் பார்க்கிறது ஒருவித அமைதி. அதன் பின்னர் அசையும் ஏராளமான பேரை சுட்டு வீழ்த்துகின்றன அந்த ஏரியாவைச் சுற்றியுள்ள துப்பாக்கிகள். பேரமைதிக்குப் பின் பெரும் புயல் ஒன்று அடித்தது போல் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் பதறுகிறார்கள். ஆம். இதுதான் விளையாட்டு முறை. இப்படித்தான் அவர்கள் விளையாடும் 6 விளையாட்டு ரவுண்டுகளும் இருக்கும். கடைசியில் யார் ஜெயித்தார், எப்படி ஜெயித்தார், இப்படி ஒரு ஆபத்தான விளையாட்டின் பின்னணி என்ன என்பதை நின்று நிதானமாக கட்டவிழ்கிறது ஸ்க்விட் கேம். முதல் எபிசோடின் கதையைத்தான் அங்கும் இங்குமாக சொல்லியிருக்கிறேன். முழுவதையும் பார்த்து உய்யவும்.

  WoW Moments 🤩

  * இப்படி ஒரு வித்தியாசமான கதைக்களத்தை யோசித்த இதன் கிரியேட்டரான Hwang Dong-hyuk-க்கு வாழ்த்துகள். பல பல படைப்புகள் பார்த்து புளித்த நமக்கு வித்தியாசமான ஒரு ஜானரைத் தொட்ட ஆத்ம திருப்தி கிடைக்கிறது. இதுவே தற்போது இருக்கும் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவும் அமைந்துவிட்டது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் காலம் சென்று, ப்ரேக்கிங் பேட் காலம் சென்று, தற்போது மணி ஹெய்ஸ்ட், செக்ஸ் எஜுகேஷனில் வந்து நின்றது. இது முடிவதற்குள் வந்து நிற்கிறது இந்த ஸ்க்விட் கேம்.
  * இதன் படைப்பாளி இந்தக் கதையை 2009-ல் எழுதி முடித்துவிட்டு பல்வேறு தரப்பில் அதை தயாரிக்க கேட்டு யாரும் முன்வரவில்லை என்று ஒரு ஆர்டிகிளில் படித்தேன். ஒவ்வொரு கிரியேட்டரும் தங்களுடைய படைப்பை ஒரு குழந்தையாகத்தான் வளர்த்தெடுப்பார்கள். ஆனால், அதற்கு சரியான வழிகாட்டுதல் இல்லையென்றால் இந்த கிரியேட்டருக்கு நடந்ததைப்போல் இந்த படைப்பு வெளிவர 12 வருடங்கள் எடுத்திருக்கும். இதே நிலை மணி ஹெய்ஸ்ட்டுக்கும் ஏற்பட்டது. நெட்ஃப்ளிக்ஸ் வந்தது. தற்போதும் நெட்ஃப்ளிக்ஸ்தான் இதை முன் நின்று உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. கிரியேட்டருக்கும், இதில் நடித்தவர்களுக்கும், நெட்ஃப்ளிக்ஸ்க்கும் வாழ்த்துகள்.
  * ஒரு நல்ல படைப்பு ஹாலிவுட்டில் மட்டும் வருவதில்லை. உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் வரலாம். இதை பல வருடங்களுக்கு முன்பே உலக சினிமா பார்வையாளர்கள் புரிந்துகொண்டார்கள். எனக்குத் தெரிந்து, தற்போதுதான் சினிமாவுக்கான தேடல், ஒரு படைப்பு மொழிகளுக்கு அப்பாற்ப்பட்டது என்ற புரிதல் இப்போதுதான் பலருக்கும் வரத் தொடங்கியுள்ளது. ஸ்க்விட் கேமின் வெற்றி, வெறும் அதில் இடம்பெற்ற விறுவிறுப்புக்காக மட்டுமல்ல, அதில் இடம்பெற்றிருந்த எமோஷனுக்காகவும்தான்.
  * மொத்த படைப்பாக இது கொண்டாடப்பட வேண்டியது என்றாலும் எனக்கு பர்சனலாக மனதை வாட்டி வதைத்தது இதன் 6-வது எபிசோடு – Gganbu. இதற்கு அர்த்தம் நெருங்கிய நண்பன். இது வெளிக்கொண்டு வந்த உணர்வு, `இது ஸ்க்ரிப்ட் எழுதிதான் ஷூட் பண்ணிருக்காங்க’ என்ற எண்ணத்தைத் தாண்டி நம் மனநிலையை தலைகீழாகப் புரட்டிப் போட்டு கதறி அழ வைக்கிறது. இப்படி எமோஷனுக்கும் இதில் பஞ்சமில்லை, சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமில்லை.

  AWW Moments 😫

  * இதில் மேஜராக இரண்டு டிவிஸ்ட் இடம்பெற்றிருந்தது. அது இரண்டுமே எளிதில் கணிக்கக் கூடியதாக இருந்தது.

  Verdict

  இப்படிப் பல இடத்தில் நம்மை சீட்டின் நுனியில் வைத்திருக்கும் இந்த வெப் சீரிஸ் கட்டாயம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. கடைசி இரண்டு நாளாக இதைப் பற்றிய மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் பாப்புலர் லிஸ்ட்டிலும் முதல் இடத்தில் உள்ளது. சீக்கிரம் ரெண்டாவது சீஸன் வாங்கய்யா!

  Similar Movies to Watch

  • Money Heist

  Rating

  Direction

  4/5

  Casting

  4/5

  Music

  4/5

  Screenplay

  4/5

  Editing

  4/5

  Overall Rating

  4/5