சிரிப்பு, சிரிப்பு, சிரிப்பு ஒன்லி! – Kanakam Kaamini Kalaham பார்க்கலாமா, வேண்டாமா?!

One Line

ஒரு செட் தங்க/கவரிங் கம்மலை வைத்து ரகளையான காமெடி. இவ்வளவுதான் கதை.

Streaming Link

Story Line

சினிமாவில் நல்ல நடிகராக வேண்டுமென்ற நினைப்போடு கிடைக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட் கதாபாத்திரங்களில் நடித்து ஹோட்டல் ப்ளஸ் சினிமா ஆக்டிங் கிளாஸ் நடத்திக் கொண்டிருப்பவர் பவித்ரன் (நிவின் பாலி). இவரது மனைவி ஹரிபிரியா (க்ரேஸ் ஆன்டனி) பிரபலமான சினிமா நடிகை. கல்யாணத்துக்குப் பிறகு சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு வீட்டிலே இருக்கிறார். அம்மாவுடைய நகையை அடகு வைத்து மீட்காத கோபம், தன்னுடன் சரியாக நேரம் செலவிடாத காரணம், நடிக்கப்போவதாக சொல்லி வெட்டித்தனமாக ஊரைச் சுற்றுவது என ஹரிபிரியாவுக்கு பவித்ரன் மீது பல கோபம். சமாளிக்க முடியாத பவித்ரன், தங்கம் எனப் பொய் சொல்லி கவரிங் கம்மலை ஹரிபிரியாவுக்கு பரிசளிக்கிறார். ஒரு இக்கட்டான சூழலில் அந்த தங்கம் என்கிற கவரிங் நகையை அடகு வைக்கும் சூழல் ஹரிபிரியாவுக்கு ஏற்படுகிறது. அதை தடுத்து நிறுத்த மனைவியை மூணு நாள்கள் மூணார் டூர் கூட்டிப்போகிறார் பவித்ரன். ஹோட்டலில் தங்கும் சமயம் மனைவிக்கு தெரியாமல் கம்மலை இவரே எடுத்துவிட்டு, திருடுபோனதாக நாடகமாடுகிறார் அவர். கடைசியில் என்னவானது என்பதுதான் மீதிக்கதை.

WoW Moments 🤩

  • நிவின் பாலியை கடைசியாக மூத்தோன் படத்தில் பார்த்தது. இரண்டு வருடங்களுக்குப் பின் ஓடிடியில் வந்திருக்கிறார் இவர். ரகளையான ஒரு ஸ்க்ரிப்ட்டின் நாயகனாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் பாலி. இதுபோன்ற காமெடிகள் இவருக்கு கை வந்த கலைதான் என்றாலும் அதற்கு ஒரு படி மேலே சென்று இந்தப் படத்தில் பர்ஃபார்ம் செய்திருக்கிறார். நிவின் பாலி… அடி பொலி.
  • படத்தின் சர்ப்ரைஸ் எலிமென்ட் நடித்த மற்ற கதாபாத்திரங்கள். மனைவியாக நடித்திருந்த க்ரேஸி ஆன்டனியின் பதைபதைப்பு, வினய் ஃபோர்ட் ஒரு ஹோட்டல் மேனேஜராக சமாளித்த விதம், வின்சியின் attitude நடிப்பு, எழுத்தாளராக வந்தவர் என ஒவ்வொருவம் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். முக்கியமாக குடிகாரனாக நடித்த ஜாஃபர் இடுக்கி அதகளம் செய்திருக்கிறார். அவ்வப்போது மொத்த ஆர்டிஸ்ட்களையும் ஓரங்கட்டிவிட்டு மரண கலாய் செய்திருக்கிறார்.
  • இதில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் லேயர் லேயராக கதை எழுதியிருக்கிறார் ரத்தீஷ். வினய் ஃபோர்ட் போனிலே பேசி சமாளிக்கும் காமெடி, குடிகார ஜாஃபர் இடுக்கி அவர் ஒரு தனி டிராக்கில் போய்க்கொண்டிருப்பர், ரிசெப்ஷனிஸ்ட் ஷாலினி அவர் கோபத்துக்கான காரணத்தை சொல்வார், கிளைமாக்ஸில் வெடித்து பொங்கும் ஹரிப்பிரியா அவர் என்னவெல்லாம் இழந்தார் என்பதை உருக்கமாக பேசுவார். இப்படி ஒவ்வொரு கேரக்டருக்கு தனித்தனியே மெனக்கெட்டு பார்ப்பவர்களுக்கு எளிமையான முறையில் கடத்த ஸ்க்ரிப்ட்டையும், வசனத்தையும் எழுதியிருக்கிறார் இயக்குநர்.
  • டெக்னிக்கல் விஷயங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம். வினோத் இளம்பள்ளியின் கேமரா படத்தில் பிரதானமாக உள்ளது. படத்தின் பாதி கதை ஒரு ஹோட்டலில் நடக்கிறது என்ற அலுப்பை கொஞ்சமும் ஏற்படுத்தாமல் சுவாரஸ்யமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் அவர்.

AWW Moments 😫

  • பொதுவாக கிரேஸி மோகன் டைப் ஆஃப் ஒரு சினிமாவுக்கு எந்த மொழி படங்களிலும் வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் ஜதி ரத்னாலு படம் ஓரளவு நியாயம் சேர்த்திருந்தது. அதற்குப் பிறகு இந்தப் படத்தையும் சொல்லலாம். Comedy is serious business. காமெடி ஸ்க்ரிப்ட் பார்ப்பதற்கும், சிரிப்பதற்கும் எளிமையாக இருந்தாலும், அதை எழுதுவது கஷ்டம்தான். அப்படி எல்லோருக்கும் எளிதாக காமெடி வந்துவிடாது. ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் ரத்தீஷுக்கு இது கைவந்த கலையாக வருகிறது. அதைப் பயன்படுத்தி அட்டகாசமான ஒரு ரோலர் கோஸ்டர் வகையறா ஸ்க்ரிப்ட்டாக இன்னுமே மெருகேற்றி இருக்கலாம்.
  • படத்தில் குட்டி குட்டியாக நிறைய கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தது. சிலர் மட்டும் நம்முடைய கதாபாத்திரம் சின்னதுதானே என்கிற எண்ணத்தோடு நடித்திருந்தது நன்றாகவே தெரிந்தது. மற்றவர்களுக்கு ஈடு கொடுத்து அவர்களும் அதகள நடிப்பை வெளிப்படுத்தியிருந்தால் படம் தாறுமாறாக வந்திருக்கும்.
  • இசையமைப்பாளர் படத்தின் தன்மையை உணர்ந்து இன்னுமே உழைத்திருக்கலாம்.

Verdict

இந்த வீக் எண்டில் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க கனகம் காமினி கலஹம் சிறப்பான தரமான ஒரு சம்பவம்.

Similar Movies to Watch

  • Love Action Drama
  • Jati Ratnalu

Rating

Direction

4/5

Casting

3.5/5

Music

3/5

Screenplay

3.5/5

Editing

3.5/5

Overall Rating

3.5/5