`8 ஷூ-க்கு பாலிஷ் போடுற ராக்கி பாய் கதை இது இல்ல!’ – ராக்கி பார்க்கலாமா, வேண்டாமா?!

One Line

தான் அடியாளாக வேலைபார்த்த கேங்ஸ்டரின் மகனையே கொன்று, 17 வருடங்கள் சிறையில் அடைபட்டு ரிலீஸான ஒரு கைதியின் கதைதான் ராக்கி.

Streaming Link

Theater

Story Line

மணிமாறன் (பாரதிராஜா)  எனும் கேங்ஸ்டரிடம்அடியாளாக வேலை பார்ப்பவர் ராக்கி (வசந்த் ரவி). இளம் ரத்தம் என்பதால் வேகத்தோடும் துடிப்போடும் வேலை பார்த்தும் வரும் ராக்கி, ஒரு கட்டத்தில் மணிமாறனை எதிர்க்கிறார். எதிர்பாராத ஒரு சூழலின்போது மணிமாறனின் மகன் உதய் (ரஷிகாந்த்) ராக்கியின் அம்மாவைக் கொன்று விடுகிறார். பழிவாங்க நினைக்கும் ராக்கி, சாதாரணமாக நாம் விளையாட்டுக்கு சொல்லும் ‘குடலை உருவி மாலையா போட்டுடுவேன்’ எனும் வார்த்தையை நிஜத்தில் அவருக்கு செய்து அவர்  உதய்யின் சோலியை முடிக்கிறார். இதற்காக சிறைக்கு செல்லும் ராக்கி, 17 வருடங்கள் கழித்து திருந்தி வாழ நினைப்பதில் இருந்து தொடங்குகிறது கதை. இந்த 17 வருட இடைவெளியில் அவரது அக்கா தொலைந்து போக அவரைத் தேடும் ராக்கி, எதிர்பாராத ஒரு சூழ்நிலையின்போது மீண்டும் கத்தியைப் பிடிக்கிறார். அது எதற்காக என்பதுதான் ‘ராக்கி’யின் கதை.

முன் குறிப்பு : கனிந்த உள்ளம் கொண்டவர்கள் இந்த படத்தை பார்க்காதீங்க! 

WoW Moments 🤩

  • படத்தின் அடிநாதமே வன்முறைதான். அதை அத்தனை அழகியலோடு கையாண்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன். ‘8 ஷூவுக்கு பாலிஷ் போட்டாதான் பன்னு கிடைக்கும்’னு சொல்லி அடிச்சு வெளுக்குற ராக்கி பாய் மாதிரியான சண்டை இல்லாமல் நிஜத்தில் வன்முறை எப்படி நிகழுமோ அப்படியே அதைப் படமாக்கியிருக்கிறார். கத்தியும், சுத்தியும்தான் ராக்கியின் ஆயுதம். அதை வைத்து ஈவு இரக்கமின்றி ஒருவரை சரமாரியாக அடிப்பார். அப்போது சுத்தியலுக்கு வைக்கப்படும் டைட் ஷாட்டின் போது அடி வாங்கியவரின் சதை அதில் ஒட்டியிருக்கும். இப்படித்தான் படத்தின் வன்முறை இடம்பெற்றிருந்தது.
  • தியாகராஜன் குமாரராஜாவின் அசோசியேட் டைரக்டர் என்பதால் அவரது ஸ்டைலில் Philosophy-ம் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. படத்தின் கதையை ‘உன் அம்மா உன்ன ஏன் பெத்தா தெரியுமா?’, ‘கெட்ட கடவுள் நல்ல சாத்தான்!’, ‘நாட்டுக்குப் போகலாம்!’, ‘ஒரு கழுகு 100 முகம்’, ‘Seedless Dates’ என்று ஐந்தாகப் பிரித்து பக்காவான ஒரு நான் லீனியர் பாணியில் கதை சொல்லியிருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் படத்தில் பாய்ந்த கத்தியைவிட கூர்மையாக இருந்தது.
  • படத்தின் பின்னணி இசையில் விளையாடியிருக்கிறார் தர்புகா சிவா. கண்டிப்பான தியேட்டர் அனுபவப் படம் என்பதை தன்னுடைய இசையின் வாயிலாக உணர்த்தியிருக்கிறார் அவர். ஒரு இடத்தில் சண்டை காட்சியின்போது கிளாசிக்கல் ஸ்டைலில் பின்னணி இசையை அட்டகாசமாக அமைத்திருந்தார். அடுத்தது ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. வன்முறை, பின்னணி இசை, கதை, நடிப்பு ஆகிய விஷயங்களுக்கு உயிரோட்டமாய் அமைந்திருந்தது இவரின் ஒளிப்பதிவு.

AWW Moments 😫

  • முதல் பாதியின் திரைக்கதையில் லேசாக ஸ்பீடு குறைந்தது. இதுபோன்ற ஒரு கேங்ஸ்டர் கிரைம் படத்திற்கு அப்படியான ஒரு திரைக்கதை கொஞ்சம் தொய்வைக் கொடுக்கதான் செய்தது. அது மீண்டும் இரண்டாம் பாதியில்தான் வேகமெடுத்தது.
  • முழுக்க ஒரு சில கதாபாத்திரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது போலத் தெரிந்தது. ரோகிணி, ரவீனா ரவி ஆகிய கதாபாத்திரத்திற்கு வெயிட்டேஜ் ஏற்றியிருந்தால் வன்முறை ஒர்க் ஆனது போல எமோஷனும் நம்மை ஆட்கொண்டிருக்கும். அந்த இரு கதாபாத்திரஙகள்தான் படத்தின் கதையையே நகர்த்திச் செல்ல இருப்பது. ஆனால், அடர்த்தி இல்லாமல் குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக மட்டுமே அந்த இரு கதாபாத்திரங்களையும் பயன்படுத்தியதைப் போல இருந்தது.

Verdict

குருதி படர்ந்த பாதையில் ஒற்றை ஆளாகக் கத்தியும் சுத்தியும் வைத்துக்கொண்டு நடந்து வரும் ராக்கியின் வாழ்க்கையைக் கட்டாயம் தியேட்டருக்குச் சென்று பார்க்கலாம்.

Similar Movies to Watch

  • சூப்பர் டீலக்ஸ்
  • புதுப்பேட்டை

Rating

Direction

4/5

Casting

3.5/5

Music

4/5

Screenplay

4/5

Editing

4/5

Overall Rating

3.5/5